Wednesday 2 November 2016

சிதைவுற்ற தங்கவயலும் ஜொஸ் இல்லமும் (2) - கட்டுரை

பென்டிக்கோ (விக்டோரியா, அவுஸ்திரேலியா) நோக்கிய ஒரு பயணம் - கட்டுரை



எங்கெங்கு சீனர்கள் இருந்தார்களோ அவர்களுக்கு அருகாமையில் ‘ஜொஸ் இல்லம்’ (JOSS HOUSE) இருந்தது. ‘JOSS HOUSE’---சீனர்களின் வழிபாட்டுத்தலம்---‘joss’ என்பது கடவுளைக் குறிக்கும் போத்துக்கல் சொல்லான ‘dios’ மற்றும் லற்றின் சொல்லான ‘deus’ இலிருந்து வழிவந்ததாகும்.

அந்தக்காலத்தில் பென்டிக்கோவில் இருக்கும் Emu point எனப்படும் பிரதேசத்தில் நான்கு ஜொஸ் இல்லங்கள் இருந்தன. தற்போது ஒரு ‘ஜொஸ் இல்லம்’ மாத்திரமே எஞ்சியிருக்கின்றது. இது உள்ளூரில் செய்யப்பட்ட செங்கற்களினாலும் மரத்தினாலும் ஆனது. வீரத்தின் அடையாளத்தைக் குறிக்கும் சீனர்களின் பாரம்பரிய நிறமான சிகப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது. இந்த ஆலயம் - மத்தியில் பிரதான மண்டபம், வலதுபுறம் மூதாதையர்களின் ஆலயம் (Ancestral Temple), மற்றும் பாதுகாப்பவரின் இல்லம் (Caretaker’s Residence) என மூன்று பகுதிகளைக் கொண்டது. இங்கு (ALTAR) பலிபீடம் இருக்கின்றது. கோவிலின் பிரதான தெய்வம் KWAN GUNG.


இது தற்போது பாதுகாக்கப்படவேண்டிய தேசியச் சொத்துக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இதே போல மேலும் இரண்டு ‘ஜொஸ் இல்லங்கள்’ விக்டோரியாவில் இருக்கின்றன. ஒன்று மெல்பேர்ண் நகரத்திலும் மற்றது தெற்கு மெல்பேர்ணிலும் உள்ளன.

இங்கே நான் பார்த்தவற்றில் இரண்டு விடயங்கள் என்னைக் கவர்ந்திருந்தன. ஒன்று இந்துக்கடவுள் படம். அந்தப்படம் தான் அங்கு வேலைக்கு வரும்போதே அங்கிருந்தத்தாக அவர் சொன்னார். மற்றது துணியினால் செய்யப்பட்ட குழந்தை ஒன்றின் உருவ பொம்மை. பிள்ளை வரம் வேண்டி தம்பதிகள் குடுத்துவிட்டுப் போனது. பின்னர் அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்து, அந்தத் தம்பதியினர் குழந்தை சகிதம் அங்கே வந்ததாகவும் அந்தக் குழந்தையின் மழலைச் சத்தம் ஜொஸ் ஹவுஸ் எங்கும் ஒலித்தத்தாகவும் அவர் சொன்னார்.

 

இந்த பென்டிக்கோ நகரம் பற்றியதான சுவையான ஒரு தகவலை எனது நண்பர் ஒருவர் சொன்னார். ஒருமுறை அவர் பென்டிக்கோ நகரத்தின் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். நள்ளிரவு நேரம் ஆற்றுநீர் சலசலத்துப் பாய்ந்து ஓடும் சத்தம் அவர் கட்டிலின் கீழே மெதுவாகக் கேட்டது. தூக்கம் கலைந்து, எழுந்தார். சத்தம் வரும் திசை நோக்கி காதைக் கூர்மையாக்கினார். எங்கோ ஒரு அடி ஆழத்தில் நிலத்தின் கீழ் இருந்து வரும் ஓசை போல் அது இருந்தது.

மறுநாள் ஹோட்டல் உரிமையாளரிடம் அதை அவர் விசாரித்தபோது, மேலும் பலர் அவ்வாறு சொல்லியிருப்பதாக அவர் சொன்னார். பழைய தங்கச்சுரங்கம் ஒன்று அருகாமையில் இருக்க வேண்டும், ஒருவேளை இந்தக் கட்டடத்திற்குக் கீழாக அதன் பாதையொன்று இருக்கலாம் என அவர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

No comments:

Post a Comment