Friday 26 January 2018

`பன்முகம்’ - நூல் அறிமுகம்

ஜெயராமசர்மா அவர்கள் பேராதனைப்பல்கலைக்கழக தமிழ் சிறப்புப் பட்டதாரி. அத்துடன் கல்வியியல் சமூகவியல் துறைகளில் டிப்ளோமா, கற்பித்தல் நுணுக்கத்தில் முதுதத்துவமானி பட்டங்களைப் பெற்றவர். இவர் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், தமிழ் – இந்து கலாசார விரிவுரையாளர், ஆசிரிய ஆலோசகர், வானொலி அறிவிப்பாளர் எனக் கடமை ஆற்றியுள்ளார்.

இதுவரை பதினொரு நூல்கள், இருபது நாட்டியநாடகங்கள், பத்து வில்லுப்பாட்டுகள், பல ஓரங்க நாடகங்கள், கோவில்களுக்கான திருப்பொன்னூஞ்சல்கள் எழுதியுள்ளார்.

Thursday 18 January 2018

உதவிக்கு ஒருவன், உளறுவதற்குப் பலர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

இரவு வேலைக்கு வரும்போது நண்பன் ராமின் கார் விபத்திற்கு உள்ளாகிவிட்டது. மனைவி தனது காரில் அவனை வேலை செய்யுமிடத்திற்குக் கூட்டி வந்திருந்தாள்..

அவனது நாட்டவர்கள் சூழ்ந்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.
வேலை தொடங்கிவிட்டமையால் விபரம் அறிய முடியவில்லை. அவனும் எனக்கொன்றும் சொல்லவில்லை.
ஓய்வு கிடைத்தபோது என்னிடம் வந்தான்.

“ஒருகிழமைக்கு வேலை முடிய என்னை வீட்டில் கொண்டுபோய் விடுவாயா நண்பனே? வரும்போது மனைவியுடன் வருவேன். நள்ளிரவில் மனைவியைக் கூப்பிட தயக்கமாக உள்ளது.”



Friday 12 January 2018

புதைகுழித் தோட்டம் (Sinkhole Garden)


ஊர் சுற்றிப் புராணம் – தெற்கு அவுஸ்திரேலியா

மவுன்ற் கம்பியர் (Mount Gambier) பிரதேசத்தில் பல நூற்றுக்கணக்கான குகைகளும் புதைகுழிகளும் காணப்படுகின்றன. சுண்ணாம்புக் கற்பாறைகள் காலத்துக்குக் காலம் கடல்நீரினாலும் மழை நீரினாலும் அரிக்கப்படுவதினால் இவை தோன்றுகின்றன.

இப்படிப்பட்ட புதைகுழியில் அமைந்த அதிசயமான நிலக்கீழ் தோட்டம் சண்கென் தோட்டம் (Sunken Garden). இதை அம்பேஸ்ரன் சிங்ஹோல் (Umpherston Sinkhole) என்றும் சொல்வார்கள்.
 

1864 ஆம் ஆண்டு ஜேம்ஸ் அம்பேஸ்ரன் என்பவர் மவுன்ற் கம்பியரில் ஒரு நிலப்பரப்பை வாங்கினார். அந்த நிலப்பரப்பில் இருந்த புதைகுழியை 1884 ஆம் ஆண்டு ஒரு அழகிய தோட்டமாக வடிவமைத்தார். ஆரம்பத்தில் இங்கே ஒரு குளமும் இருந்தது. 1900 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் அம்பேஸ்ரன் இறந்துவிட கவனிப்பாரற்றுக் கிடந்தது. 1949 வாக்கில் தெற்கு அவுஸ்திரேலியாவிற்கான மரம் மற்றும் காடு சார்ந்த திணைக்களம் அந்த நிலப்பரப்பை வாங்கி அதன் அருகில் ஒரு மரம் அரியும் தொழிற்சாலையையும் நிறுவியது. விவசாய நடவடிக்கைக்களால் நீர் வற்றிப்போக  குளமும் மறைந்துவிட்டது.

Friday 5 January 2018

நிறம் மாறும் ஏரி (BLUE LAKE)


ஊர் சுற்றிப் புராணம் – 
தெற்கு அவுஸ்திரேலியா

தெற்கு அவுஸ்திரேலியாவின் மவுன்ற் கம்பியர் பகுதியில் இந்த நீலநிற ஏரி(BLUE LAKE) அமைந்திருக்கின்றது. அடிலையிட்டிலிருந்து 4 மணி 30 நிமிட கார் ஓட்டத்தில் இந்த இடத்தை அடைந்துவிடலாம்.

எரிமலை வெடிப்பினால் உருவான பள்ளமாக இன்னமும் மவுன்ற் கம்பியரில் காட்சி தரும் இந்த ஏரி - மார்கழியில் இருந்து பங்குனி வரை நீலநிறமாகவும், சித்திரையிலிருந்து கார்த்திகை வரை கரும் சாம்பல் நிறமாகவும் காட்சி தரும். இந்த அதிசய நிறமாற்றம் ஏற்படுவதற்கு - எரிமலைப்படிவுகள், கல்சியம் கார்பனேற் மற்றும் ஏரியில் உள்ள நீரின் வெப்பநிலை மாற்றமடைதல் என்பவற்றைக் காரணமாகக் குறிப்பிடுகின்றார்கள்.

 

 

இந்த ஏரியில் இருந்துதான் நகரத்திற்கான குடிநீர் விநியோகமும் நடக்கின்றது. ஏறத்தாழ 72 மீற்றர் ஆழமும், 170 ஏக்கர் மேற்பரப்பையும் இது கொண்டுள்ளது. புரியாத புதிராக விளங்கும் இந்த ஏரி அற்புதமான அழகைக் கொண்டுள்ளது.

Monday 1 January 2018

கங்காருப் பாய்ச்சல்கள் (27)

சாகிறவன் சாகட்டும்
சமீபத்தில் ஒரு தமிழரின் அங்காடிக்கு சில பொருட்கள் வாங்கப் போயிருந்தேன்.

நான் அங்கே  சென்றபோது அப்போதுதான் கடையைத் திறந்து கொண்டிருந்தார்கள்.

நான் செய்த பிழை கடை திறக்கும்போது அங்கே போனதுதான். கடை திறந்து சற்று நேரத்தின் பின்னர் போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அவசரத்தில் உள்ளே நுழைந்துவிட்டேன்.

வாங்கவேண்டிய பொருட்களைக் கூடைக்குள் நிரப்பிக் கொண்டிருக்கும் போது ஒரு குரல் :

“அண்ணை… இதெல்லாம் expiry ஆகிப் போய்விட்டது” குளிரூட்டியைத் திறந்தபடி அங்கே  எடுபிடி வேலைசெய்யும் ஒருவன் முதாலாழியைப் பார்த்துச் சொன்னான்.

“எல்லாத்தையும் வெளியாலை எடுத்துப் போடு. வாங்கிறவன் வாங்கட்டும். விடுறவன் விடட்டும். சாகிறவன் சாகட்டும். வயித்தாலை அடிச்சுக் கிடக்கிறவன் கிடக்கட்டும்” என்றார் முதலாழி.

அவன் மறு பேச்சில்லாமல் குளிரூட்டியில் இருந்து அந்தக் குளிர்பானங்களை வெளியே எடுத்து அடிக்கி வைக்கத் தொடங்கினான். அவை சிறுசிறு பெட்டிக்குள் அடங்கிய குளிர்பானங்கள்.

என்னுடன் வேறும் சிலர் அங்கே நின்றிருந்தோம். முதலாழிக்கு அது பற்றிக் கவலை இல்லை.

சாகிறவன் சாக, பிழைக்கிறவன் பிழைக்கட்டும்.


எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. நான் நியூசிலாந்தில் இருக்கும்போது இப்படி expiry ஆன பொருட்களைக் கடையில் காண்பதில்லை. அப்படி யாராவது வைத்திருந்தால், அவர்களுக்கு தண்டப்பணம் அறவிட்டு கடையைச் சீல் செய்து விடுவார்கள். அவுஸ்திரேலியாவில் இப்படி பல கடைகளில் expiry ஆன பொருட்களை விற்பதை நான் கண்டிருக்கின்றேன்.