Tuesday 22 August 2017

பழமைக்கும் – புதுமைக்கும் பாலம் இடும் படைப்புகள்

 



கனடாவின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு, கனடாவில் வாழும் 15 பெண் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இத்தொகுப்பில் உள்ள கதைகளே முதல் சிறுகதைகள் என்று எடுத்துக் கொண்டால், இத்தொகுப்பு அவர்களுக்கொரு வெற்றி. தொடர்ந்து எழுதுவதற்கான ஒரு படிக்கல்.

தொகுப்பில் சிறுகதை என்னும் வடிவம் கைவரப்பெற்ற பல புதிய எழுத்தாளர்களின் கதைகளைக் காணக்கூடியதாக உள்ளது. சிவானி – மிருபா சிவசெல்வசந்திரன், மாலினி அரவிந்தன், காயத்ரி வெங்கடேஸ், திவாணி நாராயணமூர்த்தி போன்றவர்களின் கதைகள் அப்படிச் சொல்கின்றன. மற்றவர்களும் இன்னும் சற்றே சிரத்தை எடுத்துக் கொள்வார்களாயின், அவர்களாலும் நல்ல கதைகளைப் படைக்க முடியும் என்பதை இத்தொகுப்பில் உள்ள கதைகள் காட்டி நிற்கின்றன. இனி தொகுப்பில் உள்ள சிறுகதைகளைப் பார்ப்போம்.

Tuesday 15 August 2017

ரயில் ஸ்நேகம் - கங்காருப் பாய்ச்சல்கள் (25)


”மச்சான் நான் சிட்னி வந்திருக்கிறன். உன்னைப் பாக்க ஆசையாக இருக்கடா” நண்பன் தவராஜா சொல்ல, மறுமுனையில்

“எனக்கும்தானடா. ஒரு நாளைக்கு வா. சந்திப்போம்” என்றான் புவி.

25 வருடங்களுக்கு முன்னர், இருவரும் இலங்கையில் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

புவி அவுஸ்திரேலியா வந்து பத்து வருடங்கள். பெரிய வீடு வசதிகளுடன் இருக்கின்றான். தவராஜா வேலை நிமிர்த்தம் சிட்னி வந்திருந்தான்.

குறிப்பிட்ட நாளில் தனது வீட்டிற்கு அண்மையாகவுள்ள ஸ்ரேசனிற்கு வரும்படி சொன்னான் புவி.

Tuesday 8 August 2017

விளக்கேற்றுபவன் – சிறுகதை



”சிவராசனுக்கு கறன்ற் அடிச்சு பெரியாஸ்பத்திரியிலை இருக்கின்றாராம். நாங்கள் எல்லாரும் பாக்கப் போறம். கெதியிலை வெளிக்கிடு. அப்பா சந்தியிலை கார் பிடிக்கப் போயிட்டார்” அம்மா சொன்னார்.

நாங்கள் குடும்பமாக போவது என்றால் தான் அப்பா கார் பிடிப்பார். முன்னர் ஒரு தடவை ‘அன்னையும் பிதாவும்’ படம் பார்க்க அப்படிப் போயிருந்தோம்.

அமரசிங்கம் அண்ணையின் கார் வந்துவிட்டது. அப்பா சைக்கிளை காரின் மேல் போட்டுக் கொண்டுவந்தார்.

நான் காரின் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தேன். அப்பா முன் சீற்றில் இருந்தார். அமரசிங்கம் அண்ணைக்கும் சிவராசன் அண்ணையைத் தெரிந்திருந்ததால், அவரைப் பற்றிக் கதைத்துக் கொண்டு வந்தார் அப்பா.

”சிவராசன் குடிக்கிறவன் தான். ஆனால் ஒருநாளும் வேலைக்குப் போகும்போது குடிப்பவன் அல்ல. வேலைக்கும் நல்ல ஒழுங்கு. எனக்கென்னவோ சந்தேகமாத் தான் கிடக்கு”

“சந்தேகம் எண்டா?” அமரசிங்கம் அண்ணை கேட்க,

Tuesday 1 August 2017

வேலை வேண்டும் - கங்காருப் பாய்ச்சல்கள் (24)


இன்று நான் ஒரு நியூசிலாந்து நாட்டவரை---கிவி ஒருத்தரைச்--- சந்தித்தேன்.

தான் வெலிங்ரன் நகரில் இருந்ததாகவும் இங்கு வந்து ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டதாகவும் சொன்னார்.

என்னை வரவேற்ற முதல் நாடு நியூசிலாந்து. அமைதியான ஆரவாரமற்ற எங்குமே பசுமை நிறைந்த நாடு அது.

அவர் கடந்த நாலைந்து வருடங்களாக, வேலை வழங்கும் ஏஜென்சி மூலமாக தற்காலிக வேலைகள் பல செய்து வருவதாகச் சொன்னார். அவர் அப்படிப்பட்ட வேலைகளைத்தான் விரும்புவதாகவும் சொல்கின்றார்.

தான் இங்கு வந்து முதல் மூன்று நான்கு மாதங்கள் மிகவும் கஸ்டப்பட்டுப் போய்விட்டதாக கவலை கொண்டார். இது எல்லோருக்கும் பொதுவானதுதான்.