Tuesday 1 August 2017

வேலை வேண்டும் - கங்காருப் பாய்ச்சல்கள் (24)


இன்று நான் ஒரு நியூசிலாந்து நாட்டவரை---கிவி ஒருத்தரைச்--- சந்தித்தேன்.

தான் வெலிங்ரன் நகரில் இருந்ததாகவும் இங்கு வந்து ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டதாகவும் சொன்னார்.

என்னை வரவேற்ற முதல் நாடு நியூசிலாந்து. அமைதியான ஆரவாரமற்ற எங்குமே பசுமை நிறைந்த நாடு அது.

அவர் கடந்த நாலைந்து வருடங்களாக, வேலை வழங்கும் ஏஜென்சி மூலமாக தற்காலிக வேலைகள் பல செய்து வருவதாகச் சொன்னார். அவர் அப்படிப்பட்ட வேலைகளைத்தான் விரும்புவதாகவும் சொல்கின்றார்.

தான் இங்கு வந்து முதல் மூன்று நான்கு மாதங்கள் மிகவும் கஸ்டப்பட்டுப் போய்விட்டதாக கவலை கொண்டார். இது எல்லோருக்கும் பொதுவானதுதான்.

தான் ஒருநாள் முழுவதும் வேலை தேடிவிட்டு வந்தபோது, அவரது மனைவி கவலையால் கண்கள் கலங்கி அழுதாள். பின்னர் ஒருநாள் இவர் வேலை தேடச் சென்றபின்னர், அவர் அருகில் உள்ள இடங்களுக்கு ஒரு நடை நடந்து பார்த்தார். அப்போது ஒரு வயது முதிர்ந்தவர்களைப் பராமரிக்கும் இடத்தைக் கண்டு கொண்டார். தனது மனக்கவலைகளை ஒரு பேப்பரில் எழுதி, தனக்கு ஒரு வேலை தந்தால் மிகழும் மகிழ்ச்சி அடைவேன் என எழுது அங்கே ஒட்டிவிட்டு வந்துவிட்டார்.

என்ன அதிசயம், அன்று மாலையே அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு அந்த இடத்திலிருந்து வந்தது. இப்போது கடந்த நாலரை வருடங்களாக அவர் அங்கே நிரந்தரமாக முழுவேலை பார்த்து வருகின்றார்.

வேலை எடுப்பதற்கு இப்படியும் ஒரு வழி இருக்கின்றது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

தற்போதும் தான் தற்காலிக வேலையிலேயே இருப்பதாகவும், மனைவி நிரந்தர வேலையில் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

வயது முதிர்ந்தவர்களின் காப்பகம், பிள்ளைப் பராமரிப்பு, உணவகங்கள் போன்றவை என்றுமே நிலைத்திருக்கக்கூடிய வேலைகள் என்றேன். அவர் முகத்தில் மலர்ச்சி பொங்கியது.

No comments:

Post a Comment