Wednesday 28 October 2015

கதிர்.பாலசுந்தரம் அவர்களுடன் ஒரு நேர்காணல்

படைப்பிலக்கிய ஆர்வலர்களுக்கு இலத்திரனியல் வரப்பிரசாதம்
(யாழ்ப்பாணம் ஆவரங்கால் என்னுமிடத்தில் பிறந்த கதிர்.பாலசுந்தரம், பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியாவார். இலங்கையின் பல்வேறு பாகங்களில் தொழில் புரிந்த இவர், 1951 முதல் அரசினர் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றினார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் 1972 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, 1979 முதல் யூனியன் கல்லூரியில் ஒரு தசாப்தகாலம் கல்வி நிர்வாக சேவை அதிபராகப் பணிபுரிந்தவர்
Saturday Review’ என்னும் ஆங்கிலவாரச் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தினால் யாழ் குடாநாட்டின் அதிசிறந்த அரசாங்க பாடசாலை அதிபர் எனப் போற்றப்பட்டவர். எழுபதுகளின் ஆரம்பத்தில் இவரது படைப்புகள் சிரித்திரன், றோசாப்பூ போன்ற சஞ்சிகைகளில் பிரசுரமாகின.
கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்) தனது ஈழத்துச் சிறுகதை வரலாறுஎன்னும் நூலில் இவரது அந்நிய விருந்தாளிஎன்னும் சிறுகதைத்தொகுப்பில் உள்ள உயர உயரும் அன்ரனாக்கள் என்னும் சிறுகதை, 1961 – 1983 காலகட்டத்தில் வெளிவந்த ஆயிரக்கணக்கான சிறுகதைகளுள் தெரிவு செய்யப்பட்ட சிறந்த பதினெட்டுக்கதைகளுள் ஒன்றெனக் குறிப்பிட்டுள்ளார்.
அயராமல் இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த தலைமுறை எழுத்தாளரான இவர் தற்போது கனடாவில் இருக்கின்றார். )

1. நீங்கள் கல்விப்புலத்தைப் பின்னணியாகக் கொண்டவர்கள். எப்படி உங்கள் முதல் இலக்கியப் பிரவேசம் நடைபெற்றது?
கதிர்.பாலசுந்தரம்:
இளமைக் காலத்தில் புத்தூர் ஸ்ரீசோமாஸ்கந்தக் கல்லூரியில், ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில நாவல்> மற்றும் ஆங்கில நாடகங்களை இலகு படுத்தி எழுதிய சிறிய நூல்கள் முப்பது மட்டில் இருந்தன. அவை புகழ்பூத்த ஆங்கில மேதைகளின் கதைகளை சுருக்கமாக அறிந்துகொள்ள உதவின. அவைதான் இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்தின. பின்னர் நாவல்களின் மூல வடிவங்கள் சிலவற்றை வாசித்தேன். அவர்களுள் பன்னிரு வயதில் குடும்பச் சுமையில் பங்குகொள்ள காலணித் தொழிற்சாலையில் தொழில் பார்க்க ஆரம்பித்த புகழ்பூத்த கதை படைப்பதில் மன்னனெப் புகழப்படும் Charles Dickens எனக்குப் பிடித்தமான நாவல் ஆசிரியர்.
பாடசாலைப் படிப்பு முடிந்து ஆங்கில உதவி ஆசிரியராக மட்டக்களப்பில் வசதி குறைந்த கிராமச்சூழலில் தொழில் பார்த்த காலத்தில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில் ஆர்வம் இருந்தது. என்னுடைய நண்பர் அகமது கிரமமாக இந்திய நாவல்கள் வாங்குபவர். சிறிய நூல் நியைம் வைத்திருந்தார். கல்கியின் நாவல்களில் கள்வனின் காதலி மட்டும் வைத்திருந்தார். வரதராசனின் சகல புத்தகங்களும் அவரிடம் இருந்தன. அகிலனின் சிநேகிதி மட்டும் இருந்தது. இந்த வாசிப்புப் பின்னணிதான் எனது இலக்கியப் பிரவேசத்திற்கு உந்துதல் தந்தன.
என்னுடன் தொழில்புரிந்த மௌலவி ஆசிரியர் ஒரு பாரசீக நாவல் புத்தகம் தந்தார். ஏதோ ஒரு உந்தலில், சிறுகதை கட்டமைப்பு எதனையும் புரியாத வேளையில், அக்கதையை காதலும் கருணையும் என்னும் பெயரில் சிறுகதை வடிவமாக அமைத்துத் தினகரனுக்கு அனுப்பினேன். அதுதான் பத்திரிகையில் வெளிவந்த எனது முதல் சிறுகதை. அதன் பின்னர் நான் நீண்ட காலம் கதை எழுத முனையவில்லை. எனது இலக்கிய முயற்சி தொடர்ச்சியானதல்ல. காலத்துக்குக் காலம் இலக்கியப் படைப்பை தொட்டுப் பார்த்திருக்கிறேன்.
2. உங்கள் கல்விப்புலம் சார்ந்த பணிகள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.
கதிர்.பாலசுந்தரம்:
நான் எஸ்.எஸ்.சி. சித்தியடைந்ததும் ஆரம்ப வகுப்புகளுக்கு ஆங்கிலம் பயிற்றும் ஆசிரியராகப் பணியாற்றினேன். அவ்வேளை லண்டன் பல்கலைக்கழக இடைநிலைக் கல்விமாணிப் பரீட்சையில் தேறிப் புவியியல், ஐரோப்பிய வரலாறு கற்பித்தேன். புவியியல் கற்பிப்பதில் எனக்கு அலாதியான பற்று இருந்தது. ஆசிரிய சேவையில் இருக்கும் வேளை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தேன். அங்கு இரண்டு சிறிய நாடகங்கள் அரங்கேற்றினேன். வேறு இலக்கிய முயற்சிகளில் ஈடுபடவில்லை.
நான் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உதவி ஆசிரியராகவும், உதவி அதிபராகவும், ஏறக்குறைய ஒரு தசாப்தம் அதிபராகவும் பணியாற்றினேன்.
கல்லூரிக்கு வெளியே எனது மனையில் நான் ஆங்கில இலக்கண வகுப்புகளை தொடர்ந்து மிக்க பயனுள்ள வகையில் வெற்றிகரமாக மேற்கொண்டேன் எனக்கூறுவதில் தவறில்லை எனக்கருதுகிறேன். அந்த அனுபவத்தை வைத்து நான் எழுதிய ஆங்கில இலக்கண நூலை அச்சுவாகனம் ஏற்ற முடியாமல் போனமை மனதில் சுமையாக உள்ளது.
3. ஒருகாலத்தில் பல சிறந்த சிறுகதைகளை எழுதிய நீங்கள் பின்னர் அஞ்ஞாதவாசம் இருந்தீர்கள். செங்கை ஆழியானின் உந்துதலால் பின் மீண்டும் ஒன்றிரண்டு சிறுகதைகளைத் தந்தீர்கள். ஆனால் கடந்த முப்பது வருடங்களாக எந்தவொரு சிறுகதையையும் எழுதவில்லை. நாவல் மாத்திரம் எழுதுகின்றீர்கள். ஏன் இந்த மாற்றம்?
கதிர்.பாலசுந்தரம்:
தொழில் சார்ந்த வாழ்க்கைச் சுமைகளால் சிறுகதை முயற்சிகளை மறக்கவேண்டிய கட்டாய நிலமை. ஓய்வுநேரம் இருக்கவில்லை. ஞாயிறு பிரசுரங்களில் வெளியான சிறுகதைகளை ஆவலுடன் வாசித்து வந்த நான் அதனை மறந்தே போய்விட்டேன்.
நாவல் எழுதிய காலத்தில் நான் முழு ஓய்வில் இருந்தேன். அதுதான் காரண மல்ல. அதற்கு வலுவான காரணம் இருந்தது. சுதந்திர இயக்கங்களின் உடன்பிறப்புகளுக்கு எதிரான மனிதவுரிமை மீறல்கள், மற்றும் கல்லூரியிலும் ஓய்விற்குப் பின்னரும் இயகங்களின் கொடுங்கோலுள் நான், என் நண்பர்கள், உறவுகள் அனுபவித்த வேதனைகள் சோதனைகள்---அடிமட்ட போராளிகளால்கூட கல்லூரியில் அச்சுறுத்தப் பட்டேன். அதிபரை அவமதிக்கக் கிடாய் அறுத்து இயக்கத்துக்கு உணவுப் பார்சல் கொடுத்த உதவி ஆசிரியரின் வேடுவத்தனம், ஓய்வின் பின்னர் இயக்க உள்ளுர்த் தலைவன் சுகமில்லாது கட்டிலில் படுத்திருந்த என்னை துப்பாக்கி சகிதம் வெருட்டிச் செய்த விசாரணை, இன்னொரு இயக்கத் தலைவன் துப்பாக்கியோடு வீட்டுள் புகுந்து போட்ட கட்டளை, பவுண் சேகரித்தவன் பலர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்திய கேவலம், வீட்டைவிட்டோடி அளவெட்டியில் விறாந்தையில் வாழ்ந்தவேளை எனது அரசியல் பின்னணிக்குத் தண்டனையாக பொழுது பட்டபின் அரிக்கன் லாம்பு கொண்டு ஊரைச்சுற்றி காவல் புரிய வேண்டும் என்று சங்கீத வாத்தி போட்ட கட்டளை. எனது உற்ற நண்பன் அதிபர் இராசரத்தினத்தை கடத்திச் சென்று சில நாட்களில் கொன்று விட்டு வீடு வந்து அவர் மனைவியை அழைத்து வெள்ளைச் சேலை கட்டிக் கொண்டாடலாம் என்று சொன்ன கொடுமையான செய்தி, தெல்லிப்பழைச் சந்தியில் கண்முன்னே ஒரு இயக்கம் மற்ற இயக்க போராளியை சுட்டு, குருதி பாய்ந்த நிலையில் ரயரின் மேல் போட்டு எரித்த காட்சி, தெல்லிப்பழை போஸ்ற் மாஸ்ரர் இராசையரைக் கடத்திச் சென்று எனது வீட்டு அருகே சுட்டுக் கொன்றுபோட்ட காட்சியைப் பார்த்த ஆத்திரம், சூட்டுச் சத்தம் கேட்டு என் சகோதரமோ என்று அஞ்சி மோட்டார் சைகிலில் சென்று தையிட்டி பனை அடைப்பில் கண்ட இரண்டு பதின்ம வயது மாணவர்கள் உயிர்துறந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பயங்கரம்;---இப்படிப் பல மனதைப் பிழிந்த அனுபவங்கள். அவைதான் என்னை இழுத்துச் சென்று நாவல் ;லக்கியத்துள் அமுக்கின. உச்ச கட்டமாக அமைந்தது நீண்ட காலம் நட்பாயிருந்த, எதிர்க்கட்சித் தலைவராயிருந்த, தமிழர் நலனுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த கௌரவ அமிர்தலிங்கம் அவர்களின் கொலை. அந்த மனித சங்காரம் என்னைச் சதா துரத்திக்கொண்டிருந்தது. அந்த வேதனையின் விளைச்சலே என்னை போர்க்கால மறைவில் ஐந்து முகங்கள் நாவலை எழுத வைத்தது. நாவல் எழுதி முடிந்த பின்னர் என்னை வதைத்துக்கொண்டிருந்த சோகச்சூறாவளி பெரிதும் தணிந்திருந்தது. இரண்டாவது போர்க்கால நாவல் சிவப்புநரி எனது வேதனையை மேலும் தணிந்தது. மூன்றாவது போர்க்கால நாவல் வன்னியில் நான் சாந்தமடைந்து புதிய ஒரு கோணத்தில் போராளிகளை பார்வைக்கு வைத்துள்ளேன்.
4. உங்கள் சிறுகதைத்தொகுதி அந்நிய விருந்தாளியில் உள்ள ஒவ்வொரு கதையும் வித்தியாசமானது. பரீட்சார்த்தக் கதைகள் போல கதைகளை அமைக்கும் முறையிலே வெவ்வேறு உத்திகளைக் கையாண்டுள்ளீர்கள். இவை பற்றிச் சொல்லுங்கள்.
கதிர்.பாலசுந்தரம்:
சிறுகதை எழுதுவோர் பொதுவாக ஒரு கவர்ச்சியான செய்தியோடு கதையை ஆரம்பிப்பர். அந்த உத்தியில் பெரிதும் வேறுபாடு இருக்காது. அது எனக்குச் சப்பென்றிருந்தது. கதை சொல்லும் பாணியிலும் புதுமைகளைக் கையாண்டேன். என்னுடைய பலதுறை உத்தியை அணிந்துரை எழுதிய பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களும் வியந்து பதிவு செய்திருந்தார்.
5. உங்களுக்கு கவிதை எழுதும் ஆற்றலை---உங்கள் நாவல்களின் இடையிடையே காணக்கூடிய கவிதைகள்---புலப்படுத்துகின்றன. ஏன் கவிதை எழுத முன்வரவில்லை?
கதிர்.பாலசுந்தரம்:
எனக்குக் கவிதைகள்மீது நாட்டமில்லை. வசனத்தில் தெளிவாகச் சொல்ல முடியாத விடயத்தை கவிதையில் அழுத்தமாகச் சொல்ல முடிகிறது. எனது நாவல்களில் அவை இயல்பாக அமைகின்றன. வன்னி நாவலின் இறுதியில் மேஜர் சிவகாமியின் மனோநிலையை வசனத்தில் வடிக்க முடியவில்லை. கவிதையில் அந்தப் பாத்திரத்தின் உணர்வுகள் பளிச்சிடுகின்றன.
6. உங்கள் சிறுகதைகளில் நாவல்களில் வரும் பாத்திரப் படைப்புகளின் பெயர்கள் (கழுகுக்கண் பம்பை ராசம்மா, மூக்கர் சண்முகம், ஊத்தைவாளி குகன், ஒற்றைக்கண் கோட்டான்) பெயரைச் சொன்ன மாத்திரத்தில் அவர்களின் தோற்றத்தினை மனக் கண் முன் கொண்டுவருகின்றன. பாத்திரங்களுக்குப் பட்டம் சூட்டும் எண்ணம் ஏன் உங்களுக்குத் தோன்றியது?
கதிர்.பாலசுந்தரம்:
எனது பிறந்து வளர்ந்த சிவதலம் ஆவரங்கால் கிராமத்தில் இந்தப்; பட்டப் பெயர் சர்வசாதாரணம். ஒரே பெயரில் பலர். அவர்களை வேறுபடுத்த அவை தேவைப்பட்டன. அப்படி அல்லாமலும் பலருக்கு அடைமொழியாகப் பட்டப்பெயர்கள். அது எனது இலக்கியத்தில் தொற்றிக்கொண்டது. நீங்கள் சொல்வது போல அந்த வடிவம் பாத்திரங்களை வாசகன் மனதில் இறுகப் பற்றிவைத்துக்கொண்டு கதையை விறுவிறுப்பாக நகர்த்த உதவுகிறது.
7. பாடசாலையில் ஆசிரிராக அதிபராக இருந்த காலங்களில் எழுதிய நாடகப்பிரதிகள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். வானொலி நாடகங்களும் எழுதியிருப்பதாக அறிகின்றேன்.
கதிர்.பாலசுந்தரம்:
புத்தூர் ஸ்ரீசோமாஸ்கந்த கல்லூரியில் படித்த காலத்திலேயே தவணை முடிவில் தனிநபர் நாடகங்கள் அரங்கேற்றினேன். எனது முதலாவது நாடகம் ABCD. அடுத்து சி.என். அண்ணாதுரை அவர்களின் வேலைக்காரி நாடகத்தில் சில மேடைகளில்; நடித்தேன்;. நான் கடமை புரிந்த பாடசாலைகளில் தவறாது நாடகங்களை எழுதி அரங்கேற்றினேன். ஒரு பாடசாலையில் கடமையாற்றிய வேளை அதிபர் பி.ரி.சின்னையா அவர்கள் பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் மொலீரின் ஒரு நாடகப் பிரதியை தந்து அதனை பரிசளிப்பு விளாவில் அரங்கேற்றும்படி வேண்டினார். குருவில்லாது கண்டுபார்த்த அனுபவத்தில் நாடக முயற்சிகளில் ஈடுபட்ட எனக்கு மொலீரின் டாக்டர்களைக் கிண்டல் செய்யும் நாடகம் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டியது.
நான் எழுதி அரங்கேற்றிய நாடகங்களில் நினைவில் நிற்பவை காதலும் கருணையும், கண்டறியாத கலியாணம்> யார் பெற்ற பிள்ளையோ? விழிப்பு> விஞ்ஞானி என்ன கடவுளா என்பனவாகும். இவை எனது சிறுகதைகளைத் தழுவியவை. இவை வானொலி நாடகங்களாகவும் ஒலி பரப்பப்பட்டவை.
8. நீங்கள் யூனியன் கல்லூரியில் ஒரு தசாப்த காலமாக அதிபராக இருந்துள்ளீர்கள். அந்தக் காலம் யூனியன் கல்லூரியின் பொற்காலம் எனக் கூறப்படுகின்றது. அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.
கதிர்.பாலசுந்தரம்:
நான் அதிபர் பதவி ஏற்ற சமயம் சிறந்த மாணவர்கள் பிரபல கல்லுரிகளை நாடிச்செல்லும் வழமை இருந்தது. 1978இல் ஒரு புலமைப் பரிசில் பெற்ற மாணவனே அங்கிருந்தார். ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் தேர்வை அடுத்தும், வடமாகாண ஆசிரியர் சங்க எட்டாம் வகுப்புத் தேர்வை அடுத்தும், .பொ.. சாதாரணதர தேர்வை அடுத்தும் சிறந்த மாணவர்கள் பிரபல கல்லூரிகளை நாடிச் சென்றுவிடுவர். பெரும்பாலானவர்கள் மகாஜனக் கல்லூரியை நாடினர். மகாஜனவிற்கு முத்தான மாணவர்களை மகிழ்ச்சியுடன் வழங்கும் feeding school ஆகவே யூனியன் விளங்கியது.
நான் ஓய்வு பெற்ற சமயம் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு முழுவதும், புலமைப் பரிசில் பெற்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. யூனியன் கல்லூரியில் புத்திரசெல்வங்களைச் சேர்க்க வாய்ப்புக் கிட்டுமோ என்று பெற்றார் ஏங்கினர். மகாஜனக் கல்லூரி மாணவர்கள் எமது கல்லூரியில் இணைந்து மருத்துவம் பொறியியல் முகாமைத்துவக் கற்கை நெறிகளுக்கு தெரிவாகி இருந்தனர். மேலும் சுகந்தன் என்ற மாணவர் கல்வி அமைச்சின் .பொ.. உயர்தர தேர்வில் கணித பிரிவில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று ஒரு புதிய சாதனையை பதிவு செய்தார். அந்த வெற்றிகரமான மகிழ்ச்சி தரும் சாதனைகளே பொற்காலம் என்ற பதிவுகளுக்கு காரணம் என்று எண்ணுகிறேன்.
9. இலத்திரனியல் ஊடகங்கள் வந்ததன் பின்னர் இலக்கியப் படைப்பு முயற்சிகளில் நடக்கின்ற தாக்கங்கள் பற்றிச் சொல்லுங்கள். சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் பின் தள்ளப்பட்டு, சும்மா சருகுகள் நிறைய அங்கே பல்கிப் பெருகிவிட்டனவே?
கதிர்.பாலசுந்தரம்:
இலத்திரனியல் ஊடகங்களின் வருகை ஆக்க இலக்கிய வளர்ச்சிக்கு நல்ல பலன்களை அள்ளி வழங்கியுள்ளது. முன்னர் பல்கலைக் கழகங்கள்> வசதியான நூலகங்களை நாட முடியாதவர்கள் ஆக்கவிலக்கிய ஆவல்களை அமுக்கி வைத்திருக்க வேண்டியிருந்தது. இன்று வீட்டில் இருந்தபடியே நாம் அந்த அறிவைப் பெற முடிகின்றது. சிறுகதை பற்றி> அது எழுதுவது பற்றி> உத்திகள் பற்றி> உலகின் சிறந்த சிறுகதைகள் பற்றி அறிய உதவுகிறது. நாவல் அல்லது கவிதை படைக்க துடிக்கிறீர்களா? இலத்திரனியல் எந்த நேரமும் உதவக் காத்திருக்கிறது. பாடசாலையில் படிக்கிற மாணவன் சேக்ஸ்பியரின் மக்பெத் புரியாமல் விழிக்கிறான். வீட்டுக்கு வந்து இலத்திரனியலை நாடினால் விளக்கமான கட்டுரைகள் பல காத்திருக்கும். இன்னும் ஒருபடி மேலேபோய் அதனை திரைப் படமாகப் பார்க்கலாம். மக்பெத் பற்றி பல திரைப்படங்கள் காத்திருக்கும். பாடசாலையில் ஒரு மாதங் கற்க வேண்டியதை ஒரே இராப்பொழுதில் கற்றுவிடலாம். இதே போல ஏறக்குறைய எல்லாப் பாடங்களையும் கற்கலாம். இன்றைய மாணவர்களுக்கு மட்டுமல்லாது படைப்பிலக்கிய ஆர்வலருக்கும் இலத்திரனியல் ஒரு வரப்பிரசாதம்.
இலத்திரனியல் வருகை படைபிலக்கிய வளர்ச்சி, தரம், பரம்பல் என்பனவற்றிற்கு பெரிதும் கைகொடுத்துள்ளது. வரலாற்றில் இவ்வகையான பெரும் திடீர் வளர்ச்சி என்றும் நடந்ததில்லை. அந்த வளர்ச்சிக்குள் இலைமறைகாயாகத் தவிர்க்கவேண்டிய குப்பைகூளங்களும் புகுந்துள்ளன. காலம் கழிப்பனவற்றைக் கழித்து கண்ணின்மணி போன்றனவற்றறை மட்டும் பேணிவைத்திருக்கும்.
மேற்கு நாடுகளில் இலக்கிய படைப்பு வளர்ச்சிதொட்ட முயற்சிகளுக்கு இலத்திரனியல் ஊடகங்கள் சார்ந்த அமைப்புகள் பெரிதும் ஊக்கமளிக்கின்றன. பலநாடுகளிலும் பல்கலைக்கழக மட்டங்களில் சங்கங்கள் அமைத்து உதவியும் ஊக்கமும் கொடுக்கின்றனர். உதாரணமாகப் படைப்பு இலக்கியம் ஓவியம் சார்ந்த துறைகளில் ஏற்படும் புதிய போக்குகள் உத்திகளை தமது அங்கத்தவர்களுக்கு அறிமுகம் செய்கின்றனர். ஆண்டுதோறும் மகாநாடுகள் நடாத்தி புதிய ஆய்வுகளை சமர்ப்பித்து ஆக்க இலக்கிய வளர்ச்சிக்கு உதவுகின்றனர். எழுத்தாளர்கள் தங்கள் ஆக்கங்களை பிரசுரம் செய்ய உதவுகின்றனர். பட்டதாரி மாணவர்களுக்கு சந்திப்புகள் நடாத்துகின்றனர். ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுகின்றனர். உதாரணமாக அவுஸ்திரேலியாவில் உள்ள The Consortium on Electronic Literature (CELL) என்ற அமைப்பைக் கூறலாம்.
உங்கள் வினாவின் இரண்டாம் பகுதி தமிழ் எழுத்தாளர் பற்றியதாகும். அவர்கள் ஆரம்ப கட்டத்தில் உள்ளனர். காலப்போக்கில் இலத்திரனியல் சங்கங்கள் தோன்றி கட்டுப்பாடுகள் விதித்துச் சரியாகலாம் என எதிர்பார்க்கிறேன். அதுவரை தங்கள் எழுத்துக்களை அச்சில் பார்த்து மகிழும் ஆரம்ப எழுத்தாளர்கள் ஆவலுக்கு நாம் வாழ்த்துக் கூறுவோம்.
10. பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயம் நவீன இலக்கிய கர்த்தாக்களுக்கு அவசியமா?
கதிர்.பாலசுந்தரம்:
அவசியமில்லை. ஆனால் அவை ஒரு எழுத்தாளனின் ஆக்க இலக்கியத்தைச் செழுமைப்படுத்த பெரிதும் உதவும்.
11. தற்போது நாவல் முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டுள்ளீர்கள். இந்த நாவல் இலக்கியம் பற்றிச் சொல்லுங்கள்.
கதிர்.பாலசுந்தரம்:
வரலாற்று நாவலின் வாடை வீசும் போர்க்கால நாவல் படைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளேன். இந்த நாவல் வகை மேற்கு நாடுகளில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. முதலாம் இரண்டாம் மகாயுத்தங்களை அடுத்தும்> வியற்னாம் போரை அடுத்தும் ஏராளமான போர்க்கால நாவல்கள்; எழுந்தன. அதன் முன்னரே எழுந்த நேப்போலியனின் இரசியப் போர்கள் பற்றிய லீயோ ரோல்ஸ்ரோயின் யுத்தமும் சமாதானமும்> Troy மாநகரத்தை பத்து ஆண்டுகள் கிரேக்கப் படைகள் சுற்றிவளைத்துத் தாக்கிய போர்க்காலம் பற்றிய ஹோமரின் இலியட் காவியம்> பாண்டவருக்கும் கௌரவர்களுக்குமான குருஷேத்திரப் போர் பற்றிய மகாபாரதம் என்பன போர்க்கால கதைகளாகும். இவை பற்றி இன்றும் பேசப்படுகின்றது.
போர்க் காலகட்டத்தின் பிரதான மனித முரண்பாடுகளை> அழிவைத்தரும் விளைவுகளை மனித சமுதாயத்தின் சிந்தனைக்கு வைக்கும் இந்த நாவல் வகை, ஈழத்தில் அதன் வளர்ச்சி ஆரம்பப்படியில்தான் உள்ளது. விடுதலைப் போராட்டம், போராளிகள் அனுபவங்கள்-சாகசங்கள்> இயக்க முரண்பாடுகள்> சகோதர சங்காரம்> புலிகள்> கரும்புலிகள்> தேசியத் தலைவர் பிரபாகரன்> முள்ளிவாய்க்கால்> ஆனையிறவு-ஜெயசிக்குறு-முல்லைத்தீவு வெற்றிகள்> சமுதாயப் பாதிப்பு> மனித சிந்தனை மாற்றங்கள் --- இவை பற்றிப் போதிய போர்க்கால பன்முகப் பார்வை நாவல்கள் தாராளமாக எளவேண்டும். அவை எதிர்கால சந்ததிகளுக்கு அறிவு புகட்டும். சரிபிழைகளை சீர்தூக்கிப் பார்க்க உதவும்.
12. நீங்கள் எழுதிய நாவல்கள் எல்லாம் அரசியல் சார்ந்தவையாகவே உள்ளன. புலம்பெயர்ந்து இலண்டன் கனடா போன்ற நாடுகளில் பலவருடங்கள் வசித்து வருகின்றீர்கள். புலம்பெயர்ந்த சூழலை மாத்திரம் பின்னணியாகக் கொண்டு ஏதாவது எழுதும் எண்ணம் உள்ளதா?
கதிர்.பாலசுந்தரம்:
சூழலை நுண்ணிதாகப் புரிந்து கொண்டால் மட்டுமே நாவல் எழுத முடியும். நாவலின் இயங்கு களத்தை---பௌதிக தோற்றம்> காலநிலை> தாவரம், உயிரினம் என்பனவற்றை ஓரளவுக்கு வாசித்துப் புரிந்து கொள்ளலாம். ஆனால் அந்நிய கலாச்சார அம்சங்களை, வாழ்வியல் பண்புகளை நன்கு புரிந்து எழுதுதல் என்பது பசுபிக் சமுத்திர ஆழ்தளத்தில் பொக்கிசம் தேடுதலுக்கு ஒப்பானது. நாவலின் இயங்கு தளம் நாவலின் பாத்திரங்களுக்குச் சமமான பங்களிப்பைச் செய்கின்றது. நான் முதுமையில் மேற்கு நாடுகள் அடைந்த காரணத்தால் வெளிப் பரிச்சியம் மிகக்குறைவு. எனது அந்நிய கலாச்சார வாழ்வியல் அறிவு ஓர் இலக்கியப் படைப்பை ஆக்கம் செய்யும் அளவிற்கு அண்மையிலும் இல்லை. எழுதினால் நாவலில் உயிர் இருக்காது. புதைகுழியிலிருந்து எழுந்த எலும்புக்கூடு பரதநாட்டியம் ஆடுவதுபோல் அமைந்துவிடும் என்பதனால் புலம் பெயர்ந்த சூழலை மாத்திரம் பின்னணியாகக் கொண்டு எழுதும் நோக்கம் இல்லை.
13. பாடசாலை ஆசிரியராக அதிபராக இருந்துள்ளீர்கள். உங்கள் மறைவில் ஐந்து முகங்கள் நாவலை வாசிக்கும்போது அதில் வரும் சில வார்த்தைப் பிரயோகங்கள், வர்ணனைகள் என்பவற்றைத் தவிர்த்து எழுதியிருக்கலாம் என நான் நினைக்கின்றேன். அவை நாவலுக்கு வலுவூட்டுகின்றன எனக் கருதுகின்றீர்களா?
கதிர்.பாலசுந்தரம்:
இலக்கிய கலைத்துவத்துக்குக் களங்கம் தரும் தூசண வார்த்தைகளை நான் பயன்படுத்த வில்லை. ஆனால் மனிதனின் உயிர் உடமைகள், மனித மேன்மைகள; உரிமைகளை மதிக்காத வழிதவறியவர்களின் கொடுமைகளைச் சுமந்து நின்ற வேளை எழுதிய காரணத்தால்> எனது மனக் குமுறலை யதார்த்தமாகப் பேச நேர்ந்தது. இலக்கியப் படைப்பை அது நிகழும் களம்-காலம்-சூழ்நிலையில் வைத்து நோக்கவேண்டும். இன்றைய அசியல் சூழ்நிலையில் நின்று> இன்றைய தராசுபடிகளை வைத்துகொண்டு அன்றைய கருமங்களை பூதக்கண்ணாடி கொண்டு நோக்குவது இலக்கியத்தை நிறைவாகப் புரிந்துகொள்ள வைக்காது. சுதாகர்> தாங்கள் சொல்வது போல வார்த்தைகள் வர்ணனைகளை மென்மைப் படுத்தியிருந்தால் நாவலின் வலிமை தொய்ந்திருக்கும்> பட்ட பனைமரம் வாடைக் காற்றில் ஆடியது போல அமைந்திருக்கும். நாவலின் நோக்கமோ நிஜமோ வாசகனை நிறைவாக அடைந்திராது.
உங்களிடம் நான் ஒரு வினாக் கேட்கின்றேன். நாவலில் சொல்வது கொஞ்சம் வன்மையாக அல்லது கொச்சைத்தனமாக இருந்தால் அதனைத் தவிர்க்க வேண்டுமா? அப்படியானால் ஒரு பெண்ணின் ஆடையை அரசசபையில் வைத்துத் துகில் உரிந்த வியாசரின் மகாபாரதம் பற்றி, வியாசர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சுதாகர். நான் உங்களுக்கு ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இலக்கியம் என்பது எப்பொழுதும் அழகாகவும்> பெருந்தன்மை உடையதாகவும்> பூரணத்துவமானதாகவும் அமைய வேண்டியதில்லை. அது அவற்றிற்கு முரண்பட்ட தளத்தில் நின்றும் உச்ச இலக்கிய தரத்தை அடையமுடியும். இராமாயணம், மகாபாரதம்கூட சூதுவாது சூழ்ச்சி பொய்புரட்டு அக்கிரமம் அநியாயம் தொட்ட அத்திபாரத்தில் கட்டி எழுப்பிய மங்காத புகழுடைய காவியங்கள்தான்.
14. ஈழப் போராட்டத்துக்குச் சாதகமாக ஈழத்து எழுத்தாளர்கள் அதிகம் எழுதவில்லை என்றும் மெளனம் சாதித்து வந்தார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது. இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? தமிழ் இனப்பிரச்சினை, தமிழ் இன விடுதலைப் போராட்டத்தில் உங்கள் இலக்கியம் சார்ந்த பங்களிப்பு என்ன?
கதிர்.பாலசுந்தரம்:
எழுத்தாளனை நீ ஏன் ஈழப் போருக்குச் சார்பாக எழுதவில்லை என்று வினா எழுப்புவது> மூச்சுவிடாமல் ஜனநாயக உரிமைகள் பற்றிக் குரல் எழுப்பும் எமக்கு உகந்ததல்ல. சார்பாக எழுதினாலும் மரண தண்டனை, எதிராக எழுதினாலும் மரண தண்டனை என்ற பயங்கரச் சூழல். ஒரு நாவலின் பாத்திரங்களை மனிதராகக் காட்ட முடியாத சூழ்நிலையில் மிருகங்களை பாத்திரமாக காட்டியதோடு மட்டுமல்லாமல் ஆலடிச்சித்தர் என்ற புனைபெயரிலும் எழுதவேண்டிய உயிருக்குப் பயந்த சூழ்நிலை. அவை தடையாக இருந்தனவா என்று பார்க்கவேண்டும்.
தமிழ் ஈழப் போராட்டத்துக்கு ஆயுதம் ஏந்தியவர்களின் உடன்பிறப்புகளுக்கு எதிரான மனிதவுரிமை துஷ்பிரயோக செயற்பாடுகள்தான் அவர்களின் மௌனத்துக்குக் காரணமோ என்றும் பார்க்கவேண்டும். குறிப்பாகச் சகோதர படுகொலைகள்> இயக்கங்களுக் கிடையேயான படுகொலைகள்> இயக்கங்களுக்குள்ளே நடந்த படுகொலைகள்> அரசியல் தலைவர்கள்-புத்திஜீவிகள் படுகொலைகள்> தந்திக் கம்பப் படுகொலைகள்---கோழிக் கள்ளன்> பிற்பொக்கட் கள்ளனும் தந்திக் கம்பத்தில் தொங்கினான். இந்த விரும்பத்தகாத மனிதவிரோத செயல்கள் தடையாக இருந்தனவா என்றும் நோக்கவேண்டும். எவ்வாறாயினும்> உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் மக்கள் எண்பது சதவீதத்துக்கு மேல் விடுதலைப் போரில் புலிகளின் பங்களிப்பை பௌவியமாக ஏற்றுக்கொண்டனர். ஆனால் அந்தளவுக்கு ஆதரவு நூல்கள் வெளிவரவில்லை. ஒரு காரணம் தமிழ் நூல்களை விற்று முதலைக்கூட எடுக்கமுடியாத நிலைமை என்றும் கூறலாம். அந்தளவுக்கு வாசிப்புப் பழக்கம் வருத்தப்படக்கூடியதாக இருக்கிறது. இன்னொன்று போர்க் காலத்தில் தரவுகளைச் சேகரிப்பதில் இருந்த தடைகளும் காரணமா என்றும் பார்க்கவேண்டும்.
எனது பங்களிப்புப் பற்றி வினா எழுப்புகிறீர்கள். எனது பணி எழுபதாம் ஆண்டுகளிலேயே ஆரம்பித்துவிட்டது. சிரித்திரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மனித தெய்வம் சிறுகதை தமிழ் அரசுக் கட்சியின் கொள்கையை பரப்பும் கதை. அக்காலத்தில் வன்னியான்> மட்டக்களப்பான்> யாழ்ப்பாணி என்று வடகீழ் மாகாண மக்கள் ஓட்டாது சிதறியிருந்தனர். அதனை இல்லாது ஒழிக்க முனைந்த தமிழ் அரசுக் கட்சிக் கொள்கைக்குச் சார்பாக படைக்கப்பட்ட கதை. இன்னுமொரு முதலாவது பரிசு பெற்ற கதை முட்டைப் பொரியலும் முழங்கையும். இது தரப்படுத்தலின் மாகெடுதல் பற்றியது. வன்னி நாவல் ஒரே குடும்பத்தின் ஆறு புத்திரச் செல்வங்களும் புனிதப் போரில் புரிந்த பங்களிப்பைப் பேசுகின்றது. வழிதவறிய போராளிகள் பற்றிய மறைவில் ஐந்து முகங்கள் நாவலின் இறுதியில் உலகறிந்த லண்டன் ஓல்ட் பெயிலி மத்திய கிறிமினல் நீதிமன்றத்தில் இலங்கை அரசின் இனப்படுகொலைகள் அம்பலப்படுத்தப்பட்டு அதற்கு எதிராகவே புலிகள் துப்பாக்கி ஏந்துகிறார்கள் என்று பேசப்படுகிறது. அதே நாவலில் மட்டக்களப்புச் சத்துருக்கொண்டான் கிராமத்தில் இராணுவம் புரிந்த அக்கிரமம் பற்றிய பதிவை அப்படியே சொல்ல விரும்புகிறேன்.
முதலில் நான் சர்வதேச மனித உரிமைகள் நிறுவனம் வெளியிட்ட ஒரு குறிப்பை வாசிக்கிறேன்.
1990ஆம் ஆண்டு செப்ரம்பர் 10ஆம் திகதி இரவு பதினொரு மணிக்கு மட்டக்களப்பில் உள்ள சத்துருக்கொண்டான் தமிழ் கிராமத்துள் சிங்கள இராணுவம் புகுந்து நடாத்திய படுகொலைகள் மனித குலத்துக்கே அவமானம் தருவது. சத்துருக்கொண்டான் இராணுவ முகாமிலிருந்து கிராமத்துள் புகுந்த படைவீரர் 185 கிராம மக்களைக் கைது செய்து தமது படை முகாமுக்கு இழுத்துச் சென்றனர். முதலில் அவர்களது வாய்கள் பிளாஸ்ரரினால் ஒட்டப்பட்டன. பின்னர் அவர்களது கைகளையும் கால்களையும் கட்டினர். தொடர்ந்து கூரிய கத்திகளாலும்> கட்டாரிகளாலும் கோடாலிகளாலும் யாவரையும் வெட்டியும் குத்தியும் கொத்தியும் கொன்றனர். அவ்வாறு கொல்லப் பட்டவர்களில் ஒன்றரை வயது சுபோசினி> மூன்று வயது துளசி> ஏழுவயது சித்திரவடிவேலு> ஒன்பது வயது சியாமளா என்போர் அடங்குவர். அவர்களை வழிநடத்திய ஜே. பெரேரா என்ற படை முகாம் அதிகாரி மேலும் ஒருபடி முன்னேறி சுமதி என்ற நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்மணியைக் காலில் பிடித்து இழுத்துவந்து> முதிரை வாங்கில் படுக்க வைத்து> அந்தத் தாயின் வயிற்றைச் சமயலறைக் கத்தியால் கீறி எட்டுமாதக் கருவை வெளியே எடுத்து இரண்டு துண்டாக வெட்டித் தனது கீழ்ப்படிவான படைவீரர்களுக்குத் தனது வீரப்பிரதாபங்களைப் பகிரங்கப்படுத்தி ஓவென்று சிரித்தான்.
மனிதவுரிமைகள் சார்ந்து நான் எழுதுகின்ற போதிலும்> எல்லா நாவல்களிலும் இலங்கை அரசதும்> இலங்கை இராணுவத்தினதும் இன அழிப்பை அம்பலப்படுத்தி வருகின்றேன்.
15. எந்தவொரு படைப்பிலக்கியமும் செய்யாமல் விமர்சனம் செய்பவர்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
கதிர்.பாலசுந்தரம்:
விமர்சனம் என்பது ஆக்கத்தின் சில இலக்கியப் பண்புகளை சீர்தூக்கிப் பார்ப்பது. ஒரு நாவலை எடுத்துக்கொண்டால் அதனை முழுமையாக நோக்குவதற்கு அப்பால் அதில் என்ன என்ன கிளைப் பகுதிகளை விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதனைப் புரியாமல்> அத்துறை பற்றிக் கற்றுத்தேறாமல் விமர்சனம் செய்வோரும் உண்டு. அவ்வாறானவர்கள் எழுந்தமானத்தில் விமர்சனம் செய்வதும் அதனை பிரசுரிப்பதும் வருந்தத்தக்கது.
மேற்கு நாடுகளில் படைப்பிலக்கியம்> அது சார்ந்த விமர்சனக்கலை என்பன பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு வரை வளர்ந்துள்ளன. அங்கு கற்றவர்கள் வாசிப்பு அனுபவத்தை வைத்துக்கொண்டு படைப்பிலக்கியம் செய்யாமல் விமர்சனம் செய்பவர்களும் உண்டு. ஐக்கிய அமெரிக்காவில் எண்ணூற்று இருபத்திரண்டு படைப்பிலக்கிய பட்ட படிப்பு கற்கைத்துறைகள் உள்ளன. அவற்றுள் முப்பத்தேழு முனைவர் பட்டம்---Ph.D.--- வழங்குபவை.
16. நீங்கள் தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் சளைக்காமல் எழுதி வருகின்றீர்கள். செம்மைப்படுத்துதல் (editing) பற்றி என்ன சொல்ல வருகின்றீர்கள்?
கதிர்.பாலசுந்தரம்:
எந்த எழுத்தாளனும் தனது ஆக்கங்களை இன்னொருவர் பார்வைக்கு கொடுப்பது நல்லது. தவிர்க்க முடியாதது என்றும் சொல்லலாம். அந்த வசதி இல்லாத எழுத்தாளர்கள் ஆக்கங்களை குறைந்தது ஒரு மாதமாவது மூடிவைத்துவிட்டு தானே மீள் பார்வைசெய்த பின்னர் அச்சேற்றலாம். ஆரம்ப எழுத்தாளர்கள் செம்மைப்படுத்துவிக்காமல் பிரசுரிப்பதைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும்.
17. உங்கள் His Royal Highness, The Tamil Tiger என்ற ஆங்கில நாவல்Publish America’ பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டது. அந்த நாவல் அந்தப் பதிப்பகத்தினரால் editing செய்யப்பட்டதா? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.
கதிர்.பாலசுந்தரம்:
Random பதிப்பகத்தார் போல அமெரிக்காவில் ஆகக்கூடுதலான நூல்களை ஆண்டு தோறும் வெளியிட்ட அவர்கள் எனது நாவலை செம்மைப்படுத்தல் செய்யவில்லை. பிரசுர ஒப்பந்தத்துக்கு முன்னர் தரம் பார்க்கும் பிரிவினர் கையில் அது ஒரு கிழமைக்கு மேல் இருந்தது. அவர்கள் எந்தத் திருத்தமும் செய்யாமல் பிரசுரத்துக்குத் தகுதியானது என்று முடிவுசெய்தார்கள்.
உங்கள் இரண்டாவது பகுதிக்கான விடை: தமிழ் எழுத்தாளர்களுக்கு இல்லாத ஒரு வசதி ஆங்கில எழுத்தாளர்களுக்கு உண்டு. இலக்கணப் பிழைகளை உடனுக்குடன் திருத்தும் வசதி இணைய தளத்தில் உள்ளது. மேலும்> இணைய தளத்தில் பல நூற்றுக் கணக்கான செம்மைப்படுத்தும் தளங்கள்-Proof Reading---உண்டு. அவர்களை நாடுபவர்கள் மனதில் இரண்டு விடயங்களை இருத்திக் கொள்ளவேண்டும். முதலாவது சொற்களை எண்ணி அதற்குப் பணம் டொலர்களில் அறவிடுவார்கள். ஈழத் தமிழ் எழுத்தாளனுக்கு அது கட்டுப்படியாகாது.
இரண்டாவது> சீராக்கம் செய்வோரின் தகுதி கேள்விக்குரியதாகும். எனக்கு ஐந்துபேர்வரையான செம்மைப்படுத்துவோரைத் தெரியும். ஒருவர் இங்கிலாந்து வாசி. மற்றவர்கள் அமெரிக்கர்கள். அவர்கள் எவரும் ஆங்கில இலக்கணத்தைப் பூரணமாக படிக்கவில்லை என்பது எனது திடமான முடிவு. நான் அவர்களது இலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டினால் சிலர் ஏற்றுக்கொள்கிறார்கள். சிலர் அப்பிழை இப்போது அமெரிக்காவில் வழமையில் உள்ளது என்று சளாப்புகிறார்கள். எனது இலக்கண அறிவைக் கண்டு வியப்பவர்களும் உண்டு.
அமெரிக்கர்கள் கனடியர்கள் ஆகியோரின் ஆங்கிலத்துக்கும் ஈழத்தில் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்றவர் ஆங்கிலத்துக்கும் வேறுபாடு உண்டு. அவ்வாறானவர்களின் படைப்புக்களின் சில வாக்கியங்களை ஆங்கிலேயர்கள் சரியாக விளங்கிக்கொள்ள மாட்டார்கள். தமிழ் எழுத்தாளர்கள் தமது ஆக்கங்கள் உலக சந்தையில் விற்பனையாக வேண்டும் என்று ஆவல்கொண்டால்> தமது படைப்புகளை ஆங்கிலேயர் மூலம் சீராக்கம் செய்வது தவிர்க்க முடியாதது என்பது எனது கருத்து. நல்ல சீராக்கம் செய்பவர் யார் என்று கண்டுபிடிப்பது சிரமமாயுள்ளது. எழுத்தாளர்கள் சீராக்கத்தின் பின்னர் தாம் அதை மீள்பார்வை செய்வது கட்டாய தேவையாகும்.
18. நீங்கள் எழுபத்திரண்டு வயதைத் தாண்டிய பின்னர்தான் இலக்கியப் படைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளீர்கள். அதுவும் பல்வேறுவகையான இலக்கிய படைப்புகளிலும் ஈடுபட்டுள்ளீர்கள். அதைப்பற்றிக் கூறுங்கள்.
கதிர்.பாலசுந்தரம்:
இப்பொழுது 87 வயதாகிறது. இந்தப் பதினைந்து ஆண்டு காலகட்டத்தில் பதினொரு நூல்களை ஆக்கம் செய்துள்ளேன். அரசியல் சார்ந்த அமிர்தலிங்கம் சகாப்தம், அமிர்தலிங்கம் அவர்களது அரசியல் தனித்துவ வித்துவம் பற்றிய சத்தியங்களின் சாட்சியம், கோப்பாய்க் கோமான் வன்னியசிங்கம் அவர்கள் தமிழரசுக் கட்சியை வடகிழக்கில் நிலைப்படுத்திய பங்களிப்பு பற்றிய சாணக்கியன் நூல்கள். இவை தமிழ் அரசுக் கட்சியுடன் எனக்கு இருந்த பிணைப்பின் வெளிப்பாடு.
பொற்காலம் நூல் எனது தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அதிபர் பதவிக்கால நிர்வாக செயற்பாடுகள் பற்றிய ஞாபகக் குறிப்பாகும். இருபதாம் நூற்றாண்டு சிவதலம் ஆவரங்கால் வரலாறு--- இது இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் நாகரிகத்தின் முதற்படியில் தவித்த ஆவரங்கால் பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி> அந்த நூற்றாண்டு முடிவில் நவீன உலகத்தில் தலைநிமிர்ந்து நிற்பதைப் பேசுகின்றது.
மறைவில் ஐந்து முகங்கள் சிவப்புநரி வன்னி என்பன போர்க்கால நாவல்கள். அவற்றின் ஆங்கில வடிவம் Blood And Terror’, ‘His Royal Highness, The Tamil Tiger’, ‘A Militant’s Silence’ என்பனவாகும். முதலிரு நாவல்களும் மனித உரிமை ஆர்வலர் என்ற வகையில்> மனித உரிமை மீறல்களை காரசாரமாக விமர்சனம் செய்யும் நாவல்களாக இருப்பினும்> ஏலவே கூறிய வண்ணம் இலங்கை அரசின் இனவிரோத செயற்பாடுகளையும்> இலங்கை இராணுவத்தின் தமிழ் மக்கள் தொட்ட அக்கிரமங்களையும் வன்மையாக விமர்சிக்கின்றன. ஒரு குடும்பத்தின் ஆறு பிள்ளைகளும் போர்க்களம் செல்வது பற்றிய வன்னி நாவல்> வன்னி மக்களின் போர்க்கால புனித பங்களிப்பையும் இழப்பையும்> இன்றைய அவலத்தையும் பேசுகிறது. அதே வேளை> இத்தனைக்கும் ஊடாக வன்னி நாவல் கண்ணகி அருந்ததி வழியில் தமிழ் மங்கையரின் கற்பு நெறி மகிமையை வெளிச்சமிடுகிறது.
*











No comments:

Post a Comment