Tuesday 25 April 2017

தமிழால் உயர்ந்த உதயணன் (இராமலிங்கம். சிவலிங்கம்)

 

கடந்த வருட ஆரம்பத்தில் ’பின்லாந்தின் பசுமை நினைவுகள்’ என்ற புத்தகத்தை வாசித்திருந்தேன். உதயணன் என்னும் புனைபெயரைக் கொண்ட ஆர்.சிவலிங்கம் என்பவர் அதன் ஆசிரியர். கனடாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்திருந்த, பல்கலைக்கழகத்தில் என்னுடன் ஒன்றாகப் படித்திருந்த நண்பன்---ஆசிரியரின் மருமகன்--அந்தப் புத்தகத்தை எனக்குத் தந்திருந்தார்.

உதயணன் 1957 – 1980 காலப்பகுதிகளில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு, சிந்தாமணி, தினபதி மலர், சுடர், அஞ்சலி, கலைச்செல்வி, தமிழோசை, தமிழின்பம் போன்றவற்றில் எழுபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிக் குவித்தவர். கல்கி, குமுதம் போன்ற இந்திய இதழ்களிலும் சில படைப்புகள் வந்துள்ளன. கலைச்செல்வியில் ‘இதய வானிலே’, ‘மனப்பாறை’ ஆகிய நாவல்களும், வீரகேசரிப் பிரசுர நாவல்களாக ‘பொன்னான மலரல்லவோ’, ‘அந்தரங்ககீதம்’ (சில மாறுதல்களுடன் ’மனப்பாறை’) போன்ற நாவல்களையும் எழுதியிருக்கின்றார். மேலும் மித்திரன் நாளிதழில் ‘மனக்கோட்டை’ தொடர்கதை, சிந்தாமணியில் ‘கொடிமல்லிகை’ குறுநாவல் வந்துள்ளன. அத்துடன் நகைச்சுவைக் கட்டுரை, இதழியல், மொழிபெயர்ப்பு என்பவற்றிலும் சிறந்து விளங்குகின்றார்.
 

ஆரம்பத்தில் ஆசிரியராக நாவலப்பிட்டியிலும், பின்னர் அரசாங்க எழுதுவினைஞராக பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றினார். சில வருடங்கள் ஈராக்கில் பணி புரிந்தார்.

Wednesday 19 April 2017

கார்காலம் - நாவல்


அதிகாரம் 9 - இலையுதிர்காலம்

மரங்கள் எல்லாம் இலையை உதிர்த்துவிட்ட பின்னர் கிராமத்தைப் பார்க்க கவலையாக இருந்தது. எங்குமே சருகுகள் கொட்டி ஒரு பாழடைந்த பூமியாக இருந்தது.

ஆலின் மீண்டும் வேலைக்கு வந்தபோது அவளது வயிறு சிறிது உப்பி இருந்தது. வயிறு வளர, அவளின் தேய் பிறைக்காலம் ஆரம்பமாகியது. முன்பு போல அவளால் பூசி மினுக்கி வெளிக்கிட்டுவர முடிவதில்லை. அணியும் ஆடைகளிலும் ஆர்வம் காட்டுவதில்லை. நறுமணம் வீசாத உடல், கர்ப்பிணி என்ற முகப்பூச்சுகளற்ற ஒன்றால் மாத்திரமே மினுங்கியது. பிரா கூட அவள் அணிவதில்லை. அது சுயமாக அங்குமிங்கும் ஊஞ்சல் ஆடியது.

Wednesday 12 April 2017

தாடிக்கார ஆசாமி - குறும் கதை

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

தனது வீட்டுக் கராஜை அழகு நிலையமாக மாற்றி தொழில் செய்து கொண்டிருந்தாள் பிரவீனா.

ஒருநாள் தாடிக்காரர் ஒருவர் தன்னை அழகுபடுத்த அங்கே வந்தார்.

தலைமுடி வெட்டியாயிற்று. தாடியை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் போது பிரவீனா மயங்கிக் கீழே விழுந்தாள். தாடிக்காரர் எழுந்து ஒட்டம் எடுத்தார். மயக்கம் தெளிந்ததும்,

“அவர் எனது முன்னாள் காதலன்” என்றாள் பிரவீனா.



Tuesday 4 April 2017

கார்காலம் - நாவல்


அதிகாரம் 8 -  குண்டுப் பையனும் (Bomb boy), டாக்டர் பாமும்

பாம் போய் (குண்டுப் பையன்) பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பான். கொழுகொழுவென்ற முகமும் வெள்ளை வெளேரென்ற நிறமும் கொண்டவன். என்ன ஒரு குறை. அவனை அறியாமலே வாணம் விட்டுவிடுவான். Skunk  (பூனை போன்ற ஒரு விலங்கு) விட்டுத் தள்ளும் வீரியம் கொண்ட நாற்றம் போன்றது அது. அது அவனைச் சுற்றிப் பரவும்போது, வேலையை நிறுத்திவிட்டு  எல்லோரும் ஓடி விடுவார்கள்.

வேலை கடுமையான இடங்களில், வேலை செய்யப் பிடிக்காத இடங்களில் அவன் இப்படிப்பட்ட குண்டைப் போட்டுவிடுவதாக ஒரு வதந்தி உருவாகியிருந்தது. ஸ்மாட்டாகக் குண்டைப் போட்டு தப்பித்துக் கொள்கின்றான் என்றே எல்லாரும் நம்பினார்கள்.

அவன் அணியும் தொப்பியே வித்தியாசமானது. காது கழுத்து என்பவறையும் மூடிக் கட்டக்கூடியது அது. அவன் பொம் போடும்போது யாராவது சிரித்தார்களோ அல்லது ஏசினார்களோ எதுவுமே அவனுக்குக் கேட்பதில்லை.