Saturday 1 July 2017

சொல்லிவிடு! - கங்காருப் பாய்ச்சல்கள் (22)


ஒருநாள் மாலா தனது நண்பி சுகந்தியுடன் கலியாணவீடு
ஒன்றில் வெகு சுவாரஸ்யமாக உரையாடிக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் கெக்கட்டம் விட்டுச் சிரிப்பதை தூரத்தேயிருந்து கவனித்துக் கொண்டிருந்தாள் யோகராணி.

கலியாணவீட்டிற்கு வந்திருந்த ஒரு இளம்பெண்ணை, சுகந்திக்கு சுட்டிக்காட்டி மாலா கதைத்துக் கொண்டிருந்தாள்.

கலியாணவீடு முடிந்து வீடு திரும்பும்போது, மாலாவை யோகராணி கார்த் தரிப்பிடத்தில் சந்தித்தாள்.

”அப்பிடியென்ன சுகந்தியோடை பெரிய கெக்கட்டம் போட்டுச் சிரிச்சியள்?” – யோகராணி.

“உனக்குச் சொன்னால் என்ன! நான் உவள் உதயாவின்ரை மகளை என்ரை மகனுக்குக் கட்டி வைக்கப் போறன் எண்டு சொன்னனான்.” – மாலா.

“உனக்கென்ன விசரே! உவள் சுகந்தி ஒரு குழப்பல்காரி எண்டது உனக்குத் தெரியாதே! அவளிட்டைப் போயே உதையெல்லாம் சொல்லுவாய். இக்கணம் உன்ரை மகனுக்கும் உதயாவின்ரை மகளுக்கும் கலியாணம் நடந்த மாதிரித்தான்.”

“நானென்ன லூஸ் எண்டு நினைச்சியாக்கும். உனக்கொண்டு சொல்லுறன் காதோடை காதாய் வைச்சிரும். உவள் உதயா தன்னுடைய மகளுக்கு என்ரை மகனை மாப்பிள்ளை கேட்டு வரப்போகின்றாள் எண்டு சொல்லிக் கொண்டு திரியிறாளாம். எங்களுக்கு அவளின்ரை மகளிலை துண்டற விருப்பமில்லை. அதுதான் இப்பிடியொரு கதையை சுகந்தியிட்டைச் சொல்லியிருக்கிறன். இனி அவள் மிச்சத்தைப் பாத்துக் கொள்ளுவாள். குழப்போ குழப்பு எண்டு குழப்பி உதயாவை என்ரை வீட்டு வாசல்படிக்கே வராமல் செய்துவிடுவாள்” மாலாவின் கதையைக் கேட்டு மூக்கில் விரலை வைத்தாள் யோகராணி.

சொல்லிவிடு! அதன்பிறகு எல்லாம் சுபம்! சுபமே!!


No comments:

Post a Comment