Monday 12 October 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 18 - ஓடிப்போனவள்

 



நேரம் காலை 9.00 மணி. இந்தியாவுக்கு விமானம் புறப்பட இன்னும் ஆறரை மணி நேரம் மட்டுமே இருந்தது.

                அமிர் தன் எதிரே தொலைக் காட்சிப் பெட்டியின் மேல் இருந்த கறுப்பு குரங்கு-பொம்மையைப் பார்த்தான். அது முற்றத் துறந்த முனிவனைப் போல கைகளை முழங்காலில் பதித்து கண்களை மூடியபடி செங்குத்தாக இருந்து தவம் செய்வது போல அவனுக்குப்பட்டது.

                கில்லாடியும் நண்பர்களும் அயர்லாந்திலிருந்து திடீரென வந்தால் என்ற அச்சம் அமிரை மிரட்டித் துன்புறுத்தியது.

                 அப்பொழுது தொலைபேசி மணி குரல் கொடுத்தது. அமிர் றிசீவரை எடுத்து ஹலோ" என்றான்.
ஹலோ அமிர் அண்ணா, நதியா பேசுகிறேன். விமான நிலையத்துக்கு எத்தனை மணிக்குப் புறப்படுகிறோம்?" என்று நதியா கேட்டாள்.
“12.00 மணிக்கு" என்று கூறியவன் நான் கேட்ட கேள்விகளுக்கு இன்று பதில் சொல்வதாகச் சொன்னாய்"  என்றும் ஞாபகப்படுத்தினான்.
ஆம். இரண்டு கேள்விகள், இல்லையா?" அவளது குரல் கணீரெனப் போனில்கேட்டது.

ஓம்."
ஒன்றை மட்டும் கேளுங்கள். இப்பவே ரெலிபோனில் பதில் சொல்கிறேன். மற்றக் கேள்விக்குப் பதில் விமான நிலையத்துக்குப் போகும் வழியில் சொல்கிறேன்."

|அதுவரை நீ என்மீது காட்டிய நட்பு பற்றியது. அதுதான் .... " அமிர் கேள்வியை முடிக்கவில்லை. அவள் அமிர் என்ன கேட்க விரும்புகிறார் என்பதை ஊகித்திருக்க வேண்டும்.
ஹலோ அமிரண்ணா, நான் உங்கள் மீது காட்டிய அன்பைப் பற்றியா கேட்கிறீர்கள்?" என்ற அவளது கேள்வி அவனுக்கு வசதியாகப்போயிற்று.
|அதேதான். சந்தர்ப்பம் கிடைத்த நேரம் எல்லாம். என்னைச் சுற்றிச் சுற்றி வந்தாய். நான் தூரப் போன சமயங்களில்கூட விடாமல் ........" அவன் தான் சொல்ல நினைத்ததைச் சொல்லக் கூச்சப்பட்டான்.
நான் மிகுதிக் கேள்வியைச் சொல்லவா?"
ஓம் சொல்லு."
கேட்காமலே பணந்தந்தாய். ஏன் என்று கேட்கிறீர்கள். சரியா?"
ஓம். முன்பின் தெரியாத எனக்கு எதற்காக தரும தேவதை மாதிரி உதவினாய்?"
இல்லாதபோது கை ஏந்திப் பழகிய நான், இருக்கும் போது கொடுப்பதுதானே முறைமை. உங்களுக்காக நான் எதையும் உங்களுக்குத் தரவில்லை."
ஹலோ நதியா, நீ மாறிவிட்டாய் மட்டுமல்ல உன் பேச்சின் தொனியும் மாறிவிட்டது. உன்னுடைய தத்துவத்தை கூற இது நேரமல்ல."

                அவள் சிறிது நேரம் எதுவும் பேச வில்லை.
நதியா. போனை வைத்திடாதே."
அமிரண்ணா, நான் சொல்வதைக் கொஞ்சநேரம் மௌனமாகக் கேளுங்கள். நான் ஏன் பணந்தந்தேன் என்பது புரியலாம், சிலவேளை புரியாமலும் போகலாம்."

                அவள் அவனுக்குப் பண உதவி செய்தது ஏன் என்று அவளுக்கே தெரியாது. அவன் பணத்துக்குக் கஷ்டப்பட்ட சமயத்தில் அவனுக்கு உதவி செய்யாமல் நழுவ அவள் எண்ணியதே இல்லை. அதுமட்டுமல்ல அப்படிச் சின்னத்தனமாகச் சிந்திக்க அவள் படைக்கப்பட்டவளல்ல என்பது அவளுக்கும் புரியவில்லை அவனுக்கும் புரியவில்லை. அதனால் அவள் கருவிலே திருவருள் பெற்றவளா என்ற ஐயம் மெல்லிதாக அவனது மனதைக் கிள்ளியது.

அத்தோடு ஏன் சமயம் கிடைத்தபோதெல்லாம் என்னை விடாமல் தொடர்ந்தாய்? சொல் நதியா."
சற்று விளக்கமாகச் சொல்லவா?"
சொல்லு நதியா."
நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரமுன்னர் - அதாவது நான் லண்டனுக்கு வந்து நாலாவது வாரம் தொடக்கம் -  என் ஓய்வுநேரம் முழுவதும் கோடிப்புறத் தோட்டத்திலேயே கழிந்தது. என் கவலையைச் சொல்லி ஆற எனக்கு லண்டனில் யாரும் இல்லை. வானம்தான் என் துணை. வானத்துத் திறந்த வெளியைப் பார்த்து பார்த்து தினம் தினம் என் துர்பாக்கிய கதையை கண்ணீர் வழிய ஒப்பாரிவைத்துச் சொல்லிக்; களைத்தேன். நீங்கள் வந்ததின் பின்னர்தான் எனது அழுகை ஓய்ந்தது" என்று கூறி அவள் ஓய்ந்தபொழுது அமிரின் குரல் மறுமுனையிலிருந்து கேட்டது.

நதியா, நான் லைனிலே நிற்கிறேன் நீ சொல்லு."

                “நான் உங்களைச் சந்தித்த நாள் முதல் உங்களைச் சுற்றிச் சுற்றி வந்ததுக்குக் காரணம், லண்டனில் நரகவேதனையில் உழன்று வாழ்ந்த எனக்கு, உங்களுடைய திருமுகம் நிழல் மரமாக இருந்ததே. கால கதியில் நான் உங்கள் நிறை குடம் போன்ற தளும்பாத உத்தம குணங்களினால் என்னை அறியாமலே உங்களை என் உடன்பிறப்பாக்கிக் கொண்டேன். குளிர்மையான, அழகான இளம் பெண்கள் எட்ட நின்றாலே, வாய்ப்புக் கிட்டினால் கிட்ட இழுத்து இச்சைவெறி முறிக்கிற ஆண்கள் சமூகத்திலே, ஒட்டி நின்றாலும் தளும்பாத நிறை குடமாக என்னோடு பழகினீர்கள். அந்த மேன்மையான குணத்தினது மட்டுமல்லாமல் உங்கள் கம்பீரமான தோற்றத்தினதும் விசிறி நான். உங்களோடு பழகிய காலங்களில் என் இரத்தத்தோடு ஒன்றி நின்று வதைத்த வேதனைகள் மறைந்திருந்தன. என் வேதனைகளை மறக்கவே நான் உங்களைத் தேடித் தேடி ஓடிவந்தேன்."

                றிசீவரைக் காதில் வைத்தபடி நி;ன்ற அமிருக்கு அவளது வார்த்தைகள் குண்டூசியால் குத்துவது போலவும், அதே வேளை சுமை குறைந்தது போலவும் இருந்தது. இன்னும் ஏதோ அவளைக் கேட்க மனம் உந்தியது. 
நதியா, அத்தோடு நீ என்னை அடிக்கடி ............... " அமிரினால் தான் நினைத்ததைக் கேட்கமுடியவில்லை.
அமிரண்ணா, என்ன குரல் வர மாறுகிறது? நீங்கள் ஒரு விடயத்தைக் கேட்க விரும்புகிறீர்கள், இல்லையா? அந்த அருவருப்பான சமாசாரத்தை எப்படிக் கேட்பது என்று தயங்குகிறீர்கள். நான் உங்கள் அருகே இருந்து உங்கள் அங்க லட்சணங்களில் அடிக்கடி சொக்கினேன். அதன் அர்த்தம் தேடுகிறீர்கள், இல்லையா?"
ஓம்." அவன் சுருக்கமாகச் சொன்னான். அவனுக்குக் கூச்சமாகவும் திகைப்பாகவும் இருந்தது.
அமிரண்ணா, ஒரு தங்கையோ அக்காவோ தனது சகோதரனின் கம்பீர சொளந்தரியத்தில் சொக்குவதில்லையா? நான் உங்களை என் உடன்பிறப்பாகவே கருதினேன். தவிர நான் எந்தத் தீய சிந்தனையையும் மனதில் வைத்துக் கொண்டு அப்படிச் செய்யவில்லை. வீதியிலே ஓர் அழகான பெண்ணைக் கண்டால் கண்களை மூடுகிறீர்களா? அழகை மனம் இரசிக்கிறது. மனம் அவளைப் பிடித்துக் கற்பழிக்கவா விரும்புகிறது? உங்கள் அழகை இரசித்தேனேயன்றி, அதனை அணைத்து மடியில் பொத்திக்கொள்ள நான் கற்பனையிலும் எண்ணியது கிடையாது."

                அவளின் பேச்சைக் கேட்ட அமிர் 'படிப்பு அதிகமில்லாத, பின்தங்கிய கொடியில் துளிர்த்த ஒரு சின்னப் பெட்டையால் எப்படி ஆழமாக நியாயம் பேச முடிகிறது?” என்று வியந்தான். சோகம் மனிதனைத் தத்துவம் பேசவைக்கிறது என்று எண்ணியபொழுது அவனின் பாரம் இறங்கியது. இருப்பினும் அவள் ஏன் இந்தியாவுக்கு ஓடவேண்டும். அது அவனுக்குப் புரியவில்லை. ஏன் போகிறாள்? திரும்பி வருவாளா? அவன் தலை சுழன்றது. அப்பொழுது நதியாவின் குரல் ரெலிபோனில் மீண்டும் கேட்டது.

அமிரண்ணை, லைனில் நிற்கிறீர்களா?"
ஓம். இன்னொரு கேள்வி. பதில் சொல்கிறியா?"
இங்கே வாருங்கள். நான் பயணத்துக்கு ஆயத்தமாகிறேன். விமான நிலையத்துக்குப் போகிற வழியில் காரில் பேசலாம்."

x
                                            

                கில்லாடி வீட்டு அழைப்பு-மணிக் குமிழை அமிர் அழுத்தினான். நதியா கதவைத் திறந்தாள். நல்லெண்ணெய் மணம் அமிரின் மூக்கைத் துளைத்தது. விரித்த கண்மடல்களை மூடாமல் தலையைத் தாழ்த்தி அவளை நோக்கினான். 'என்ன! நான் காண்பது என்ன கனவா அல்லது நிஜந்தானா? இது என்ன இவள் கோலம்? மனம் பேதலித்து விட்டதா?” என்று தன்னையே வினாவினான்.

                நதியாவின் கோலம் அவனைத் திகைக்க வைத்தது. அவனுக்குத் தனது தலை பலூன் மாதிர ஊதி வெடிக்கப் போவதாக ஒரு மனப்பிரமை. அவனது மூளை பலாலி இராணுவம், யாழ் நகரக் குடிமனைகளை நோக்கி, ஏவிய செல் போலக்; கூவியது.

                நதியா அவனுக்குச் சைகைப் பாசையில் வரும்படி சொன்னாள். அவன் அவளைப் பின்தொடர்ந்து சென்று வரவேற்பறையில் ஒரு சோபாவில் அமர்ந்தான்.

                கில்லாடியளவு உயர குங்குமப் பொம்மையின் அப்பால் இருந்த மீன் தொட்டியை அமிர் பார்த்தான். தெளிந்த நீர். மின்சார ஒளியில் நீல பகைப்புலத்தில் பச்சைத் தாவரங்களுக்கூடாக வண்ண வண்ண மீன்கள் காட்சிகொடுத்தன. சில மீன்கள் நீந்தின. சில அசையாது வாலை அசைத்தபடி ஒரே இடத்தில் நின்றன. ஒரு மீன் நீரின் மேலே மிதந்தது. 

                அமிர் மீண்டும் நதியாவின் கோலத்தை ஏறவிறங்கப் பார்த்தான்.

                பழைய நீலச் சட்டையும் பச்சைப்  பாவாடையும் அணிந்திருந்தாள். அவை அந்தக் கமக்காரன் கொழும்பில் கொடுத்த பழைய உடுப்புக்கள். காலிலே யாழ்ப்பாணத்தில் அவள் தாய் கொடுத்த செவி அறுந்த பாட்டா றப்பர்ச் செருப்பு. அதற்கு முன்னர் அணிந்திருந்த எந்த நகையும் அவள் மேனியில் இல்லை. காதில் தொங்கி ஆடிக் கண்களைப் பறித்த சிவப்புக் கல் தொங்கிட்டான் இருந்தவிடத்தில் அவள் வரும் பொழுது அணிந்திருந்த கிலிட்டுத் தோடு. கையை அலங்கரித்த ஐந்து சோடி 22 கறற் தங்கக் காப்புகள் இருந்தவிடத்தில் இரண்டுசோடிக் கண்ணாடிக் காப்புகள் பல்லைக் காட்டின. விரல்களில் மோதிரங்கள் இல்லை. இரட்டைப்பட்டுச் சங்கிலியும் இலைவடிவ சிவப்பு இரத்தினக் கல் பதித்த பதக்கமும் அழகுபொழிந்த கழுத்தில் ஒரு நூல்போன்ற ஒற்றைப்பட்டுச் சங்கிலி கூனிக்குறுகிக் காட்சி அளித்தது. அதுவும் அவள் வரும்பொழுது கொண்டுவந்ததே. சட்டையின் உள்ளே தவம் செய்த தாலியும் கழுத்தில் இல்லை. நெற்றியில் குங்குமப் பொட்டு இல்லை. தூய வெள்ளை வீபூதி ஒரு மெல்லிய குறுகிய கோடாகத் துலங்கியது.

                அவள் அமிரின் நடு உச்சி பிரித்து வாரிய முடியை ஓயாமல் பார்த்தபடி இருந்தாள். அவனும்  அவளை மீண்டும் மௌனமாக நோக்கினான். 

                அவளது போனி ரெயிலின்ஆனந்த நடனம் ஓய்ந்திருந்தது. அந்தவிடத்தில் புதிய பிறவி எடுத்த இறுகப் பின்னிய கூந்தல் அட்டைபோல் முதுகோடு ஒட்டியிருந்தது. அவளது அந்த மாயப் புன்னகை மரணித்திருந்தது. ஆனால் கண்கள் தெளிவாக இருந்தன. அதெப்படி?

உது என்ன கோலம் நதியா?" அமிரின் கேள்வி துண்டு துணடாக முறிந்து வந்தது. அவனால் எதையும் ஊகிக்க முடியவில்லை. ஏன்? ஏன்? ஏன் என்ற வினா மட்டும் அலை மோதியது.
இதுவரை காலமும் நீங்கள் பார்த்தது போலி நதியா. இப்பொழுது பார்ப்பதுதான் உண்மையான நதியா. இணுவில் செம்பாட்டு மண்ணில் முளைவிட்டுத் தளிர்த்து வளர்ந்த வடலி நான். நான் நானாகவே வாழவிரும்புகிறேன். அதன் முதற் கோலந்தான் இது."

                ஒரு சின்னப் பெட்டையால் ஞானியைப் போல எப்படிக் கதைக்க முடிகிறது? வாழ்க்கையின் சில சம்பவங்கள் மனிதனின் வாழ்க்கைப் பாதையை முற்றாகத் திசை திருப்பக்கூடிய அத்தனை சக்தி படைத்தவையா? அதனை அலசிப்பார்க்க அவனுக்கு நேரம் இல்லை. 'கருவில் திருவருள் பெற்றவளோ?” என்ற நினைப்பு மீண்டும் அவன் உள்ளத்தில் மின்னி மறைந்தது.  

நதியா உன்னைப் பார்க்க என்னால் சகிக்க முடியவில்லை. உன்னுடைய உடைமைகள். அவற்றை நீ உன்னோடு கொண்டு போகவில்லையா?" என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.

                அவனை புன்னகையோடு நோக்கிய பின்னர் அவள் தனது கையில் வைத்திருந்த  பேக்கைக் காட்டிச் சொன்னாள்.
இவைதான் என்னுடைய உடைமைகள். இந்தப் பழைய பேக்நான் லண்டன் வரும்போது கொண்டு வந்தது. இதற்குள் நான் யாழ்ப்பாணத்திலிருந்து வரும்போது கொண்டு வந்த மூன்று பழைய உடுப்புக்கள் மட்டுமே உள்ளன. அதனைவிட இன்னொரு பொருள். அதனைமட்டுமே நான் லண்டனிலிருந்து என்னோடு எடுத்துச் செல்கிறேன். லண்டனைவிட்டு வெளியேறும் பொழுது நான் கில்லாடியின் எந்த அடையாளத்தையும் கொண்டு செல்ல விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் எனக்குத் தந்து நான் சேமித்த வாழ்க்கை உதவிப் பணத்தைக்கூட நான் எடுத்துச் செல்ல விரும்பவில்லை. சென்னையில் இருந்து வேதாரணியம் செல்ல மட்டும் சொற்ப பணம் கொண்டு போகிறேன்," என்று கூறிவிட்டு அமிரைப் பார்த்தாள்.

                அமிர் நதியாவைப் பார்த்தான். மேகம் இருண்டு மழைபொழிய தயாராவதுபோல அவன் கண்கள் இருண்டு நீர் கொட்ட ஆயத்தமாகின. லண்டனில் அதுவரை அவனைக் கௌரவமாக வாழவைத்தவள் அவள்தான். செஞ்சோற்றுக் கடனுக்காக மட்டும் அவன் அழவில்லை. அதற்கு மேலாக ஏதோவொன்று அவனை மிகவும் வருத்தியது. தனது கலங்கிய கண்களைப் பார்த்து எதுவித பதட்டமும் இல்லாமல் நின்ற நதியாiவை நோக்கி,

நதியா, உன்னை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஏன் கில்லாடியைவிட்டு ஓடுகிறாய்? ஏன் நதியா உந்த முடிவுக்கு வந்தாய்?"
நீங்கள் இன்னொரு கேள்வி என்றீர்களே. அந்தக் கேள்வியின் பதில்தான் நான் லண்டனை விட்டு ஓடக் காரணம்."
அவனுக்கு அவள் பதில் புரியவே இல்லை.
சரி. அந்தக் கேள்வியின் பதிலைச் சொல்லு" என்று கேட்டுவிட்டு அவளை ஆவலோடு பார்த்தான்.
பதிலைத் தொடங்கினால் சிலவேளை நேரந் தவறிவிடும். ரெக்சியைக்கூப்பிடுங்கள். பிரயாணம் செய்தபடி பேசுவோம்."

ரெக்சிவரச் சுணங்கியது.

x
                                                              
                 நேரம் 2.55 மணி. விமானத்தைப் பிடிக்க அரும்பொட்டான நேரமே இருந்தது. ரெக்சி விமான நிலையத்துக்கு நெடுஞ்சாலை வழியே விரைந்து கொண்டிருந்தது. பின் ஆசனத்தில் நதியாவின் அருகில் அமிர் இருந்தான். ரெக்சிச் சாரதி ஒரு கறுவல். அது அவர்களுக்கு வாய்விட்டுப் பேச வசதியாக இருந்தது.

                அவர்கள் உரையாடல் அமிரின் இறுதிக் கேள்விக்கு இன்னும் வரவில்லை. அமிர் அந்த விடயத்துக்குள் அவளை இழுக்க முனைந்த வேளை, அவளே அதனைச் சொல்லத் தொடங்கினாள்.

அமிரண்ணா, நான் நேற்றுச் சொன்னனே லண்டன் வந்து நாலு கிழமைகளுக்கு மேல் என் மகிழ்ச்சி நிலைக்கவில்லை என்று. நினைவிருக்கிறதா?" என்று நதியா அவனைக் கேட்டாள்.

ஓம். அப்படி என்ன நடந்து ......" என்று அவசரப்படுத்தினான்.
அமைதியாகக் கேளுங்கள். என் திருப்பத்திற்கு கில்லாடியும் கூட்டாளிகளும் இரவுவேளைகளில் போதையில் புசத்திய செய்திகளே காரணம். அவை பழுக்கக் காய்ச்சிய உலோக அம்புகளாக என் இருதயத்தைப் பொசுக்கின. அப்படி இருக்காது. வெறியில் புசத்துகிறார்களோ என்ற கேள்வியும் சந்தேகமும் அச்சமும் என்னை மொய்த்து உலைத்தன. தொடர்ந்து அவர்கள் இரவு வேளைகளில் வெறியில் புசத்தும் பொழுதெல்லாம் சுவரோடு மறைந்து பதுங்கிநின்று ஒட்டுக்கேட்டேன். நான் பல இரவுகள் துப்பறிந்து சேகரித்த செய்திகளே என்னை இந்தியாவுக்கு ஒளித்து ஓடும் நிலைக்குக் கொண்டுவந்தன."

                அவள் இரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டுக் காரின் கண்ணாடி யன்னல் ஊடாக வெளியே பார்த்தாள். ஒரே திக்கில் நான்கு ஒழுங்கைகளிலும் வாகனங்கள் ஓடிக்கொண்டே இருந்தன. அதில் வலப்பக்க ஒழுங்கையில் ஓடிக்கொண்டிருந்த காரின் முன் ஆசனத்தில் கறுப்பங்கி நெட்டையன் இருந்தான். அவன் அவளையும் அமிரையும் நோட்டம் பார்ப்பதை அவர்கள் அவதானிக்கவில்லை.

நதியா, நீ ஒட்டுக் கேட்ட செய்திகளில் அப்படித்தான் என்ன செய்திகள் இருந்தன? சொல் நதியா?" அமிர் ஆவல்மேலிடத் தூண்டினான்.
நான் சேகரித்த செய்திகள், வாழையடி வாழையாக நம்மூதாதையோரும் சமய சாத்திரங்களும் வளர்த்து எடுத்த மானிடத்தின் மகத்தான விழுமியங்களை எல்லாம் ஒரு வெறிபிடித்த ஓநாய்கள் கூட்டம் குதறிக் கிழிப்பதை நான் உணரச்செய்தன." அவள் கூறியது அமிருக்குப் பிடிபடவில்லை.
விளக்கமாகச் சொல்கிறாய் இல்லையே? சுற்றி வளைக்காமல் விசயத்துக்கு வா, நதியா."
கழுதைப்புலி இயக்கத்திலே இருந்த காலத்தில், இந்திய சமாதானப் படையின் ஆசீர்வாதத்தோடு கில்லாடி செய்த பயங்கரவாத அட்டூழியங்களைத்தான் சொல்கிறேன்.” 

                அமிர் அமைதியாக அவள் சொல்வதைக் கேட்டபடி ரக்சிச் சாரதியை அவதானித்தான். அவன் எதிர் கண்ணாடியில் தங்களை நோட்டம் பார்ப்பதை அவதானித்த அவன் ஏன் கவனிக்கிறான் என்று குழம்பியபடி,
ஏன் நிறுத்திவிட்டாய்? மிகுதிக் கதையைச் சொல் நதியா" என்றான். 

                அவள் தன் விளக்கத்தை நிறுத்திவிட்டு ரக்சி ஏன் நிற்கிறது என்று வெளியே நோக்கினாள். அது ஒரு சந்தி. பச்சை வெளிச்ச அனுமதிக்காக அந்த ரெக்சி தரித்து நின்றது. அமிர் கைக் கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் 3.25. இன்னும் இருபது நிமிடங்களுள் ரெக்சி விமான நிலையத்தை அடைவது அத்தனை இலேசுப்பட்ட காரியமல்ல என்பது அமிருக்குத் புரிந்தது. அவன் அதனை நதியாவுக்குக் காட்டிக் கொள்ளவில்லை.

 “நதியா உண்மையில் நீ கில்லாடியைத் தூக்கி எறிந்துபோட்டு ஓடுவதற்குரிய சரியான காரணம் புரியவில்லை."
புரியவில்லையா? கேளுங்கள் அமிர் அண்ணா. தமிழ் ஈழ அரசு நிறுவவும் சிங்கள அரசை எதிர்த்து விடுதலைப் போர்புரியவும் ஆயுதம் ஏந்தியவர் போராளி கில்லாடி. செங்குருதி மழை பொழியும் போர்க்களத்திலே புறமுதுகிடாத வீரத்தைக் காட்டவேண்டிய புனித போராளி கி;ல்லாடி. அந்த வீரசொர்க்கம் தரும் புனித கைங்கரியத்தைச் செய்யாமல், வீமன்காமம் பனை அடைப்புகளிலும், தெல்லிப்பழையிலும் குற்றமிழைக்காத அப்பாவிகளான தொப்புள் கொடி உறவுகளை அருவருப்பான தூசன வார்த்தைகளால் வைது, வெஞ்சினம் தலைக்கேறி வெறியாட அடித்துக் குத்தி உதைத்து, சித்திரவதை செய்து, கையெடுத்துக் கும்பிட்டுக் கதறக் கதற, இந்திய சமாதானப் படை வழங்கிய துப்பாக்கியால் சுட்டுக் கொன்று சல்லி தோண்டிய பள்ளங்களை ரணத்தால் அபிசேகம் செய்து, காகமும் நாயும் நரியும் சுவைக்க வைத்து அதர்மம் புரிந்து அக்கிரமம் செய்த விடுதலைப் போராளி கில்லாடியின்; தர்மபத்தினி;த் தாரமாக - தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களின் புனித இலட்சியங்களுக்கு ஈனம் தேடிய அயோக்கியப் போராளி ஒருவனின் ஆசைமிகு அழகான சம்சாரமாக - புனித விடுதலை இயக்கங்களைக் கேவலப்படுத்திய கொடிய போராளியின் பதினாலு பவுண் தங்க மாங்கல்யத்தைக் கழுத்திலே சுமக்கின்ற இல்லத்தரசியாக என்னால் தொடர்ந்து வாழமுடியவில்லை. புனித தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு அவமானம் தேடிய அதர்மத்தின் வாரிசான கில்லாடிதான் எனது கணவன் என்று சொர்க்கத்தில் நிட்சயித்திருந்தால் அந்தச் சொர்க்கமே கயவர்களின் குகைதான்.

பதில் கூறி முடிந்த நதியா பொங்கும் ஆத்திரத்துடன் அமிரைப் பார்த்தாள்.
வாயடைத்து உதறும் உள்ளத்தடன் நதியாவைப் பார்த்துக்கொண்டிருந்த அமிர் இன்னும் சொல்ல உள்ளதா நதியா?” என்று அழுகுரலில் வினாவினான்.

அமிரண்ணா, எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்த கொடுமையைக் கேளுங்கள். தெல்லிப்பழை ஒப்பந்தகாரர் பூபாலசிங்கத்தைச் சுட்டுக் கொலை செய்த கில்லாடியை, அவர் மகன் சுகந்தன் லண்டன் ஈஸ்ற்ஹம் நகர வீதிகளிலே அடிக்கடி காண்பதாக ஒரு இரவு புசத்தினார்கள். மேலும் கில்லாடியோடு நான் நியூ இல்போட் சினிமாவில் காதலுக்கு மரியாதைபடம் பார்த்தபொழுது என் அருகே இருந்து படம் பார்த்த சுகந்தன். கில்லாடியை அடிக்கடி வெறித்துப் பார்த்ததாக மூத்தான் கில்லாடிக்குக் கூறியது என் காதில் தெளிவாக விழுந்தது. அவ்வகையில் நான் சேகரித்த செய்திகள்தான், நான் கில்லாடியின் தாலியை அறுத்து வீசவேண்டும் என்று தீர்ப்பளித்தன."

ஏன் பூபாலசிங்கத்தைக் கில்லாடி கொன்றான்? அது தெரியுமா நதியா உனக்கு?" என்று அமிர் வெகு அக்கறையுடன் விசாரித்தான்.
ஓம் தெரியும். அவரிடம் 25,000 ரூபா பணம் கப்பங் கேட்டவர். கொடுக்கவில்லை. அடுத்த தினம் பொழுதுபட வீட்டுக்குப் போய்க் கூப்பிட்டுத் தலையில் வெடிவைத்துக் கொன்றுள்ளார்."

அமிரின் முகம் சிவந்து கண்கள் கலங்க மௌனமாக நதியாவின் வாயை பார்த்துக்கொண்டிருந்தான். புயலும் மழையும் இடியும் பயமும் ஒருங்கே ஆக்கிரமித்தது போன்ற உணர்வில், தலையை பக்கப்பாட்டில் அசைத்துக்கொண்டிருந்தான்.
       
அமிர் அண்ணா. கில்லாடி மட்டுமல்ல, கில்லாடியின் கூட்டாளிகள், போராளிகள் போர்வையில் உடன்பிறப்புகளுக்கு எதிராகப் புரிந்த மாபாதக அக்கிரமச் செயல்கள் ரணத்தைக் கொதிக்கச் செய்கின்றன. கறுப்புநரி சால்வை மூத்தான் தன் காமவெறிக்கு இரையாக மறுத்த ஓவசியரின் குமரை அச்சுவேலிச் சந்தியிலும், நாதன் மாஸ்டரையும், நவக்கிரி பாலமூர்த்தியின் மகளையும் புத்தூர்ச் சந்தியிலும், ஆவரங்கால் அன்ரியின் மகனை தூவெளியில் அமைந்த தாளம் சோலையிலும் துடிக்கப் பதைக்கக் கொன்ற கொடுஞ் செயல் --- மற்றும் கோட்டான் இயக்கச் சூட்டி வவுனியாவில் வீரசிங்கத்தின் லட்சக்கணக்கான பணத்தைக் கொள்ளை அடித்தபின்; சித்திரவதை செய்து கொன்றதோடு அவரைத் தேடிச் சென்ற அவர் மனைவி மாலதியை உதைத்து, தலைமுடிpயில் பிடித்து தரையில் இழுத்து அவமானப்படுத்தி;ச் சித்திரவதை செய்தமையும் --- மேலும்  ஊத்தைவாளி இயக்க குகன் ஒருதலைக்காமம் குதிரைவிட அந்த மோக வேகத்தில் நர்த்தனாவின் பின்னலில் பூச்சசெருக, நர்த்தனா கொடுத்த செருப்படி பொறுக்காமல் கடத்திக் கதறக் கதறக் கற்பழித்த பின் பெண் உறுப்பில் கிளுவங்கட்டை ஏற்றித் தீக்கொழுத்தியதோடு, பராளுமன்ற உறுப்பினர்கள் தருமரையும் ஆலாலுவையும் கடத்திக் கொன்ற படுபாதகச் செயல்களும் என்னை லண்டனை விட்டுத் துரத்துகின்றன. அந்தக் கொலைஞர்களின் கூட்டத்தில் ஒருத்தியாக இருந்த பாவத்தைக் கழுவ புறப்பட்டிருக்கிறேன். இந்த வழிதவறிய போராளி குள்ளநரிகள் ஈழ விடுலை இயக்கங்களைக் கொச்சைப் படுத்தியதை பகிரங்கப்படுத்தவும், அதே சமயம், களத்தில் போராடிய ஈழ விடுதலைப் போராளிகள் புனிதமானவர்கள் என்பதைப் பதிவு செய்யவும் புறப்பட்டிருக்கிறேன்.
உனது உணர்ச்சி கூறும் செய்தி புரிகிறது நதியா?

அமிர் அண்ணா, பணத்துக்காகவும், பழைய பகைமையைத் தீர்க்கவும், அதிகார வெறிக்காகவும் தமிழ் ஈழ விடுதலைப் புனித போராளிகளையே கொச்சைப்படுத்திய ஒரு கொலைகாரனுடன் வாழ என் மனச் சாட்சி ஒத்துக் கொள்ளவில்லை. என் மனச்சாட்சியைக் கழுத்தில் பிடித்து என்னால் திருக முடியாது. எனது மனச் சாட்சிக்குத் துரோகம் செய்ய என்னால் முடியாது. எனது மனச் சாட்சியைத் திருகிக் கொன்றுவிட்டு நான் கில்லாடியோடு வாழ ஆயத்தமாக இல்லை. அந்த கொடிய மிருகத்துடன் வாழ்ந்ததால் என்னையும் பிடித்த பிரமஹத்தி தோசம் போக்கப் பிராயச்சித்தம் காணப் புறப்பட்டிருக்கிறேன்."

                நதியாவின் கோபக் குரல் ரெக்சியின் சாரதியைப் பிறாண்டியது. அவன் எதிரே மேலே இருந்த கண்ணாடியில் நதியாவைப் பார்த்தான். லண்டன் வீதிகளில் அவள் அணிந்திருப்பது போன்ற பிச்சைக்கார உடையைப் பார்க்க முடியாது. மூக்கைச் சுழித்துவிட்டுத் தன்தொழிலைக் கவனித்தான். 

                காருக்கு வெளியே பார்த்த நதியா அந்த அகன்ற நெடுஞ் சாலையின் பக்கத்து ஒழுங்கையில் ஒரு கார் சமாந்தரமாக ஓடுவதைப் பார்த்த அவள் அதன் முன் ஆசனத்தில் இருந்த ஒருவன் தங்களை நோக்குவதை அவதானித்தாள். பிளெசற் பூங்காவில் கண்ட அந்த நெடிய கறுத்த அங்கி போட்டவனா? அவள் உற்றுப் பார்த்தாள். அவளால் சரியாக அடையாளம் காணமுடியவில்லை.

                அப்பொழுது அமிர் நதியாவைக் கேட்டான்.
நதியா, நீ ஏன் யாழ்ப்பாணம் போகாமல் இந்தியாவுக்குப் போகிறாய்?” 

                அவள் சிரித்தாள். இவ்வளவு காலமும் இல்லாத ஒரு புதுச் சிரிப்பு. அதில் சாந்தம் இல்லை வீரம் தெரிந்தது. இவ்வளவு காலமும் இல்லாத ஒரு தெளிவு அவளது முகத்திலே நர்த்தனம் புரிவதை அவன் உணர்ந்தான். ஆனால் காரணம் அவனுக்குப் பிடிபடவில்லை. அவன் மீண்டும் கேட்டான்.
நீ சொல்வது புரிகிறது. அதற்காக ஏன்; நீ தமிழ் நாட்டிற்கு போகிறாய்?"

                அவள் பதில் சொல்ல முன்னரே ரெக்சி விமான நிலையத்தை அடைந்துவிட்டது. அப்பொழுது விமானம் புறப்பட இன்னும் பத்து நிமிடங்களே உள்ளது என்ற ஒலிபெருக்கி ஓசை அமிருக்குக் கேட்டது. இருவரும் ஓட்டமாகச் சென்றனர்;.

                நதியா இந்தியா செல்லும் ஒரு சிறிய பிரயாணிகள் வரிசையின் அந்தத்தில் ஒட்டிக்கொண்டாள். அவளது உடையை பார்த்த பிரயாணிகள் அவளை உற்றுப் பார்த்தனர்.

                வழியனுப்ப அவளின் அருகே நின்ற அமிர் மீண்டும் கேட்டான்.
ஏன் நதியா இந்தியாவுக்கு? விருப்பமில்லாவிட்டால் யாழ்ப்பாணம் போகலாமே? அம்மா, அப்பாவுக்குத் தெரியுமா?"

                அவள் வாய் திறக்கவில்லை. அவள் பேக்குள் கையைவிட்டு ஒரு சிறிய வெங்கலப் பொருளை எடுத்து அமிருக்குக் காட்டியபடி கூறினாள்,

நீங்கள் எனக்கு பரிசளித்த இந்த ஒரு பொருளை மட்டுமே நான் லண்டனிலிருந்து என்னோடு தமிழ்நாடு கொண்டு செல்கிறேன். அமிரண்ணா, இப்பொழுது விளங்குகிறதா ஏன் நான் தமிழ்நாடு போகிறேன் என்று?”
இல்லை.
அங்கிருந்துதான் நான் எனது பிறவிப் பயனை அடையப் பிரயாணம் செய்யப் போகிறேன். தமிழ் நாட்டில் வேதாரணியத்தில் மாலதி அக்கா எனக்காகக் காத்திருப்பாள்" என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து மீண்டும் சிரித்தாள். அது பழைய சிரிப்பல்ல. மிதவாத அரசியல்வாதி அமிருக்கு பிடிபடக்கூடிய சிரிப்பல்ல.

                அந்த வெங்கலப் பொருள் அமிர் லிவர்பூலில் வாங்கி அவளுக்குப் பரிசளித்த பெட்டைப் புலியின் வெங்கலச் சிலை. அவனால் புலியின் சிலைக்கும் அவளது செயலுக்கும் முடிச்சுப் போட முடியவில்லை. அவளை ஏக்கத்தோடு நோக்கினான்.

எங்கே போகிறேன் என்பது புரிகிறதா அமிரண்ணா?”
இல்லை.

உங்களுக்குப் புரிய நியாயமில்லை. நீங்கள் சிங்களவனின் பிச்சைக்காக உதைபட்டும் ரோசம் வராமல், சூடுசொரணை யற்ற உழவு மாடு போல தொடர்ந்தும் சமஷ்டி கேட்டு கை ஏந்தும், வன்முறையைப் பரிகசிக்கும் மிதவாத அரசியல்வாதிகள்.

என்ன சொல்கிறாய் நதியா? தத்துவம் போய் இப்ப அரசியல் பேசுகிறாய்.
அது தான் என்னுடைய புதிய சரித்திரம்.
உன்னை என்னால் புரிய முடியவில்லை.
உங்களையே உங்களால் புரிய முடியவில்லை. எங்களை எங்கே புரியப் போகிறீர்கள்?”
சொல்வதை வெளிப்படையாகச் சொல்.
உங்கள் மிதவாத கட்சியின் சூடு சொரணையற்ற அரசியலை சொல்கிறேன். நீங்கள் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடுவதை வெறுப்பவர்கள். சிங்களவன் தங்கத் தாம்பாளத்தில் வைத்து சமஷ்டி ஆட்சி தருவான் என்று வீணீர் வடிப்பவர்கள்.

                அமிர் அவளுடன் விவாதப்பட விரும்பவில்லை. அவனைப் பொறுத்தவரை, நதியா அவனை லண்டனில் கௌரமாக வாழவைத்த தரும தேவதை. தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம். பெண்களுக்குள் மாணிக்கம். எனவே,

நீ ஒரு புதிராய் இருக்கிறாய், நதியா?” என்று மட்டும் சொன்னான்.

சுதந்திர தமிழ் ஈழம் நிறுவ துப்பாக்கிகொண்டு போராடும் கறுப்பு நரிகளுடன் இணைந்து போர் புரியப் போர்க்களம் புறப்பட்டு இருக்கிறேன். ஆண்டாண்டு காலமாக சிங்களப் படைகளின் அடாவடித் தனங்களுக்குள் சிக்கி இன்னல் உறும் தமிழ் மக்களின் வேதனையைப் போக்க - அதற்காக சுதந்திர தமிழ் ஈழ அரசு நிறுவ - எனது உயிரைப் பணயம் வைத்துப் போராடப் புறப்பட்டு இருக்கிறேன். மனித வாழ்வின் வணக்கத்துக்கு உரிய முதன்மை --- முதலாவது கடவுள், அடுத்து மண், மூன்றாவது மாதா-பிதா. கடவுளை நான் பார்த்ததில்லை. மண்தான் என் கண்கண்ட கடவுள். அந்த மண்ணை காக்கவேண்டிய கடமை என்னை அழைக்கிறது. அந்த மண்ணைக் காப்பதாகச் சொல்லி ஆயுதம் ஏந்திய போலிப் போராளி---யாழ் மண்ணில் உடன்பிறப்புகளை வருத்தி கொடுமைபுரிந்த நரகத்துக்குப் போகவேண்டிய நயவஞ்சகப் போராளி---கில்லாடி புரிந்த அக்கிரமம் கொடுமை, கொள்ளை, சித்திரவதை, கொலைகள்தான் என் மன மாற்றத்துக்குக் காரணம். அதற்குப் பிராயச்சித்தமாக, அந்த பஞ்சமாபாதகங்கள் புரிந்த அயோக்கியனோடு வாழ்ந்து தேடிய பாவங்களைக் கழுவவேண்டும் என்ற மனோ வைராக்கியத்தில், சம்சார வாழ்கைக்கு சாவுமணி ஒலித்துவிட்டுப் புறப்பட்டிருக்கிறேன். விடுதலைப் போராளி விண்ணவர்களும் போற்றி வாழ்த்தும் புனித பொக்கிசம். அந்தப் புனித பயணத்தில் பயணித்து எனது சுக்குநூறாக உடைந்துபோன உள்ளத்துக்கு அமைதி காணப் புறப்பட்டிருக்கிறேன். என்னை வன்னி மகளிர் பாசறைக்கு அழைத்துச் செல்ல மாலதி அக்கா வேதாரணியத்தில் காத்திருக்கிறார். புனித மண்மீட்புப் போர்தான் இனி என் வாழ்க்கையின் இலட்சியம்.

                 தேநீர்க் கோப்பைக்குள் இருந்து வங்கப் புலி ஒன்று சீறிப் புறப்பட்டது போன்றிருந்தது அமிருக்கு. அவன் வாயடைத்துப் போனான். சிலை போல அசையாது நின்றான். அவனின் கலங்கிய கண்கள் நதியாவை நோக்கின.

                கசங்கிய சாயம்போன நீலச் சட்டையும் பச்சைப் பாவாடையும்  அணிந்த நதியா, அமிரைப் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே, கையில் ஏந்திய அந்த அழுக்குமண்டிய வெளுத்த கறுப்பு பேக்குடன்இந்தியா செல்பவர்களின் வரிசையின் அந்தத்தில் ஒட்டியபடி, நார் அறுந்த பாட்டா றப்பர்ச் செருப்பை இழுத்து இழுத்துச் சென்று மறைவதைப் பார்த்து அமிர் கண்ணீர் சிந்தியபடி சிலையாக நின்றான்.


                ஒரு புனித விடுதலைப் போராளியின் தூய-வீர-தியாக சிந்தனைகளைச் சுமந்துகொண்டு, இற்றைவரை வரலாறு காணாத இன்னொரு புறநானூறு எழுத, இணுவில் செம்மண் ஓலைக் குடிலில் ஒரு விடியற் காலை, அச்சுவினி நட்சத்திரத்தில் ஆசையனுக்கும்-பொன்னிக்கும் மூத்த மகளாக அவதரித்த நதியா போய்க்கொண்டு இருந்தாள்.

தொடரும்...

No comments:

Post a Comment