Thursday 26 October 2017

கார் காலம் - நாவல்

கார் காலம் - தொடர் கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது.


இது பற்றிய திரு குரு அரவிந்தன் அவர்களின் கருத்தை இங்கே தருகின்றேன்.



இது 29.09.2017 கனடா உதயன் பத்திரிகையில் வெளியானது.

உங்கள் கருத்துகளையும் அறியத்தந்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன்.



கார்காலம் தொடர்கதை பற்றிய கண்ணோட்டம்

(குரு அரவிந்தன்)

கே.எஸ்.சுதாகரின் கார்காலம் என்ற தொடர்கதை உதயன் பத்திரிகையில் வெளிவந்த போது பலராலும் பாராட்டப்பட்ட தொடராக இருந்தது. இலக்கியத்தில் உள்ள ஆர்வம் காரணமாக, இந்தத் தொடரைப்பற்றி வாசகர்களின் கருத்து என்ன என்பது பற்றி அறிந்து கொள்ள சிலருடன் உரையாட நேர்ந்தது. ‘உதயன் பத்திரிகை வாசிப்பீர்களா?’ என்று நூல் வெளியீட்டுக்கு வந்த மொன்றியல் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, ‘என்ன பயணக்கட்டுரை பற்றியா கேட்கிறீர்கள்?’ என்றார். ‘இல்லை கார்காலம் பற்றி’ என்றேன். ‘நல்லகதை, கெதியாக முடித்துவிட்டார்கள்’ என்றார். ‘தொடர்ந்து வாசிக்க முடியவில்லை, ஆனாலும் வாசித்த பகுதிகள் சிறப்பாக வாசகர்களை கவரும் வண்ணம் அமைந்திருந்தது’ என்று நண்பர் அகணி அவர்களைக் கேட்டபோது குறிப்பிட்டிருந்தார். நண்பர் அகணியும் ஏற்கனவே தொடர் நாவல் ஒன்று எழுதியிருந்தார். ‘பத்தொன்பது வாரங்களாக இரசித்து வாசித்தேன், அவுஸ்ரேலிய வாழ்க்கை பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது’ என்றார் பீல் பிரதேசத்தில் வசிக்கும் மங்கை என்ற இலக்கிய ஆர்வலர். ‘ஏன் இவ்வளவு விரைவாகக் கதையை முடித்து விட்டார்’ என்று இன்னுமொரு வாசகர் கேள்வி எழுப்பியிருந்தார். கதாசிரியரிடம் பதிலை எதிர்பார்க்காவிட்டாலும், எனது அனுபவம் என்வென்றால், ‘எந்தத் தொடரை அலுப்பில்லாமல் வாசிக்கிறோமோ அது விரைவாக முடிந்து விட்டது போலத்தான் தெரியும். நல்ல திரைப்படங்களும் அப்படித்தான்.’

Wednesday 18 October 2017

கார் காலம் - நாவல்


அதிகாரம் 13 - மாயா

ஆலின் தினமும் எழுதும் கொப்பியை டைரியை – யாரோ திருடி விட்டார்கள். ஹெவினும் அவளுமாக தொழிற்சாலைக் குப்பைக் கூடைகளைக் கிழறினார்கள். அவளது மூன்று வருடத் தேட்டம் தொலைந்து போயிற்று. அதை எடுத்த கடன்காரனை தனக்குத் தெரியுமென்று அன்று முழுவதும் திட்டியபடி இருந்தாள்.

அந்த டயரி – எத்தனை மனிதர்கள் அவளைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டார்கள் என்பதைக் கூறும்.
கிழவர் வலது புறமாகவும் ஆலின் இடது புறமாகவும் குப்பையை நோண்டினார்கள். கிழவருக்கு இருபது வருடங்களுக்கு முன்பு தொழிற்சாலையில் நடந்த விபத்தால் அங்கவீனமானவர். ஆலின் சமீபமாகத்தான் நொண்டுகின்றாள். சிலவேளைகளில் கழுத்து நோவும் அதனுடன் சேர்ந்து விடும். அழுது கொண்டே 'மெடிக்கல் சென்ரர்' போவாள். அங்கு அரை மணித்தியாலம் றிலக்ஸ் பண்ணிவிட்டு வரும் போது சிரித்தபடி வருவாள்.

Friday 13 October 2017

கார் காலம் - நாவல்


அதிகாரம் 12 - டயரிக் குறிப்புகள்

ஆலினை இப்பொழுது பலரும் கூறு போடத் தொடங்கிவிட்டார்கள்.

நந்தனுக்கு அவள் மீதிருந்த பிடிமானம் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது.

அப்பொழுது ஃபுங் அங்கு வந்து சேர்ந்தாள். ரொப் கோற்றில் பெயின்ற் மணம் தனக்கு ஒத்துவரவில்லை என்பதைக் காரணம் காட்டி ‘எண்ட் ஒஃப் லைனிற்கு மாற்றம் கேட்டு வந்திருந்தாள்.

ஃபுங் தினம் ஒரு பெர்ஃவியூமுடன் வருவாள். தினம் அவள் போடும் ஹெயர் ஸ்ரைல் யாரையும் கவர்ந்திழுக்கும். ஒன்றுக்கு மூன்று வளையங்கள் காதில் தொங்கும்.

தொழிற்சாலை விதிகளின்படி ஓவரோல் ஒருவரின் மணிக்கட்டுவரை நீண்டிருக்க வேண்டும். ஆனால் புங் தன் ஓவரோலை முழங்கை வரையும் மடித்திருப்பாள். அப்படியே பாதங்கள்வரை நீண்டிருக்கவேண்டியதை இரண்டு மடிப்புகள் மடித்திருப்பாள். தொழிற்சாலைத் தொப்பியைக்கூட அணியமாட்டாள். குச்சி, நைக் போன்ற பிறாண்ட்நேம் தொப்பிகளைத்தான் அணிந்து கொள்வாள்.

அவளைப் பார்க்கும் ஒருவருக்கு நிட்சயமாக திரைப்பட நடிகை ‘ஷோபா வந்து போவாள். நந்தனுக்கும் ஷோபா கண்ணுக்குத் தெரிந்தாள்.

Wednesday 4 October 2017

கார்காலம் - நாவல்


அதிகாரம் 11 -  கிழவன் நடனம்

ஆலினும் நந்தனும் இப்பொழுது எண்ட் ஒஃப் லைன் பகுதியில் வேலை செய்தார்கள்.

ஹெவின் குறூப் லீடர். நந்தனும் பெளசரும் ரீம் லீடர்கள்.

இவர்களுக்குக் கீழே 18 பேர்கள் வேலை செய்தார்கள்.

நந்தன் அங்கு ரீம் லீடராக வந்தபோது, அவனது வருகையைக் கொண்டாடும் முகமாக பாம் ஒரு பாட்டுப் பாடினான். அந்தப்பாடலில் புங்கை நந்தனுடன் இணைத்து தனது வியட்நாம் மொழியில் பாடியிருந்தான். வியட்நாம் மொழி தெரிந்தவர்களுக்குத்தான் அதன் பூரண அர்த்தம் தெரியும். நந்தனுக்கும் ஓரளவு தெரிந்தது. தெரியத்தானே வேண்டும்.

விதி மக்காறியோவின் வடிவில் நந்தனின் திசையை மாற்றியது. அவன் இப்போது புங்கின் பக்கம் சாய்ந்துவிட்டான். புங் இப்பொழுதும் ரொப் கோற்றில் வேலை செய்தாள். அவளின் பிரிவால் நந்தன் தவிப்பதாக அந்தப் பாடல் அமைந்திருந்தது.

Sunday 1 October 2017

அனுபவம் புதுமை – சிறுகதை


செம்பியன் செல்வன் சிறுகதைப்போட்டி 2016 (ஆறுதல் பரிசு, ஞானம் சஞ்சிகை)

புரட்டாதி மாதம். சிட்னியில் குளிர் குறையத் தொடங்கிவிட்டது. மாலை நேரம். துவாரகன் தனது நண்பி லோறாவுடன் நியூமன் என்ற நோயாளியை சந்திக்கப் போயிருந்தான்.

துவாரகனும் லோறாவும் மருத்துவபீட இறுதிவருட மாணவர்கள். பேராசிரியர் நெயில் றொபின்ஷன் பாடமொன்றின்---long integrated population medicine (IPM)--- ஒப்படைக்காக மாணவர்களைப் பல குளுக்களாகப் பிரித்திருந்தார். . Choronic diseases – asthma, cancer, diabetes, heart diseases -  சம்பந்தமான நோயாளர்களை, வருடத்திற்கு குறைந்தபட்சம் பன்னிரண்டு தடவைகள் நேரில் சந்திக்க வேண்டும். நோயாளியுடன் கலந்துரையாடி குறிப்புகள் எடுக்க வேண்டும்.

இவர்கள் குழுவில் ஜொனதான், அன்டி நூஜ்ஜின், கான், ஜெசிக்கா, லோறா, ஜுவான் என மொத்தம் ஏழு பேர்கள் இருந்தார்கள். விரிவுரைகள் இல்லாத மாலை நேரங்களில் துவாரகனும் லோறாவும் நியூமனை சந்திப்பது வழக்கம்.