Tuesday 13 September 2016

பொற்காலம் - கதிர் பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

6. முடக்கு வாதம்


யூனியன் கல்லூரி வளாகக் காணிக்கு முடக்கு வாதநோய் பிடித்திருக்கிறது. வைத்தியத்தால் தீர்க்கப்படாத பிரச்சினையாக அதன் வளாகம் அமைந்த காணி உள்ளது. அந்த வியாதிக்குப் புதிதாக எனது காலத்தில் இணைத்த திறந்தவெளி அரங்கப்பகுதி அமைந்த காணி அடங்காது. அது சுமார் எட்டுப் பரப்பு இருக்கவேண்டும். இப்பொழுது திறந்தவெளியரங்கு அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமான பனையடைப்பாக விருந்தது. அதனை வளாகத்தோடு இணைக்க ஒரு சந்தர்ப்பம் தேடிவந்தது. தெல்லிப்பழைக் கிராமச் சங்கம், சந்தியில் ஒரு நூல் நியைம் அமைக்க, யூனியன் கல்லூரிக்கு அங்கு இருந்த விடுதிக் காணியில் கிழக்கு வளத்தில் ஒரு காணித்துண்டு தரும்படி கேட்டார்கள். குறித்த பனையடைப்பை, உரிமையாளரிடம் விலைக்கு வாங்கி எமது கல்லூரிக்குத் தந்தால், தருவதாக ஒப்புதல் கொடுத்தேன். அவர்களே காணி கைமாறுவதைத் துரிதப்படுத்தினார்கள். பனையடைப்பு யூனியன் கல்லூரி வளாகத்துடன் இணைக்கப்பட்டது. பனைகளை வேரோடு சாய்த்துத் திறந்தவெளியரங்கு அமைத்த விறுவிறுப்பான மீதிக் கதை பின்னர் சொல்லப்படும்.

யூனியன் கல்லூரி வளாக நிலம் நான்கு துண்டங்களாகப் பிரிந்து கிடக்கின்றது. அதற்கு யார் காரணம்? புவனேஸ்வரி அம்பாள் ஆலையத்தைச் சூழ உள்ள பகுதியும், விளையாட்டு மைதானமும், தந்தை செல்வா பாடசாலைக் காணித்துண்டும் பிரதான வளாகத்தில் உள்ளன. தந்தை செல்வா அமைந்துள்ள காணி அதற்குச் சொந்தமானதல்ல. அங்கிருந்த தகரக்கூரைக் கட்டடத்தில் ஆரம்ப பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பொழுது, யூனியன் கல்லூரி வளாகத்திற்கு வெளியே புதிய நிலப்பரப்பு வாங்கி, அங்கு தந்தை செல்வா பாடசாலைக்குக் கட்டடம் அமைப்பதே நோக்கம் என்று எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ அ.அமிர்தலிங்கம் அவர்கள், காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினர், உறுதியாகச் சொல்லியிருந்தார். அவர் அதனை ஒரு மாதிரிப் பாடசாலை ஆக்கும் ஆர்வங்கொண்டிருந்தார். வளாகத்தின் வாயிலில் தேவாலயத்துக்குக் கிழக்கே உள்ள மாடிக் கட்டடம், இரண்டாவது நிலத்துண்டில் அமைந்துள்ளது. அது பிரதான வளாகத்திலிருந்து துண்டாடப்பட்டுள்ளது. அதற்கும் மேற்கேயுள்ள பிரதான வளாகத்துக்குமிடையில் நில இணைப்பு இல்லை. பிரதான வாளகத்துள் செல்லும் தேவாலயத்தின் பின்புறம் உள்ள வீதி, தேவாலயத்துக்குச் சொந்தமானது. மூன்றாவது நிலத்துண்டு வளாகத்தின் மேற்குப் புறத்தில், ஒழுங்கையின் மேற்கில் உள்ள –‘இரண்டாவது விளையாட்டு நிலம்’ என்று அழைக்கப்படும் காணித் துண்டு. –அது கல்லூரித் தேவைக்குப் பிரயோசனப் படாமல் உள்ளது. அதனைப் பாடசாலைப் பிரதான வளாக நிலப்பரப்போடு இணைக்க முயன்றோம். முயற்சி நிறைவேறவில்லை. நாலாவது நிலத்துண்டு வளாகத்துக்கு வெளியே, காங்கேசன்துறை-யாழ் வீதியைக் கடந்து நாற்சந்தியின் தென்கிழக்கு மூலையில் உள்ளது. அது அரசு பொறுப்பேற்க முன்னர் தேவாலயப் போதகர் வசித்த விடுதி அமைந்த காணி. 

வளாகத்துக்கு உள்ளேயே நிலம் தொடராக இல்லாமைக்கு சில சுத்துமாத்துக்களே காரணம். 1962இல் யூனியன் கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்றது. அப்பொழுது இத்தனை துண்டு நிலப்பகுதிகளாகக் கல்லூரி வளாகக் காணி சின்னாபின்னப்பட்டு இருக்கவில்லை. இன்று தேவாலயத்தின் சொந்தமாக உள்ள போதகர் வசிக்கும் விடுதிக் கட்டடமும், அதனைச் சூழ்ந்த மதிலினுள் அமைந்த நிலப் பரப்பும், அரசு பொறுப்பேற்ற பின்னர் யூனியன் கல்லூரிச் சொத்தாக இருந்தது. யூனியன் கல்லூரி வளாகம் ஒரே நிலப்பரப்பாக இருந்தது. தேவாலயத்தின் போதகர், நாற்சந்தியின் தென் கிழக்கில் உள்ள நிலப் பரப்பில் இருந்த விடுதியில் குடியிருந்தார். அதற்கு மதில்கூட இல்லை. அவர் அச்சுவேலி-மூளாய் வீதியைப் பயன் படுத்தியே தேவாலயத்துக்கு வந்து போனார். இன்று போதகர் வசிக்கும் விடுதியும் காணியும் எவ்வாறு யூனியன் கல்லூரி உரிமையிலிருந்து பறிபோனது?

யூனியன் கல்லூரியை அரசு 1962 இல் பொறுப்பேற்ற பொழுது ஒரு குறித்த சட்டப் பிரகாரமே (Education Act) பொறுப்பேற்றது. அதன்படி ‘அரசாங்கம் பொறுப்பேற்ற பொழுது, கட்டடங்கள் என்ன நோக்கத்துக்காகப் பாவிக்கப்பட்டனவோ, அதே நோக்கத்துக்காகவே அவை தொடர்ந்தும் பாவிக்கப்படவேண்டும். அல்லாதாயின் அச்சொத்து வழங்கிய பழைய உரிமையாளருக்கே உரித்தாகும்’ என்பதே விதி.  யூனியன் கல்லூரியை அரசு பொறுப்பேற்க முன்னர் - போதகர்  இப்பொழுது வசிக்கும் விடுதியில் - கல்லூரி அதிபர் திரு.துரைரத்தினம் அவர்கள் வசித்து வந்தார். கல்லூரி  நிர்வாக அலுவல்களில் ஒருபகுதியும் அங்குதான் நடைபெற்றது. அதிபர் புதுமனை அமைத்த பின்னர், அந்த விடுதியைவிட்டு வெளியேறி விட்டார். திரு.ஐ.பி.ரி. அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர், அக்கட்டடதில் சங்கீத வகுப்புக்கள் போன்றவை நடந்தன. அதிபர் திரு.க. கிருஷ்ணபிள்ளை அவர்கள், அதிபருக்குரிய விடுதியில் குடியிருக்க வில்லை. அதனைச் சாட்டாக வைத்துத் தேவாலய நிர்வாகிகள் தாம் அரசுக்குக் கையளித்த ‘அதிபர் விடுதிக்’ கட்டடத்தைத் திருப்பி எடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர். திரு.கிருஷ்ணபிள்ளை அவர்கள் அதனை எழுத்து மூலம் எதிர்த்தார். அதனால் திருச்சபையின் முயற்சி தடங்கலாகியது. திருச்சபையினர் காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களது உதவியை நாடினர். கௌரவ செல்வநாயகம் அவர்கள் வட்டுக்கோட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அ.அமிர்தலிங்கம் அவர்களிடம் அப்பணியை ஒப்படைத்தார். அவர் கல்வி அமைச்சரைச் சந்தித்து ஒரு ஒழுங்கைச் செய்தார். அதன்படி சந்தியின் தென்கிழக்கில் போதகர் வசித்த வீடும் காணியும் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. கல்லூரிக்குள் இருந்த அதிபர் விடுதி, போதகர் வசிப்பதற்காகத் தேவாலயத்திற்கு வழங்கப்பட்டது. மேலும், புதிதாக அந்த விடுதிக்குக் குறித்தளவு யூனியன் வளாக நிலப்பரப்பும் வழங்கப்பட்டது. அதையடுத்துக் காணி அளக்கப்பட்டு விடுதியின் தெற்கில் புதிதாக ஒரு மதில் கட்டப்பட்டது. அதனால்தான் அந்த மதில் கோணலாக தேவாலயத்தின் மூலைவரை நீட்டி நிற்கிறது. அதன் மூலையில் ஒரு இரும்புக் ‘கேற்’ உள்ளது. அதற்கும் காரணம் உண்டு. அது போதகர் தேவாலயத்துக்குச்  சென்றுவர - யூனியன் கல்லூரி வளாகத்தை ஊடறுத்து அமைக்கப்பட்டு - அதற்கும் சட்டவுரிமை ஏற்படுத்திக்கொண்டனர். அதுபற்றி அதிபர் திரு.கிருஷ்ணபிள்ளை அவர்கள் அதனைப் “போத்தல் கழுத்து” (Bottle-neck) ஒரு தினம் மாலை எதிர்க் கட்சித் தலைவரும், காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ அ.அமிர்தலிங்கம் அவர்களோடு பிரதான வாயிலினூடாக கல்லூரிக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தேன். பரிசளிப்பு விழாவுக்கு அவரைப் பிரதம விருந்தினராக அழைத்திருந்தோம். அவர் வாயிலில் சற்றுத் தரித்து நின்று பிரதான வளாகத்தையும், சோடனைகளால் கண்களைப் பறித்த பரிசளிப்பு விழாப் பந்தலையும் கவனித்தார்.

“போதகருடைய கட்டடம் இல்லாதிருந்தால், கல்லூரி வெகு பார்வையாக இருக்கும். நான் தவறு செய்துவிட்டேன்” என்றவர், தானே கௌரவ செல்வநாயகம் அவர்களது வேண்டுகோளின் பிரகாரம், கல்வி அமைச்சரைச் சந்தித்துக் காணி மாற்றம் செய்வித்ததாகக் கூறினார். அப்பொழுது தமிழ் அரசுக் கட்சி யூ.என்.பி. அரசுக்கு ஆதரவு கொடுத்த காலம் - 1965-1970. எதனையும் செய்விக்க முடிந்த காலம்.

சட்ட ஓட்டையைப் பயன்படுத்தி உள்ளார்கள். மாணவ சமூகத்தின் நல்வாழ்வில் கைவைப்பதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், தாமெடுத்த முயற்சியை வெற்றியாக நிறைவுசெய்துள்ளார்கள். அதனைத் தட்டிக் கேட்க அல்லது தடுப்பதற்கு எவரும் முயற்சித்ததாகவும் தெரியவில்லை. பெற்றார் ஆசிரிய சங்கம்  தீவிரமாக முயற்சித்திருந்தால் நிச்சயம் விடுதியும் காணியும் பறிபோயிராது. பழைய மாணவர் சங்கம் என்று ஒன்று அப்போது இல்லை. ஏன் எல்லோரும் பார்வையாளராக இருந்தனர்? எனக்குப் புரிகிறது. உங்களுக்கு?


இதனைச் சுருக்கமாக ஆனால் தெளிவாக எழுதியிருப்பது தருமத்தை, யதார்த்தத்தை, நியாயத்தைப் புரிந்து கொண்டு ‘போதகர் விடுதியை’ யூனியன் கல்லூரிக்குத் திருப்பி வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில். கைமாறிய நூல்நிலையக் காணிக்குப் பதிலாக, இரண்டாவது விளையாட்டு நிலக் காணியில், பெறுமதிக்கேற்றளவு நிலத்தை அவர்கள் பெற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இன்னும் வரும்...

No comments:

Post a Comment