Thursday 1 September 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (16)

மெளனம் கலைகிறது (1)

சிறுவயதில் பாடசாலை செல்லும் காலங்களில் பெரும்பாலும் நடந்தே செல்வோம். சில பொழுதுகளில் வேலிகளில் இருக்கும் ஓணான்கள் தரை இறங்கி வேகமாக எம்மைக் கடிக்க வருவதுண்டு. பின்னர் என்ன நினைத்தோ வந்த வேகத்தில், திரும்பப் போய் வேலிகளில் ஏறிக்கொள்ளும். பின்னர் மீண்டும் பாடசாலை முடித்து திரும்ப வீடு வரும்போது மீண்டும் இதே சேஷ்டையை இந்த ஓணான்கள் செய்யும். கடவுள் ஓணான்களுக்குக் கொடுத்த வரம் இது. இதேபோல சில ‘ஓணான் மனிதர்களை’ நான் இங்கே சந்தித்திருக்கின்றேன்.

நான் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியச் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினன். தொடர்ந்தும் சங்க உறுப்பினராக இருந்து வருகின்றேன். 2014 ஏப்ரல் மாதம் அக்கினிக்குஞ்சு இணையத்தளம் எனது ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத்தொகுப்பை வெளியிட்டது. அ.த.இ.க.சங்கம் வருடாந்தம் எழுத்தாளர்விழாவை நடத்தி வருகின்றது. அந்த வருடம் செயற்குழுவில் பத்திராதிபராக  நான் இருந்தேன். நடைபெறும் ஒவ்வொரு செயற்குழுக்கூட்டத்தின் போதும், ஏப்ரல் மாதம் எனது புத்தக வெளியீடு வருவதால் அந்தத் திகதியில் எழுத்தாளர்விழாவோ வேறு எந்தக் கூட்டமோ வைப்பதைத் தவிர்த்துக் கொள்ளும்படி கேட்டிருந்தேன். எல்லாம் சரியாகத்தான் நடந்தது. ஆனால் ஏமாற்றம் என்னவென்றால் அந்தப் புத்தக வெளியீட்டிற்கு சங்கத்தின் தலைவரோ செயலாளரோ வரவில்லை. ஏனைய எலோரும் வந்திருந்தார்கள். இத்தனைக்கும் அவர்கள் இருவரினதும் அனேகமான புத்தக வெளியீடுகளுக்கெல்லாம் நான் சென்றிருக்கின்றேன்.

ஏதாவது காரணம் இருந்தால் அதைத் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும்.

நான் அவர்கள் இருவரையும் தலைமை வகிக்கவோ அல்லது விழாவில் பேசவோ கூப்பிடவில்லை. ஆனால் தொடர்ந்தும் அவர்களுக்கு புத்தக வெளியீட்டை நினைவுபடுத்தி மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டு இருந்தேன். சந்திக்கும் வேளைகளில் நினைவுபடுத்தியிருந்தேன். புத்தக வெளியீடு நடைபெறுவதற்கு இரண்டுவாரங்களுக்கு முன்னர் செயலாளர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,
“சுதாகரன், உங்கள் புத்தக வெளியீடு நடைபெறும் திகதியில் எனக்கு பல சோலிகள் இருப்பதால் வரமுடியாது இருக்கின்றேன். நீங்கள் உங்கள் புத்தகத்தில் ஒரு பிரதியை எனக்கு அனுப்பி வைத்தால் அதுபற்றி  பத்திரிகைகளில் இணையத்தில் அறிமுகம் செய்து வைப்பேன்” என்றார்.

நான் இங்கே அவர்களின் பெயரைக் குறிப்பிடாமைக்கு முக்கிய காரணம், இங்கே கருத்துத்தான் முக்கியமானதேயொழிய மனிதர்கள் அல்ல என்பதற்காகத்தான். அவர் ஒரு முதுபெரும் எழுத்தாளர். பேச்சுத்திறமை கொண்டவர்.

அடுத்தவருக்கு தலைமைத்துவமும் தெரியாது. பேசவும் வராது. ஆனால் சங்கத்தின் தலைவராக இருந்து, அந்தச் சங்கத்தை நாறடித்து மூடுவதற்கு எத்தனிப்பவர். அவர் செயலாளரைவிட இன்னொருபடி மேலே போய், புத்தகவெளியீடு நடைபெறுவதற்கு நான்குநாட்களுக்கு முன்பதாக எனக்கு ஒரு மின்னஞ்சல் செய்தார். ”எனக்கு இப்படியானதொரு புத்தக வெளியீடு நடைபெறுவதே தெரியாதே! நான் இன்னொரு நிகழ்ச்சிக்கு வருவதாக வாக்குக் குடுத்து விட்டேன்” என்று ஆங்கிலத்தில் அந்த மின்னஞ்சல் இருந்தது.

இவர்கள் எல்லாம் சங்கத்தை ஆரம்பிப்பார்கள். ‘நான் தான் சங்கத்தைத் தொடங்கினேன். நான் தான் சங்கத்தைத் தொடங்கினேன்” என்று வரிக்குவரி ஞாபகப்படுத்துவார்கள். சங்கத்தை ஆரம்பிப்பதற்கு தோளோடு தோள் கொடுத்தவர்களை உதறித் தள்ளிவிடுவார்கள். சங்கத்தை ஆரம்பித்தேன் என்று பெயர் இருக்க வேண்டும். அதைக் கொண்டு நடத்த வேறு ஆட்கள் வேண்டும். இப்படித்தான் இந்த அ.த.இ.க. சங்கத்தை ஆரம்பித்ததில் உறுதுணையாக பக்கபலமாக இருந்தவர் சங்கம் ஆரம்பித்து சில மாதங்களில் சங்கத்தில் இருந்தும் முற்றுமுழுதாக விலகிக் கொள்கின்றேன் என்று கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். சங்கத்தின்  யாப்புவிதிகளை (constitution) எழுதியர்கூட அவர்தான். இன்னுமொரு விடயம் – சிலர் இன்னுமொரு படி மேலே போய் ‘நான் செத்துப் போனால், எனக்குப் பிறகு யார் இந்தச் சங்கத்தை வைத்துக் காப்பாற்றப் போகின்றார்கள்” என்று நீலிக்கண்ணீர் வடித்து உறுப்பினர்களை சங்கடத்திலும் ஆழ்த்தி விடுகின்றார்கள்.


2014 ஆம் ஆண்டு நடந்த விஷயம் இவ்வளவு காலம் கழித்து வருகின்றமைக்கு இன்னொரு காரணம் உண்டு. இனி அதற்கு வருகின்றேன்.

யூனியன்கல்லூரியின் 200வது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள்.

தற்போது யூனியன்கல்லூரியின் 200வது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, இலண்டன், கனடா, நோர்வே, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் யூனியன் கல்லூரிக்கு ஒவ்வொரு பழையமாணவர் சங்கமுண்டு. இவை எல்லாம் எப்பவோ ஆரம்பிக்கப்பட்டு திறம்பட செயற்பட்டு வருகின்றன. இந்த 200வது ஆண்டு பூர்த்தியாகின்றது எனக் கேள்விப்பட்டார்களோ இல்லையோ அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ணில் ஒரு சங்கம் உதயமாகிவிட்டது. பிறிஸ்பேர்ணிலும் அடிலயிட்டிலும் மேலும் ஒவ்வொரு சங்கம் ஆரம்பமாக இருப்பதாக அறிகின்றேன். போகிற போக்கில் ஏழெட்டு பழையமாணவர் சங்கங்கள் அவுஸ்திரேலியாவில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆயிரம் சங்கங்கள் உதயமாகட்டும். தப்பில்லை. ஆனால் ஆளுக்கொரு சங்கம்தான் வேண்டாம் என்கின்றோம். உங்கள் பெயரைப் பொறிப்பதற்காக என்று சங்கத்தை ஆரம்பித்தால் போதும் என்று நினைத்து விடாதீர்கள். தொடர்ந்து நடத்தவும் வேண்டும்.

மெல்பேர்ணில் இந்தச் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர், ஊரில் எனது வீட்டிற்கு நான்கு வீடுகள் தள்ளி இருப்பவர். நான் அவுஸ்திரேலியா வந்த காலங்களில் நாட்டுப்புறத்தில் இருந்த அவரது வீட்டிற்கு ஒருதடவை சென்றிருக்கின்றேன். பின்னர் அவரின் உறவினர் ஒருவர் கனடாவில் இருந்து மெல்பேர்ண் வந்தபோது மீண்டும் ஒரு தடவை அவர் வீட்டிற்குச் சென்றிருக்கின்றேன். எப்பவாவது வழி தெருக்களில் கண்டால் கதைப்பார். இற்றைவரை 16 வருடங்களில் ஒரு தடவையேனும் எனது வீட்டிற்கு வந்ததில்லை. ரெலிபோனில் கதைத்ததில்லை.

நான் அவுஸ்திரேலியா வந்ததன் பிற்பாடு எனது சொந்த அண்ணர் ஒருவர் இறந்துவிட்டார். அவர் அதற்கும் வரவில்லை. ரெலிபோனில் கதைக்கவும் இல்லை. இத்தனைக்கும் ஊரிலோ இங்கோ அவருடன் எந்தவிதமான கோபமோ மனஸ்தாபமோ ஏற்பட்டது கிடையாது.

இந்தப் பழைய மாணவர் சங்கம் உதயமானபோது அவர் எமக்கு ரெலிபோன் செய்தார்.
“யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஆரம்பிக்கப் போகின்றோம். ஊறுப்பினராகச் சேர்ந்து கொள்ளுங்கள். 200வது ஆண்டுவிழாவும் வருகின்றது.”

“இவ்வளவு காலமும் எங்கு இருந்தீர்கள்? எனது அண்ணர் இறந்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.”

“”ஆம். தெரியும்.”

“அப்ப?”

”அது வேறை. இது வேறை”

உங்கள் வீட்டிலிருந்து நாலாவது வீடு தள்ளி இருந்த சகமனிதர் ஒருவரின் இழப்பினைத் தெரிந்திருந்தும் பங்கு கொள்ளாத கவலை தெரிவிக்காத ஒருவர், எப்படி ஒரு பழைய மாணவர் சங்கத்தை ஆரம்பித்து தலைவராக இருந்து செயற்படுத்த முடியும். இறந்த அந்த மனிதரும் அந்தப் பாடசாலையின் பழைய மாணவர்தானே!

மனிதநேயம், மனிதாபிமானம் அற்ற இப்படிப்பட்டவர்களால் சங்கத்தினை ஆரம்பித்து தொடர்ச்சியாக நடத்த முடியுமா என்பதே எனது கேள்வி.

200வது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களை மாத்திரம் மையப்படுத்தி ஆரம்பிக்கப்படும் சங்கங்கள் எல்லாம் அப்புறம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் கதைதான்.

ஏற்கனவே ஒன்று அ த இ க ச சா என்று சொல்லிச் சொல்லி சேடம் இழுத்துக் கொண்டிருக்கின்றது.





No comments:

Post a Comment