Wednesday 30 September 2015

சுட்ட பழம், சுடாத பழம் - சிறுகதை



 ஜெகதீசன் அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப்பதினைந்து வருடத்தில் அவர் கண்ட 'தேட்டம்' - இதோ உங்கள் முன்னாலே வானளாவி நிற்கும் இந்த 'வசந்தமாளிகை'தான்.

வசந்தமாளிகை மூன்றுமாடிகள் கொண்டது. அடித்தளம் நிலமட்டத்திற்கும் கீழே இருப்பதால் சிலர் அதை, "உது இரண்டு மாடிகள்தான்" என்று சீண்டுவார்கள். அவரது காணித்துண்டை 'சரிவு நிலம்' என்று யாராவது சொன்னால் ஜெகதீசனுக்குக் கோபம் வரும். 'சிலோப் லான்ட்' (slope) என்று திருத்திச் சொல்லுவான். பேஸ்மன்றில் (basement) றம்பஸ் றூமும்(rhombus room) ஸ்ரோர் றூமும்(store room) உண்டு. அவரது வீடு பெயருக்குத் தக்கமாதிரி வசந்தமாளிகைதான்.

Monday 28 September 2015

அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் - முருகபூபதி

திரும்பிப்பார்க்கின்றேன்.

கன்னிகளின்  குரலாக  தனது  எழுத்தூழியத்தை தொடர்ந்த அருண். விஜயராணியின்  வாழ்வும் பணிகளும்
இலங்கை   வானொலி  ' விசாலாட்சிப்பாட்டி ' இலக்கியத்துறையில்   ஆற்றிய  பங்களிப்பு
 - முருகபூபதி

 


" வணக்கம்....  பாருங்கோ.... என்னத்தைச் சொன்னாலும்  பாருங்கோ, உங்கடை   விசாலாட்சிப்பாட்டியின்ர  கதையைப்போல  ஒருத்தரும் சொல்லேலாது.    இந்தக்குடுகுடு  வயதிலையும்  அந்தப்பாட்டி  கதைக்கிற கதையளைக்   கேட்டால்  பாருங்கோ.... வயதுப்பிள்ளைகளுக்கும்  ஒரு நப்பாசை    தோன்றுது.    என்ன  இருந்தாலும்  திங்கட்கிழமை  எண்டால் பாட்டியின்ர   நினைவு   தன்னால  வருகுது.   அதனால  சில திங்கட்கிழமையில  அவவுக்கு  தொண்டை  கட்டிப்போறதோ  இல்லை... வேற  ஏதேன்  கோளாறோ    தெரியாது.   இவ  வரவே  மாட்டா..... பாவம் கிழவிக்கு  என்னாச்சும்  நேந்து போச்சோ   எண்டு  ஏங்கித் துடிக்கின்ற உள்ளங்களின்ரை    எண்ணிக்கை  எத்தனை   எண்டு  உங்களுக்குத்தெரியுமே...?

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 16 - கறுப்பங்கி மர்ம நெட்டையன்


அமிர் ஸ்கொற்லன்ட் யாட்டிலிருந்து திரும்பிய நான்காவது தினம். கோடை கால மதியத்துக்கு வெகு நேரம் இருந்தது. பகலவனின் கதிர்கள் ஈஸ்ற்ஹம் நகரை அணைத்து கணகணப்பூட்டியது.

                ஆவரங்கால் அன்ரி தனது வீட்டின் முன்னுள்ள நடை பாதையில், கையில் உண்டியலை பக்கவாட்டில் நீட்டிப் பிடித்தபடி, பிரயத்தனப்பட்டு கால்களை மேலே தூக்கி இழுத்து முன்னே வைத்து ஆமை வேகத்தில் அசைவதை எதிர்ப்பக்க நடைபாதையில் பிளெசற் பூங்காவிற்குப் போக வேகமாக சென்று கொண்டிருந்த நதியா கண்டாள்.

                நதியாவின் சிவப்பு பிளவுசும,; கறுப்பு ரவுசரும் அன்ரியின் கண்களுக்கு அழைப்பு அனுப்பி இருக்கவேண்டும். வெண் தலையைத் திருப்பி எதிர்ப்பக்க நடைபாதையை வெறித்துப் பார்த்தார். கோவிலில் அவள் அமிரோடு சல்லாபம் புரிவது நினைவில் வந்து கண்ணில் மிதக்க மூக்கைச் சுழித்தார். நதியாவைப் பற்றி மூத்தான் பெண்சாதிவேறு முதல் நாள் அன்ரிக்குக் குசுகுசுத்திருந்தாள். மீண்டும் அன்ரி அவதானித்தார். துள்ளிப் பாய்ந்து எழுந்து விழுந்து நடனமிட்ட நதியாவின் போனி ரெயில்அன்ரியின் எரிச்சல் புகைச்சலுக்கு பெற்றோல் ஊற்றியது.

Thursday 24 September 2015

சுபாவம் - சிறுகதை



ஆனந்தன் 'கோல்ஸ்' (Coles) சுப்பர்மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தான். அவுஸ்திரேலியாவில் 'கோல்ஸ்' பிரபலமான ஒரு பல் பொருள் அங்காடி.  இரண்டொரு நிரைகள் தள்ளி அவனுடன் வேலை செய்யும் பாம்(Pham) தனது றொலியில் (Troly) பொருட்களை நிரப்பிக் கொண்டிருந்தான். அவன் வியட்நாம் தேசத்தைச் சேர்ந்தவன். நிரப்பிக் கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாது. றொலி வெறுமையாக இருந்தது. பொருளின் விலையைத் திருப்பிப் பார்ப்பதும், பின்னர் முகர்ந்து பார்த்துவிட்டு பத்திரமாக இருந்த இடத்திலேயே வைப்பதுமாக இருந்தான். ஒரு சொல்லில் அவனைப் பற்றிச் சொல்வதென்றால் - பாம் ஒரு 'கசவாரம்'.

Sunday 20 September 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 15 - பெரிய பிரிட்டனில் சின்ன வியாபாரம்




பூமா கொடுத்த மேல்மாடி அறையில் கண்ணயர்ந்த அமிர் அடுத்த நாள் வெகு நேரஞ் சென்றே கண் விழித்தான். அவனுக்காக ஒரு நாற்றமெடுக்கும் வியாபாரம் கீழே எதிர்பார்த்து இருப்பது அவனுக்கு அப்போது தெரியாது.

                பூமா ஏலவே வேலைக்குப் போய்விட்டாள். அமிரின் மனம் நதியாவைச் சுற்றி வலம்வர, மாடியிலிருந்து கீழிறங்கி வந்து, வரவேற்பறையில் உள்ள ஒரு வான்நீல சோபாவில் அமர்ந்த அவனை சுவர்களின் பூவரசம்பூ வண்ணம் ஈர்த்தது. அது அவனது இதயத்துக்கு குளிராக இருந்தது.

                அப்பொழுது ஆவரங்கால் அன்ரி வரவேற்பறைக்குள் வரமுயல்வதை அமிர் அவதானித்தான். நல்லெண்ணெய் மணம் கட்டியம் கூற, உடம்பை இரு பக்கமும் தாழ்த்தி உயர்த்தி புறப்பக்கமாக வளைந்த கால்களைப் பக்குவமாக மேலே உயர்த்திப் பின் அவதானமாகக் கீழே வைத்து அறையுள் நுழைந்து, பச்சைப் பட்டுச் சேலை கதைசொல்ல, 22 கறற் தங்க நகைகள் மின்னிச் சிரிக்க, ஆவரங்கால் அன்ரி நீள் சோபாவில் தொப்பென அமர்ந்தார். அவரால் சாதாரண மனிதர்களைப் போல பதிந்த சோபாவில் அமர்வது கொஞ்சம் சிரமமல்ல மிகச் சிரமம் என்பது அமிருக்குப் புரிந்தது.

Tuesday 15 September 2015

நன்றி. வணக்கம் - குறுங்கதை


                                                                                    மெல்பேர்ணில் தமிழ்ப்பாடசாலைகள் களை கட்டத் தொடங்கின. இந்தத் தடவை பேச்சுப்போட்டிக்குரிய விடயதானத்தை மாணவர்களும் பெற்றோரும் தெரிவு செய்யலாம் என்று நிர்வாகத்தினர் சொல்லியிருந்தார்கள். இந்த மாற்றம் மோகனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒவ்வொரு தடவையும் பாரதியார், திருவள்ளுவர், நாவலர் என்று நிர்வாகம் எழுதிக் கொடுத்ததை - மாணவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ எழுதி ஒப்புவிப்பார்கள். ஒவ்வொரு வருடமும் இரண்டாவது அல்லது மூன்றாவதாக வரும் மகனை இந்தத்தடவை முதல் ஸ்தானத்திற்கு உயர்த்தி விடலாம். புரட்சிகரமான வசனங்களாக எழுதி புழுதி கிழப்பிவிட வேண்டும். எழுத்தும் இயக்கமும் - மோகன்; பேச்சு விமேஷ் என்றாள் மனைவி வேணி.

இன்ரநெற்றில் பத்துக் கட்டுரைகளை வாசித்து, பதினொன்றாவதை சிருஷ்டி செய்தான் மோகன். "பெண்ணியம், பன்னிரண்டு வயதுப் பிள்ளைக்கு ஏற்றது அல்ல!" என்று முடிந்த முடிபாகக் கூறிவிட்டாள் வேணி. அதைப் பற்றியெல்லாம் மோகன் கவலைப்படவில்லை. பிள்ளையை முதலாவது இடத்திற்கு வரச் செய்வதே அவனது குறிக்கோள். எழுதிய பேச்சைத் திரும்ப வாசித்துப் பார்த்ததில் தனக்கும் விளங்கவில்லை என்றான் மோகன். அப்படி என்றால் வெற்றி நிட்சயம் என்றாள் வேணி.

Monday 14 September 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 14 - புதிய  பூதம்


                 “ஏன் ஸ்கொற்லன்ட் யாட் பயங்கரவாத எதிர்ப்பிரிவு பொலிஸ் அதிகாரி எங்களிடம் வரப்போகிறான்? உனக்கு ஏதாவது புரிகிறதா, ஜீவிதா?"

                பூமாவின் கேள்விக்கு ஜீவிதா வாயால் பதில் கூறாமல் காலடியிலுள்ள செங்கம்பளத்தைப் பார்த்தபடி பக்கவாட்டில் தலை அசைத்தாள். வலது நெஞ்சில் படர்ந்த கூந்தலை அவள் விரல்கள் நோண்டிக்கொண்டிருந்தன.

                நேரம் மாலை ஐந்து மணியாகிவிட்டது. ஜீவிதாவோ பூமாவோ சாப்பாட்டுப் பொட்டலங்களை இன்னும் தொடவில்லை. அவை யாராவது தங்களை விழுங்கி ஏப்பம் விடார்களா என்று தவம் கிடந்தன.

                பச்சைக்கண் பொலிஸ் பெட்டை ஜீவிதாவின் முந்தானையையும், பூமாவின் வெள்ளைக் கல் மூக்குத்தியையும் கடைக் கண்ணால் பார்த்தபடி வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தாள். அவள் வாய் திறந்து ஏதாவது சொல்வாள் என்று எதிர் பார்த்தார்கள். அவள் மூச்சுவிடவே இல்லை. தன்பாட்டில் விடுவிடுஎன்று போய்க் கொண்டிருந்தாள்.

Saturday 12 September 2015

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி


கற்காலம்   முதல்  கம்பியூட்டர்  காலம் வரையில் ஆடற்கலையின்   நுட்பங்களின் ஆய்வில்   தேடுதலில் ஈடுபட்ட  மூத்த  நடன நர்த்தகி   நாட்டிய  கலாநிதி கார்த்திகா கணேசர்  இலங்கை,  இந்தியாஅவுஸ்திரேலியா   என  தொடரும் அவரது  கலை   உலகப்பயணத்தில் எளிமையே அவருடை    வலிமை.

கொழும்பில்  கலை  இலக்கிய  நண்பர்கள்  கழகம்  என்ற  அமைப்பு 1970  களில்  இயங்கியது.   இதில்  எழுத்தாளர்கள்  சாந்தன்,  மாவை நித்தியானந்தன்,   குப்பிழான்  சண்முகன்,  யேசுராசா,  இமையவன், நெல்லை . பேரன்  உட்பட  சில  நண்பர்கள்  அங்கம்வகித்து  அடிக்கடி கலை,  இலக்கிய  சந்திப்புகளை   நடத்திக்கொண்டிருந்தார்கள்.

சில   நிகழ்ச்சிகளை  வெள்ளவத்தை  தமிழ்ச்சங்கத்திலும்  நடத்தி  மூத்த  எழுத்தாளர்களை  அழைத்து  அவர்களின்  இலக்கிய அனுபவங்களை   பேசவைத்தார்கள்.

இலங்கையின்  வடபகுதியைச் சேர்ந்த  இந்த  இலக்கிய  நண்பர்கள் தொழில்   நிமித்தம்  கொழும்பில்  வாழ்ந்துவந்தனர்.  பெரும்பாலும் அனைவருக்கும்   அப்பொழுது  திருமணம்  ஆகியிருக்கவில்லை.

Friday 11 September 2015

விளக்கின் இருள் - சிறுகதை


இது எமது தபால்பெட்டிக்கு வந்திருந்த நாலாவது அநாமதேயக் கடிதம். கடந்த இரண்டு வாரங்களில் இதேமாதிரியான மூன்று கடிதங்கள் வந்திருந்தன.

"I buy houses, gas or no gas, call Tim." - கடிதத்தில் இருந்தது இவ்வளவுந்தான். இதுபோன்ற கடிதங்கள் இனிமேலும் வரலாம். யார் இந்த ரிம்? இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அந்தக்கடிதங்களை எடுத்துக் கொண்டு ரவுனிற்குப் போனேன். ரவுன் எனது வீட்டிலிருந்து பத்துநிமிடங்கள் கார் ஓடும் தூரத்தில் உள்ளது. றியல் எஸ்டேட் (Real Estate) திறந்திருக்கக்கூடும். நகரம் கேளிக்கையில் நிரம்பி வழிகின்றது. மேர்க்கியூரி ஹோட்டலின் கோலாகலமான வெளிச்சத்தில் மனிதர்களின் நடமாட்டம் தெரிகிறது. சாப்பாட்டுக் கடைகளிற்குள் மக்கள் நிதானமாகவிருந்து சாப்பிட்டுக் கொண்டும் மது அருந்திக் கொண்டும் இருக்கின்றார்கள். கிளப்பிலிருந்து ஜாஸ் மிதந்து வருகிறது. மூடப்பட்டிருந்த றியல் எஸ்டேட் கடையின் கண்ணாடிக்குள்ளால் தெரியும் விளம்பரங்களைப் பார்த்து சத்தமிட்டுக் கதைத்தபடி சிலர் நிற்கின்றார்கள். அவர்கள் சண்டையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக நான் திரும்பிக் கொண்டேன்.

Monday 7 September 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 13 - ஸ்கொற்லன்ட்  யாட்

                ஜீவிதா தனது காரை ஒரு இருபது மாடிக் கட்டடத்தின் முன் நிறுத்தி இறங்கித் தலையை நிமிர்த்திப் பார்த்தாள். அவள் கண்களை ஸ்கொற்லன்ட் யாட் பொலிஸ் தலைமை அலுவலகம்என்ற பெயர்ப் பலகை வார்த்தைகள் நிறைத்தன.    

                பூமாவைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கால்கள் உதற கண்கள் பிதுங்க ஜீவிதாவை நோக்கித் தலை அசைத்தாள். அவளுடைய கத்தரித்த கருங்கூந்தல் தோள்களில் தவழ்ந்து முன்னும் பின்னும் அசைந்து அவள் பயணத்தைத் தொடரவிரும்பவில்லை என்பதைத் தெரிவித்தது. ஆனால் அவள் திரும்பிப்போக விரும்புகிறாள் என்பது ஜீவிதாவுக்குப் விளங்கவில்லை.

                ஸ்கொற்லன்ட் யாட்டின் 171 ஆண்டு வரலாற்றிலே சேலை அணிந்த ஒரு பெட்டையும், சுடிதார் அணிந்த ஒரு பெட்டையும் அதன் எல்லைகளுக்குள் துணிந்து காலடி வைப்பது அன்றுதான் முதன்முதலில் நிகழும் சம்பவம்.

Saturday 5 September 2015

ஊர் திரும்புதல் - சிறுகதை

 


கிராமம் அசாத்திய அமைதியில் இருந்தது. பறவைகளின் சத்தம் மாத்திரம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தன. சூரியக்கற்றைகள் ஏற்கனவே படரத் தொடங்கிவிட்டன.
"தம்பி குகன்... வீடியோக்கமராவிலை நேரத்தையும் திகதியையும் செற் பண்ணும். கணேஷ் அவுஸ்திரேலியாவிற்கு போகேக்கை வீடியோக்கொப்பி கொண்டு போக வேணும்" மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே பாலன்மாமா தன்னுடன் வந்த குகனுக்குச் சொன்னார். பாலன்மாமா - திருவள்ளுவர் தாடி ; இழுத்து இழுத்து நடக்கும் விசிறினால்போன்ற நடை. பார்ப்பதற்கு வினோதமாக இருப்பார். குகனை எனக்கு முன்னாளில் அறிமுகமில்லை. உமாசுதன், நான் புல்ம்பெயர்ந்து 16 வருடங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களில் மிகவும் வேண்டப்பட்டவன்.

நேரம் : காலை 9.20,  திகதி : 25.05.2011

நாங்கள் நாலுபேரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தோம். டச்சு றோட்டில் இருந்த உருப்படியான ஒரு வீட்டின் தாழ்வாரத்தில்  மோட்டார் சைக்கிளை வைத்துப் பூட்டிவிட்டு நடக்கத் தொடங்கினோம். இரண்டு பெரிய தண்ணீர்ப் போத்தல்கள், இரண்டு லீட்டர் கோக் போத்தல்கள் இரண்டு மற்றும்  நான்கு பேருக்குமான மதியச்சாப்பாடு, கத்திகள் பொல்லுகள் சகிதம் எங்கள் பிரயாணம் ஆரம்பமானது. ஏதோ அமேசன் நதிக்கரைக் காட்டுக்குள் நுழைகின்ற பிரயாணம் போல, 21 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் பிறந்து வளர்ந்த கிராமத்திற்குப் போகும் பயணம். கிராமம்  இத்தனை வருடங்கள் உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து, தற்போது மீளக்குடியேற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Thursday 3 September 2015

ஆச்சர்யம் தரும் எழுத்தாளர் - குரு அரவிந்தன்


குரு அரவிந்தன் - எமது சமகாலத்து எழுத்தாளர். ஊரில் என் அயல் கிராமமான காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நான் படித்த யூனியன் கல்லூரியின் அயல் பாடசாலைகளான நடேஸ்வரா, மகாஜனாக் கல்லூரிகளில் கல்வி பயின்றவர்.

புலத்திலுள்ள எழுத்தாளர்களில் பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் மிகச் சிலர். அவர்களில் குரு அரவிந்தன் குறிப்பிடத்தகுந்தவர். ‘அணையாதீபம்என்ற சிறுகதையுடன் ஈழநாடு வாரமலரில் எழுத்துலகில் புகுந்த  இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், ஒலிப்புத்தகம், மேடை நாடகம், திரைக்கதை போன்ற பல துறைகளிலும் அகலவும் ஆழவும் வேரூன்றி தொடர்ந்தும் படைப்புகளைத் தந்தவண்ணம் உள்ளார். யுகமாயினி, கலைமகள் நடத்திய குறுநாவல் போட்டி மற்றும் பல சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகளை வென்று குவித்தவர்.

Tuesday 1 September 2015

அவதானிப்பும் அறிமுகம் செய்தலும்


செங்கை ஆழியான் (க.குணராசா) ஒரு காலத்தில் இளம்படைப்பாளிகளின் படைப்புகளை அவதானித்து, அவர்களை சஞ்சிகைகளில் பத்திரிகைகளில் அறிமுகம் செய்து வைத்தார்.

வல்லமைஇணையத்தளம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டில் இருந்து, ஒருவருட காலத்திற்கு தனது இணையத்தளத்தில் வெளியாகும் சிறுகதைகளை மதிப்பீடு செய்து சிறந்த படைப்பாளிகளை இனம் கண்டிருந்தது. வல்லமையில் வெளியான அனைத்துக் கதைகளையும் வாசித்து தனது கருத்துக்களைச் சொல்லியிருந்தார் மூத்த எழுத்தாளரான வெங்கட் சாமிநாதன். 

கங்காருப் பாய்ச்சல்கள் (6)

ஒரு புத்தகத்திற்கு ஒரு அறிமுகம். அம்புட்டுத்தான்!

எனது ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்சிறுகதைத்தொகுப்பு வெளியானபோது, அதன் அணிந்துரை ---வெங்கட் சாமிநாதன் அவர்களால் எழுதப்பட்டது---ஞானம் சஞ்சிகையில் பிரசுரமானது. அதைப் பார்த்துவிட்டு எழுத்தாள நண்பர் ஒருவர் எனக்கு மின்ன்ஞ்சல் செய்திருந்தார்.

புத்தகத்தின் பிரதி ஒன்றை தனக்கு அனுப்பிவைக்குமாறும், அதைப்பற்றியதொரு அறிமுகத்தை தான் எழுதுவதாகவும் மின்ன்ஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.  புத்தகத்தை அனுப்பி வைத்தேன்.

புத்தகம் கிடைத்தமை பற்றி அறியத் தரவில்லை. நீண்ட காலமாக அவரது அறிமுகம் எங்கும் வராத்து கண்டு அவருக்கு மின்ன்ஞ்சல் செய்தேன். அதற்கு அவர் – தான் ஒரு அறிமுகம் எழுதிக் கொண்டிருந்ததாகவும், தினக்குரலில் ஏற்கனவே எனது புத்தகம் பற்றிய அறிமுகம் வந்துவிட்டதால் தான் எழுதிக்கொண்டிருந்ததை  நிறுத்திவிட்ட்தாகவும் எழுதியிருந்தார். விருப்பமானால் பாதி எழுதியதை எனக்கு அனுப்பி வைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.