Sunday 21 June 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 2 - விண்ணன்கள்


அமிர் தலைமுடியைக் கோதி உயர்த்திய பொழுது ஜீவிதா கண்மடல்களை அகல விரித்து அவனது தலையில் நீளப்பாட்டுக்கு அமைந்த ஆழமான காயவடுவை அச்சத்தோடு நோக்கினாள். 

மிஸ்ரர் அமிர் ......" என்று வாயெடுத்த ஜீவிதா பயத்தில் வசனத்தை முடிக்காமல் அமிரின் தலையைப் பார்த்தாள்.

மிஸ் ஜீவிதா, ஏதோ கேட்க வாயெடுத்தீர்கள். ஏன் நிறுத்தி விட்டீர்கள்?"

உங்கள் ...... இல்லை ….. "

நீங்கள் தலையில் உள்ள தழும்பைப் பற்றி …."

ஆம். விபத்தால் ...." அவள் வசனத்தை முடிக்கவில்லை.

இல்லை."

நான் தெரிந்துகொள்ளக் கூடாதா?"

அது அச்சந்தரும் கதை."

கதையென்றால் எனக்கு அல்வா சாப்பிடுவதுபோல."

பயங்கரமான கதை."

பயப்படமாட்டேன். சொல்லுங்கள்."

உங்களுக்கு கறுப்பு நரி இயக்க வாசுவைத் தெரியுமா?”

                ஜீவிதாவின் வதனத்தில் ஒரு கேள்வி மின்னியது. கழுத்தைச் சுண்டி வலது மார்பில் படர்ந்த கூந்தலை வீசி முதுகில் படியவிட்டு, கதிரையில் நிமிர்ந்து இருந்து தனது வெள்ளை ரி பிளவுசின் கீழ் விளிம்புகளை இரு கைகளாலும் இழுத்தபடி சொன்னாள்.

தெரியாது.அவள் சொன்னது பச்சைப் பொய்.

பரவாயில்லை. உங்களுக்கு அலோசியஸைத் தெரியுமா?”

தெரியாது, தெரியாது.அதுவும் பொய்.

ஜீவிதா, ஒவ்வொரு யாழ்ப்பாணத் தமிழனுக்கும் கறுப்பு நரி வாசுவைத் தெரியும். நெடுங்கேணிக்காட்டின் குளுமாடு மாதிரி முறுக்கேறின உடம்பு. சின்னோட்டி எலிக் காது. கோணல் வாய். தெரியாது?”

                ஜீவிதா வாய் திறக்கவில்லை. தலையை ஓணான் போல ஆட்டிக் கொண்டிருந்தாள். அவளின் பெரிய ஜிப்சிகள் அவள் உணர்ச்சிகளைப் பிரதிபலித்தன. எதிர்மாறாக அவள் கன்னக் குழிகள் மறைந்திருந்து அமிரின் வாயை நோட்டம் பார்த்தன.

கவனமாகக் கேளுங்கள். அது ஒரு பயங்கரமான சோக சம்பவம். எனது அப்பா, ஒரு மிதவாத அரசியல் வாதி. தமிழ் அரசுக் கட்சிப் பிரமுகர்.

உங்கள் அப்பா தமிழ் அரசுக் கட்சி அரசியல்வாதி!அவள் வார்த்தைகளில் அதிர்ச்சி கூவியது. அமிர் கவனிக்கவில்லை.

ஆம். ஒரு நாள் வாசுவின் செய்தி ஒன்றுடன் ஒரு தூதுவன் எங்கள் வீட்டுக்கு வந்தான். தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றிக் கலந்துரையாட வருவதாக அப்பாவுக்கு வாசு எழுதியிருந்தார்.

வாசு!

ஆம். ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் வாசு அடிக்கடி வீட்டுக்கு வந்து அப்பாவோடு அரசியல் கதைத்து விருந்துண்டு போவது வழக்கம். நீண்ட காலத்தின் பின்னர் வரவிரும்புவதாக எழுதி யிருந்தார்.

சொல்லுங்கள் அமிர்என்று கூறிய ஜீவிதா முகத்தின் எதிரே இருந்த கண்ணாடிக் கதவினூடாக, வரவேற்பறையில் வாடிக்கையாளர் முண்டியடிப்பதைப் பார்த்தபடி அமிரின் வார்த்தைகளைச் செவிமடுத்தாள்.

அக்குறிப்பில் வாசு தானும் இரு நண்பர்களும் அடுத்த நாள் சாயந்தரம் வருவதாகவும், தனக்குப் பிடித்த ஊர்க் கோழிக் கறியும் அரிசிமா இடியப்பமும் எதிர் பார்ப்பதாகவும் எழுதி இருந்தது.

                அமிரின் வெள்ளைச் சேட்டின் பையில் பின்னல் செய்திருந்த றோசா மலரின் அச்சம் கொந்தளிக்கும் வரலாறு தெரியாது அதில் மூழ்கி இருந்த ஜீவிதா, தன்னைச் சுதாரித்துக்கொண்டு,

வாசு அடுத்த நாள் வந்தாரா?” என்று  வினாவினாள்.

ஆம். அடுத்த தினம் பொழுதுபட்டு நிலத்தை இருள் விழுங்கியபின் வந்தார். நான் முதல் மாடியில் நின்று எங்கள் வீட்டு கேற்றைக்குனிந்து பார்த்தேன். பிரகாசமாக எரிந்த மின்சார ஒளியில் என் கணகளில் பட்டார்கள். வாசு தவிர அலோசியசும் இன்னும் ஒருவரும் வந்திருந்தார்கள். வாசலில் காவலுக்கு நின்ற பொலிஸ் அதிகாரி டேவிட் அவர்களோடு தர்க்கப்படுவதைக் கண்டேன். அவர்களை உள்ளேவிட பொலிஸ் மறுப்பதுபோல எனக்குப் பட்டடது.

ஏன் உங்கள் அப்பாவுக்கு பொலிஸ் காவல்!அவ்வாறு கேட்ட ஜீவிதாவின் முகத்தில் கேள்விக் கணைகள் தலைகாட்டின.

அவசரப்படுகிறீர்கள். கதை முடிவில் நான் சொல்லாமலே புரிவீர்கள்.

சரி சொல்லுங்கள்.

பொலிஸ் அதிகாரி டேவிட் முதலாம் மாடிக்கு வந்து, ‘ஐயா, அவர்கள் வழக்கமான சோதனைக்கு உட்பட மறுக்கிறார்கள். கறுப்பு நரிகளை நம்பேலாது,” என்றான்.

உங்கள் அப்பா என்ன சொன்னார்?”

இன்ஸ்பெக்டர், பயப்படாதீர்கள். முன்னர் வாசு அடிக்கடி வாறவன். அவன் எங்கள் குடும்ப நண்பன். சோதனைக்கு உட்படுத்துவது அழகில்லை. விருந்தாளியை அவமானப் படுத்துவது போல இருக்கும்.

ஐயா, அவர்கள் ஆயுதம் வைத்திருப்பார்கள்!

பயப்படாதே டேவிட். எனக்கு வாசுவை பதினைந்து வருடமாகத் தெரியும். நீ போய் அவர்களை அனுப்பு.

மிஸ்ரர் அமிர், உங்கள் அப்பாவுக்கு ஏன் பொலிஸ் பாதுகாப்பு? அவரென்ன அமைச்சரா?”

நீங்கள் ஏன் அந்தரப்படுகிறீர்கள்?”

                ஜீவிதாவின் கண்கள் அமிரின் எடுப்பான மூக்கில் நிலைகொண்டன. காதுகள் அவன் வார்த்தைகளை உள்வாங்கின.

மூவரில் ஒருவன் மாடிக்கு ஏறும் படியின் ஆரம்ப பகுதியில் நின்றான். வாசுவம் அலோசியசும் மாடியில் சாப்பாட்டு அறைக்கு வந்தார்கள். எப்படி ஐயா சுகம்?’ என்று விசாரித்தபடி வாசு அப்பாவை நெருங்கினான். அப்பா அவரை அணைத்து முதுகில் தடவி அன்பு பாராட்டி சுகமாக இருக்கிறாயா வாசு?’ என்று குசலம் விசாரித்தார்.

                சாப்பாட்டு மேசையின் தலைப் பகுதியில் அப்பா மட்டும் இருந்தார். அவருக்கு வலப்பக்கமாக எனக்கு நேர் எதிரே மேசையின் மறு பக்கத்தில் வாசு இருந்தார். எனது இடப்பக்கமாக அலோசியஸ் இருந்தார்.

                அப்பொழுது ரெலிபோன் மணி ஒலி எழுப்பியது. ஜீவிதா வெள்ளை றிசீவரை எடுத்து சுருக்கமாகப் பதில் கூறிவிட்டு சொல்லுங்கள்என்றாள். அமிர் தொடர்ந்தான்.

அம்மா இறைச்சிக்கறித் கோப்பையோடு அங்கு வந்தார். வந்ததும் வாசுவும் அம்மாவும் மிகவும் அந்நியோன்னியமாக உரையாடினார்கள்.

அன்ரி எப்படிச் சுகம்?” வாசு அம்மாவை விசாரித்தார்.

நல்ல சுகம் வாசு. நீ எப்படிச் சுகமாக இருக்கிறாயா?” என்றார் அம்மா. ஓம் அன்ரி. உங்கள் கிருபையால் நல்ல சுகம்என்று கூறிவிட்டு வாசு கைகளை அகட்டி ஓவென்று சிரித்தார். அப்பொழுது அவரது கை தவறுதலாக மேசையில் இருந்த நீர் நிறைந்த செம்பில் பட, அது சீமெந்துத் தரையில் விழுந்து கணீரென ஒலித்துக்கொண்டு உருண்டது.

                ஒரு நிமிடம் எல்லோர் கண்களும் வாசுவிலும் செம்பிலும் குத்தி நின்றன. அம்மா மௌனத்தைக் கலைத்தார்.

நீ வாசு, எங்களை முற்றாய் மறந்தே போய்விட்டாய். ஒன்பது வருடத்துக்குப் பிறகு வந்திருக்கிறாய், இல்லையா?”

அன்ரி எனக்கும் வரத்தான் ஆசை. எங்கள் தலைவர் கடும் கட்டுப்பாடு. யாரையும் தேவையில்லாமல் களத்தைவிட்டு வெளியே செல்ல விடமாட்டார். சிங்களப் படையைக் கங்காணிக்கவே நேரம் போதாது.

இனிமேலாவது இடைக்கிடை வந்து போ வாசு.

கட்டாயம் வருவேன் அன்ரி. உங்களுக்கும் கோழிக் கறிக்கும் ஒரு ராசி அன்ரி. இன்றைக்குத்தான் ஏழு வருசத்துக்குப் பிறகு வாய்க்கு ருசியாக கோழி இறைச்சி சாப்பிடுகிறேன்என்றான் வாசு அம்மாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தபடி.

நீ நல்லாய் மெலிஞ்சு போனாய் வாசுஎன்று கூறியபடி அம்மா மேலும் ஒரு அகப்பை கோழிக் கறியை அவனது கோப்பையில் பரிமாறினார்.

                விருந்து களைகட்டி இருந்தது.

                தற்செயலாக நான் வாசுவிற்கும் அப்பாவிற்கும் இடையில் இருந்த இடைவெளியால் ஜன்னலூடாக வெளியே பார்த்தேன். இன்ஸ்பெக்டர் டேவிட் காவல் பறனில் ஏறி நின்று, துப்பாக்கியை கெட்டியாகப் பிடித்தபடி எங்கள் மாடிச் சாப்பாட்டறையை நோட்டம் பார்ப்தைக் கண்டேன். எனக்குச் சிரிப்பு வந்தது. மெதுவாக உடம்பை உயர்த்திப் பார்த்தேன். இரண்டு உதவிப் பொலிசாரும் துவக்கோடு உசார் நிலையில் நின்றனர். வழமையில் அரட்டை அடிப்பவர்கள். உவர்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்ற வினா என் மனதில் பட்டுத் தெறித்தது.

                நான் திரும்பி வாசுவைப் பார்த்தேன். அவர் வெகு உற்சாகமாக அப்பாவோடு அரசியல் பேசிக் கொண்டிருந்தார். சின்னக் கோணல் வாயால் அவரால் எப்படி அவ்வளவு அநாயசமாகப் பேச முடிகிறது என்று நான் வியந்தேன்.

                அம்மா செம்பாட்டான் மாம்பழச் சீவல்களோடு சமையலறையிலிருந்து சாப்பாட்டு மேசைக்கு வந்து கொண்டிருந்தார்.

எதைப் பற்றி அரசியல் பேசினார்கள்?”

ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு வன்முறையைப் பயன்படுத்தலாமா இல்லையா என்பது பற்றி.

உங்கள் அப்பா என்ன சொன்னார்?”

தம்பி வாசு நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள். நாங்கள் எங்கள் வழியியே தொடர்கிறோம். அதைவிடு வாசு, கோழிக் கறி எப்படி?” என்று அப்பா கேட்டார்.

அதற்கு வாசு சொன்னார்,

மேயர் ஐயா உங்கள் கோழிக் கறி சூப்பர்.ஆனால் உங்கள் மிதவாத அரசியல்தான் படு மோசம். நீங்கள் தமிழர் துரோகி.என்று கூறிய வாசு கறுப்புச் சேட் பொத்தானைக் கழற்றி, கையைத் நுழைத்து, நெஞ்சோடு ஒட்டி ஒழித்திருந்த பிஸ்டலை உருவி எடுத்து, அப்பாவின் வலது காதில் அழுத்திப் படபடவெனச் சுட்டான்.

                அமிரின் கண்கள் ஓட்டைக் குடம் போல் ஒழுகின. அவன்; தலையைத் திருப்பி கண்ணாடிச் சுவரூடாக நீண்ட நேரம் வெளியே வீதியில் விரைந்துகொண்டிருந்த வாகனங்களைப் பார்த்தான்.

                ஜீவிதா கதிரையைவிட்டு எழுந்து தனது கதிரையின் பின்னே இருந்த அலுமாரியில் ஏதோ தேடிக்கொண்டிருந்தாள். எதையும் எடுக்காமல் மீண்டும் கதிரையில் அமர்ந்து அமிரின் தலைமுடியைப் பார்த்தபடி இருந்தாள்.

என்ன தலைமுடியை வைத்தகண் வாங்காமல் பார்க்கிறீர்கள்? அந்தக் காயம் பற்றிய இன்னும் சொல்லவில்லை என்றா?”

ஆம்சுருக்கமாகச் சொன்னாள்.

அப்பாவின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்ள ஏராளமான படித்தவர்கள் செல்வாக்குமிக்கவர்கள் பெரிய உத்தியோகத்தர்கள் மயானத்திற்கு வந்திருந்தார்கள். உச்சிவேளைக் கதிரவனின் ஆட்சி கோலோட்சிக் கொண்டிருந்தது. பூவரச நிழலிலும் சுடலை மடத்திலும் மக்கள் வெள்ளம் மோதியது. பலர் அப்பாவின் சேவையைப் போற்றிப் பாராட்டிப் பேசினார்கள். ஆனால் எவரும் அப்பாவைக் கொன்ற கறுப்பு நரிகளைக் கண்டித்து ஒரு வார்த்தைகூடப் சொல்லவில்லை.

                நான் அவர்களுக்கு நன்றி கூறும் பொழுது வீரமறவர்கள் தாம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்ற கறுப்பு நரி விடுதலைப் போராளிகள், துப்பாக்கிகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு வெறும் கையோடு நிற்கும் தம் தொப்புள்கொடி உறவுகளிடமே வீரம் பேசுகிறார்கள், கோழைகள் போல பிஸ்டலை மறைத்துக் காவி வந்து நிராயுதபாணி அப்பாவிகளைச் சுட்டுக் கொல்கின்றார்கள். தங்கள் செயலைப் புகழ்ந்து தாமே பரணிவேறு பாடி புறநானூற்றையே கொச்சைப் படுத்துகின்றார்கள். கறுப்பு நரியிடம் துப்பாக்கி இல்லாவிட்டால் அதன் எட்டு வீடு எப்பவோ முடிந்து அந்தச் சாம்பல் மேட்டில் நாகதாளி முளைத்திருக்கும்என்று கூறினேன். இப்படி நான் கூறியதைச் சீரணிக்க முடியாத புறநானூற்று வீர வாரிசுகள்;’ தாம் என்று மார்புதட்டும் கறுப்பு நரிகள், பூவரச மரங்கள் சூழ்ந்த மயானத்தில் அமைந்த அப்பாவின் சிதைக்கு, நான் கொள்ளி வைத்துவிட்டுச் சுடுகாட்டால் திரும்பிக் கொண்டிருந்த வேளை, என்னை உருட்டி உருட்டி அடித்தபின், என் கால்களைக் கயிற்றால் கட்டிக் காவுதடியிலே கொண்டு சென்று கால்களைச் இரும்புச் சங்கிலியால் பிணைத்து வாதரவத்தையில் ஒரு பனை அடைப்புக்குள் இருந்த இருண்ட பங்கரிலே வைத்துக் கொடுமைப் படுத்திய ஏழு மாத காலச் சித்திரவதைத் திருவிழாவிலே ஏற்பட்ட வடு இது" என்று கூறிய அமிர் தனது தலைமுடியை உயர்த்தி அக்காய வடுவை மீண்டும் ஜீவிதாவுக்குக் காட்டினான்.

                ஜீவிதாவின் வதனத்தில் திடீர் மாறுதல். அவள் மனம் நெகிழ்ந்தது. அவளுக்கு அமிரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஆனாலும் யாழ் மேயரின் மகன் என்றது அவளுக்கு இனித்தது. அதற்கு ஒரு பலமான காரணம் இருந்தது.

மீண்டும் அவள் முகத்தில் திடீர் மாற்றம். அப்படி அடிக்கடி மாறும் குணநலமுடையவள் அவள் என்பது அமிருக்கு எப்படித்தெரியும்? அவள் தலையைத் தாழ்த்தி யோசித்தாள்.

ஏன் அனமதியாகிவிட்டீர்கள்?" அமிர் கேட்டான்.

ஒன்றுமில்லை" என்று கூறியவள் கதையை மாற்றினாள்.

மிஸ்ரர் அமிர், உங்களுக்குக் கில்லாடியை முன்பே தெரியுமா?” 

தெரியாது. என்னை லண்டனுக்கு அனுப்பிய முகவர் செய்த ஒழுங்கின்படிதான், கில்லாடி ஹீத்றோ விமான நிலையத்திற்கு வந்து என்னைப் பொறுப்பேற்றார்."

எங்கே தங்கி யிருக்கிறீர்கள்?"

கில்லாடி தன் வீட்டில் ஒரு அறை தந்துள்ளார்."

அவளின் நெஞ்சில் உதை விழுந்ததுபோல இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல்.

கில்லாடியின் மனைவி பாவம். கொஞ்சம் குள்ளம் என்றாலும் கொள்ளை வடிவு. பாவம் பழிக்குப் பயந்த சுபாவம். என்னிலும் நாலு வயது குறைவு. உந்த உதவாக்கரைக் கிழத்தை எப்படிக் கட்டி அவிழ்க்கிறாளோ?”

                அதனைக் கேட்ட அமிர் கில்லாடிக்கு எப்படியும் நாற்பது வயதுக்குக் குறையாது என்று தனக்குத் தானே செய்தி சொன்னான்.

                கில்லாடி வீட்டில் அமிர் தங்கியிருக்கும் தகவல், ஜீவிதாவுக்கு அமிரின் மேல் இரக்கத்தை ஏற்படுத்தியது. எப்படி உதவுவது என்று புரியாத ஜீவிதா, அமிரைப் பரிதாபமாகப் பார்த்தபடி மௌனமாக யோசித்தாள்.

ஏன் மிஸ் ஜீவிதா பேசாமடந்தை யாகிவிட்டீர்கள்?”
அவள் வாய் திறக்கவில்லை.
அவன் மீண்டும் மீண்டும் கேட்டான்.
அவள் பரிதாபமாக அவனைப் பார்த்தாளே தவிர ஏதும் பதில் கூறவில்லை.

                அமிர் ஊகித்துக்கொண்டான். ஏதோ கில்லாடி பற்றிய செய்தியைச் சொல்ல ஜீவிதா விரும்பவில்லை அல்லது அஞ்சுகிறாள் என்று.

மிஸ் ஜீவிதா, நீங்கள் எதையோ கூறத் தயங்குகிறீர்கள். பயப்படத் தேவையில்லை. நான் யாரையும் காட்டிக் கொடுக்கிற பரம்பரையிலே பிறக்கவில்லை."

சத்தியம்;" என்று கையை நீட்டினாள்.

அவனும் சத்தியம்" என்று அவளது கையில்  அழுத்தினான்.

ஒரு கம்பீரமான தன் மனதைச் சுண்டும் இளைஞனின் கையை அழுத்தி சத்தியம்சொன்ன அனுபவம், அதனால் ஏற்படும் உள்ளக் கிளுகிளுப்பு எதையும் முன்னர்  அனுபவியாத ஜீவிதா, அந்தத் திடீர் நிகழ்வால் தன்வயம் இழந்ததால், கில்லாடிபற்றிச் சொல்லத் தயங்கிய சில சங்கதிகள் சங்கிலித் தொடராக அவளது வார்த்தைகளில் வெளி வந்தன.

மிஸ்ரர் அமிர், கில்லாடியின் இயற் பெயர் கனகன். கொலனிபூதனின் மகன். வீமன்காமம் கொலனி தெரியுமே. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் கிழக்கு வாயிலுக்கு எதிரே ஒரு வீதி போகுது. இரண்டு பக்கமும் கிளுவம் வேலிகளும் கிடுகு வேலிகளும். முக்கால் மைல் தூர முடிவிலே ஒரு செழித்த அரச மரம். அதற்குப் பக்கத்திலே காந்தி வாசகசாலை."
ஜீவிதாவைத் தொடர்ந்து பேசவிடாமல் அமிர் மிகுதியைக் கூறத்தொடங்கினான்.
 
காந்தி வாசக சாலைக்கு அருகே ஒரு குட்டி வைரவ கோவில். அதற்கு கிழக்கேதான் நீங்கள் சொல்கிற வீமன்காமம் கொலனி. கொலனியிலே சின்னச் சின்ன ஒரேமாதிரி ஓட்டு வீடுகள். நூறுவரை இருக்கும். கொலனிக்குக் கிழக்கே வீதியின் வடக்குப் பக்கம் உள்ள பனந்தோப்பில் கொலனியில் உள்ளவர்கள் பிழைப்புக்காக வீடுகட்ட உதவும் சல்லிக் கல் கிண்டி எடுத்த ஆழமான பெரிய பெரிய கிடங்குகள். சில எட்டு ஒன்பது அடி ஆழம்."

                அமிரின் கூற்றைக் கேட்ட ஜீவிதா அப்போ உங்களுக்கு முன்பே கில்லாடியைத் தெரியுமோ?" என்று மீண்டும் கேட்டவளின் மனதில் மர்மக் கேள்விகள் பல எழுந்து நின்று ஆடின.

இல்லை. நான் அந்தப் பக்கம் இரண்டொரு தடவை போயிருக்கிறேன்."

                தான் ஏன் அங்கு போனான் என்பதை அவள் விசாரிக்காமல் இருப்பதற்காக மிஸ், ஏதோ கில்லாடி பற்றிச் சொல்ல வந்தீங்கள். சொல்லுங்கோ" என்று துரிதப்படுத்தினான்.

அந்தக் கொலனி வீடுகளை கொழும்புப் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் எம். பி. கட்டிக்கொடுத்தவர். அங்கேதான் கில்லாடி வசித்து வந்தவன்.

                கழுதைப்புலி இயக்கம் தெரியுமே? வட-கிழக்கு மாகாணத்தை ஆண்ட இயக்கந்தான் கழுதைப்புலி இயக்கம். அந்த இயக்க ஆட்சிக் காலத்தில் கில்லாடி தெல்லிப்பழையைக் குரல்வளையிலே பிடித்துக் கலக்கினவன். அது இந்திய அமைதிப் படை - ஐ.பி.கே.எவ். - இலங்கையிலே இருந்த காலம். தெரியுமே?"

தெரியும். மிஸ் ஜீவிதா, உங்களின் ஊர் தெல்லிப்பழையோ?"

கிட்டத்தான். கட்டுவன்."

எங்கே?"

கட்டுவன் சந்திக்குக் கிட்ட."

தெரியும். அருகில் ஒரு கோயிலும் இருக்கு. சரி. நீங்க கில்லாடி பற்றிச் சொன்ன கதையை முடியுங்கோ."

உவன்  கில்லாடி ஐ.பி.கே.எவ்.---இந்திய சமாதானப் படை---காலத்திலே எத்தனை பேரைச் சுட்டுக் கொன்றவன் தெரியுமே?"

அப்படியே?" கேட்ட பின்னர் ஜீவிதா பேசும்போது அவளின் கண்களும் தலையும் நிகழ்த்தும் நடனத்தில் அமிர் லயித்திருந்தான்.


ஒரு இருள் சூழ்ந்த சனிக்கிழமை காலை பத்து மணி. மாவிட்டபுரம் நாகமணியரின் பேரன் நாதனும், கனகசபையின் பேரன் பரமனும்---மச்சானும் மச்சானும்---மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் தேர் முட்டியிலிருந்து தவணைப் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தனர். நீலக் காற்சட்டை மட்டும் அணிந்திருந்தனர். சேட் இல்லை. வாழைக் குருத்துப் போல வளர்ந்திருந்தனர். இருவரும் காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி ஏழாம் ஆண்டு மாணவர்கள். படிப்பில் சூரப்புலிகள். தவணைப் பரீட்சைகளில் இருவருமே முதலாம் இரண்டாம் இடங்களை மாறிமாறிப் பிடித்தனர்.

திடீரென பயங்கர ஓசை எழுப்பிய வண்ணம் ஒரு ராணுவ லொறி அருகே உள்ள அரச மரத்தின் கீழ் நின்றது. அது இந்திய சமாதானப் படையின் வாகனம். கழுதைப் புலி இயக்க பாவனைக்கு இரவல் கொடுத்தது.

கில்லாடியைத் தொடர்ந்து இன்னும் இருவர்---எலும்பு தெரியும் ஒல்லியான பதினாறு வயது மதிக்கத் தக்க பையனும், விழி பிதுங்கிய இன்னொரு சுமார் பதினெட்டு வயது இளைஞனும்---தொம் தொம் என்று லொறிப் பின் இரும்புப் பெட்டிக்குள்ளால் குதித்து, ஓட்டமாக ஓடினர் தேர் முட்டிக்கு. கழுதைப் புலிகள் இயக்கத்துக்கு ஆள் சேர்க்க கழுதைப் புலிகள் இளைஞர்களைத் துரத்திப் பிடித்த காலம். அக்கால கட்டத்தில் வடகீழ் மாகாண ஆட்சி கழுதைப் புலிகள் வசம் இருந்தது.

நாதனையும் பரமனையும் கதற கதற இழுத்து வந்து, காலிலும் கையிலும் பிடித்து லொறிக்குள் வீசினர். கூக்குரல் கேட்டு சனம் ஓடி வந்து சேர முன்னர் லொறி சீறிச்சினந்து இரைந்து கொண்டு கிழக்கே வீமன்காம் கொலனி நோக்கி விரைந்தது.

                “மரவள்ளித் தோட்டத்துக்குள்ளே வைத்து கறுப்பு நரிகளுக்கு இடியப்பப் பார்சல்---கோழி இறைச்சியோடு---கொடுத்தனீங்கள்.கில்லாடி கத்தினான்.

                ஒல்லியன் கையில் இருந்த தடியால் நாதனின் முதுகில் குறிவைத்தான்.

                “ஐயோ! உங்களைக் கும்பிட்டன் அடியாதை அண்ணை.

                ஒரு மேட்டுக்குடிப் பையன், கும்பிட்டன் என்றது ஒல்லியனுக்கு குதிரையில் ஏறிய புளுகமாயிருந்தது. விழிபிதுங்கியவன் பரமனது கால்களில் கொட்டனால் போட்டான்.

                “ஐயோ அண்ணை,” என்று குரலெழுப்பியபடி சரிந்தான். அவனது வயிற்றில் காலால் உதைத்தான்.

                “ஐயோ! அண்ணை கையெடுத்துக் கும்பிட்டன். அடியாதையுங்கோ.விழியனுக்கும் கும்பிட்டன்என்று மேட்டுக்குடி வடுவா சொன்னது குதூகலத்தைக் கொடுத்தது. அவன் பனங்கொட்டைப் பல்லைக் காட்டிச் சிரிக்க அவனது சொக்கு ஊதிஊதி மகிழ்ந்தது.

                விடுதலைப் போர்க்காலத்தில் ஆயுதம் ஏந்திய கழுதைப்புலிகளால் இந்திய சமாதானப் படைக் காலத்தில் கொல்லப்பட்ட சகோதரங்கள் யாவரும் மேட்டுக்குடியினரே.

                லொறி இன்னமும் ஓடிக்கொணடிருந்தது, வீமன்காமம் பனை அடைப்புகள் ஊடாக.

                லொறி தையிட்டி பனங்கூடல் ஒன்றில் சிவப்பு மண் புழுதியை எழுப்பியபடி நின்றது.

                பச்சைக் குஞ்சுகள் நாதனுக்கும் பரமனுக்கும் நடக்கப் போவது புரிந்தது. கில்லாடி நடாத்தும் சகோதர சங்காரத்துக்குத் தாங்கள் பலியாகப் போவது. ஐயோஎன்று பலத்து ஓலமிட்டனர். தூர ஆங்காங்கு தலைகள் தெரிந்தன. கழுதைப் புலிகளின் மரண பயங்கரம் கோலோட்சிக்கொண்டிருந்த எவரும் வாய் திறக்காத காலம. தெல்லிப்பழை வட்டத்தில் வளம்வசதி படைத்த மக்கள், கில்லாடியின் அக்கிரமங்களை எதிர்த்துக் கேட்கப் பயந்து, நடுங்கி அடங்கி ஒடுங்கி வெறும் பார்வையாளராய் மௌனிகளாய் இருந்தனர்.

     “டே உள்ளதைச் சொல்லுங்கோடா. உயிரோடு போக விடுகிறன்.கில்லாடி குப்பைத்; தலையை ஆட்டி கரடியாய் உறுமினான்.

     “அண்ணே, நாங்கள் தோட்டப் பக்கம் போய் பல மாதங்கள். மாவிட்டபுரம் முருகப் பெருமான்மீது சத்தியம்.

     “நீங்கள் கொடுக்காவிட்டால், உங்கள் அப்பன்கள் கொடுத்திருப்பான்கள்.

     “அவை வன்னியிலே, திருவையாற்றிலே நெல் அறுவடைக்குப் போய் ஒரு மாதம்.

     “எங்களை காலம் காலமாக நாயிலும் கேவலமாக, முட்டினால் துடக்கு என்று வேலமாhக நடத்திய உங்களுக்குப் பாடம் புகட்ட வேணும். உங்கள் ஆட்சி அஸ்தமித்துவிட்டது. இனி எங்கள் ஆட்சி.

     கில்லாடி தோளில் தொங்கிய ஏகே47 துப்பாக்கியை உருவி எடுத்தான். தீச் சன்னங்கள் சீறிப் பாய்ந்தன. சின்ன பச்சைக் குருத்துக்கள் மச்சானும் மச்சானும் தரையிலே சாய்ந்து வீடுதலைப் போராட்டத்துக்கு தமது பங்கைச் செலுத்தினர். ரத்தம் சீறிக்கொண்டிருந்தது. லொறி புறப்பட்டுவிட்டது. பையன்களின் உறவினர்கள் கத்திக் குளறியபடி சற்றுத் தூரத்தே ஓடிஓடி வந்துகொண்டிருந்தனர்.

 
         
                “ஏன் கில்லாடி அப்படிச் செய்தவன்?"

கழுதைப்புலி இயக்கத்திலே சேர முன்னர், நாகமணியரின் தோட்டத்திலே கில்லாடி மிளகாய் களவாக ஆயக்கே பிடிபட்டு, கில்லாடிக்குச் சப்பல் அடி. அந்தப் பழைய நோவுக்குப் பழிதீர்க்கத்தான்."

அந்தக் காலத்திலே ஐ.பி.கே.எவ். படையும் உந்த வேலையைத்தானே செய்தவை. கறுப்பு நரிகளைத் தேடித் தேடிச் சுட்டவை" என்று அமிர் ஒத்தூதினான்.

ஜீவிதா தொடர்ந்தாள்.

                இதைவிட மோசமான கில்லாடியின் கொடுங்கோன்மை தொட்ட கதை உண்டு.

சொல் ஜீவிதா. விடுதலைக்கு ஆயுதம் ஏந்திய கழுதைப்புலிகள் அட்டூழியம் பற்றி நான் தகவல் சேகரிக்கிறேன்என்று கூறிவிட்டு அமிர் நாடிக்குக் கைகொடுத்தபடி அவளின் வண்ணத்தில் மனதை பறிகொடுத்துக்கொண்டிருந்தான்.
                                                                                              
              ஒரு புதன்கிழமை நண்பகலாகப் போகிறது. வெப்பவலய கோடைச் சூரியன் கொதித்துக் கொண்டிருந்தான். காற்று மில்லாத புழுக்கத்தில் தெல்லிப்பழைப் போஸ்ற் மாஸ்டர்---கறுப்பு மயிரை மேவியிழுத்த, ஓங்கிவளர்ந்த உதைபந்தாட்ட வீரன் போன்ற ராசையர்---பனை ஓலை விசிறியால் தனது முகத்தில் விசிறிக்கொண்டு தனது உதவி உத்தியோகத்தர்களை அவதானித்தார். பார்சலுக்குப் பொறுப்பான கிளாக் சின்னையா, யன்னலுக்கு வெளியே விறாந்தையில் நின்ற வாடிக்கையாளருக்கு ஏதோ விசேடமாக விளக்கிக்கொண்டு உள்ளே கதிரையில் இருந்தார். முத்திரை விற்பவரும், மணியோடருக்கு பெறுப்பானவரும் சுறுசுறுப்பாக இயங்கினர். பீயோன் பீதாம்பரம் போஸ்ற் மாஸ்டருக்கு தேநீர் எடுத்துச்சென்று கொண்டிருந்தான். வெளியே சனம் நெருங்கியடித்து தமது முறைக்குக் காத்திருந்தனர்.

      சிகப்புச் சட்டை அணிந்த கில்லாடி தோளில் தொங்கிய துப்பாக்கியை கையில் ஏந்தியபடி திடீரென தபாற் கந்தோருள் பாய்ந்து புகுந்தபடி கைதடி வடுவா போஸ்ட் மாஸ்டர். கறுப்பு நரியின் வால் நீஎன்று காட்டுக் கூச்சலிட்டான். கில்லாடியின் பின்னே அவனது இளம் உதவியாளர் மூவர். கைகளில் கொட்டன்கள். எல்லோரும் சிவப்புச்; சட்டையில். காக்கி காற்சட்டை கழுதைப்புலி இயக்க சீருடை. வெளியே நின்ற வாடிக்கையாளருக்கும், உள்ளே இருந்த தபாற் கந்தோர் ஊழியர்களுக்கும் கருமுண்டம் கில்லாடி, பயங்கரமான கழுதைப்புலி, தெல்லிப்பழைப் பொறுப்பாளன் என்பது தெரியும். எல்லோர் கால்களும் உதறின. கண்கள் வெருண்டு வெளியே தள்ளின. வெளியே நின்ற சிலர் தலையைத் தாழ்த்தி குனிந்து, தப்பினோம் பிழைத்தோம் என்று அவ்விடத்தை விட்டு தப்பி நகர்ந்து கொண்டிருந்தனர்.

                ராசையர் எழுந்து நின்றார். மேசையின் எதிர்ப்புறத்தில் கில்லாடி துப்பாக்கி சூடு பொறியில் கை பதித்தபடி டே ராசையர் நீ கறுப்பு நரிக்கு ஒரு லட்சம் கொடுத்தனி. நேறற்றிரவு அவன்கள் மூன்று பேருடன் பலா மரத்துக்குக் கீழே கதைத்துக் கொண்டிருந்தனீ.

                “இல்லை ஐயா. எனக்கு கறுப்பு நரிகள் எவரையும் தெரியாது.

                “தெரியாது?” என்று பொரிந்தபடி துவக்குச் சோங்கால் நெஞ்சில் குத்தினான்.

                “ஐயோ அம்மா.

                “காசு கொடுக்கவில்லை.

                “இல்லை ஐயா.

                “விசாரணை இருக்குது வாடா என்னோடு.

                யாராவது தனக்கு உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தடியன் சிவமூர்த்தியை---முத்திரை விற்கும் கிளாக்கைப் பார்த்தார். சிவமூர்த்தி வாயை ஆவென்று வைத்தபடி பட்டமரம் போல விறைத்துப்போய் நின்றார். எங்கே சண்டை சச்சரவு என்றாலும் அங்கு பீயோன் பீதாம்பரத்தைக் காணலாம். அவன் கட்டாயம் நியாயம் பேசுவான் என்ற நம்பிக்கையில் அவனை நோக்கினார். அவன் பூனை பார்த்த எலி போல பயந்து உதறி முழுசிக்கொண்டு நின்றான்.

                கில்லாடியோடு சென்ற ஒல்லியன் தும்பன், ஒரு கதிரையை இழுத்துப் போட்டு அதில் குந்தி இருந்து தலையை ஆட்டிக்கொண்டிருந்தான்.

                இராசையரின் முதுகில் துப்பாக்கி முனையை வைத்து, “ம். நடவடா பொறுக்கி நாயேஎன்றான் கில்லாடி.

                ராசையர் முகம் கறுத்து இருண்டிருந்தது. கண்கள் இருண்டு கொண்டிருந்தன. அவர் நடந்து கொண்டிருந்தார். அவரின் பின்னே மூன்று கழுதைப்புலிகள் அடி கொட்டன்கள் காவியபடி.

                தபாற் கந்தோர் எதிரே ஒழுங்கையில் அரசமரத்துக்குக் கீழே இந்திய சமாதானப் படை இரவல் கொடுத்த இருண்ட பச்சை இரும்பு லொறி.

                லொறி யாழ்-காங்கேசன் நெடுஞ்காலை வழியே விரைந்து, மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலடியில் கிழக்கே திரும்பி ஓடிக்கொண்டிருந்தது.

                சிகரட் கொள்ளியால் ராசையரின் முகத்தில் குறிவைத்துக் கொண்டிருந்தான் கில்லாடி. முகம் முழுவதும் சூட்டு அடையாளம். ராசையர் வேதனையில் ஐயோ நான் கறுப்பு நரிகளுக்கு காசு கொடுக்கவில்லைஎன்று மீண்டும் மீண்டும் சொல்லி அழுதார்.

                கில்லாடி ஆந்தை விழியனுக்கு ஏதோ சைகை காட்டினான். அவன் வழம் பார்த்து, காலை அகல வைத்து ராசையரின் குதிக்கால் எலும்பில் பூவரசம் கொட்டனால் வெளுத்தான். ராசையர் ஐயோ அம்மாஎன்று குரல் எழுப்பியபடி குப்புற விழுந்தார்.

                லொறி வீமன்காமம் கொலனியில் வீதியைவிட்டு இறங்கி பனை அடைப்புள் மெதுவாக சாய்ந்து நிமிர்ந்து நகர்ந்து சொற்ப துரத்தில் நின்றது.

                ராசையருக்கு அது புதுவிடம். தெற்கே பார்த்தார். சிறிய புதிய ஓடு போட்ட ஒரேமாதிரியான கல்வீடுகள். நூறுவரை இருக்கும். அது எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் நலிந்த கூலித்தொழிலாளருக்கு அமைத்துக் கொடுத்த கொலனி என்பது ராசையருக்குத் தெரியாது. அதில் ஒரு வீடு கில்லாடியின் அம்மாவுடையது என்பதும் தெரியாது. தூதரத்தே ஒரு வீட்டு வாசலில் பச்சைச் சேலையில் நின்று தங்களை அவதானிப்பது கில்லாடியின் அம்மா பூஞ்சோதி என்பதும் ரைசையருக்குத் தெரியாது.

                ராசையர் தன்னைச் சுற்றியுள்ள பௌதிக காட்சிகளைப் பார்த்தார். சுற்றிவரப் பனைகள். சற்று அப்பால் அமைந்த பாக்கு நீரிணை கடலிலிருந்து வந்த காற்றில் பனைகளின் ஓலைகள் அசைந்து கொண்டிருந்தன. உச்சி வெயிலின் அகோரம் பனை அடைப்புள் தெரியவில்லை. ஒரு காவேலை மரத்தோடு உராசி ஒலி எழுப்பியபடி விழுந்தது. தும்பன் ஓடிப்போய் அதனை இழுத்து வந்து, ஓலை சரசரக்க அதனை உயர்த்தி ஏதோ புறுபுறுத்தபடி, ராசையரின் முதுகில் கருக்கு மட்டையால் மூசிமூசி அரிந்தான். ரணம் வெள்ளைச் சட்டையை செந்நிற மாக்கியது. காகங்கள் காகா என்று இரைந்தபடி பறந்து பறந்து பனைமர வட்டுகளுக்குத் தாவிக் கொண்டிருந்தன. நாய்கள் பல அவ்விடத்தை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தன. கொலனி வீடுகளில் வேலைக்குச் செல்லாமல் இருந்தவர்கள் தூரத்தூர நின்று அவதானித்தனர்.

                கிழக்கே தையிட்டி செல்லும் சாந்தா சந்திக்கு அண்மையில் ஒரு நடுத்தர மனிதர், கையில் மொத்த கறுப்பு துவரந் தடியோடு கில்லாடி கூட்டத்தின் வழமையான சங்காரத்தை கடைக் கண்ணால் நோட்டம் பார்த்துக்கொண்டு நின்றார். சற்று அப்பால் அமைந்த மயிலிட்டி வாசியான---அரையைச் சுற்றி ஒரு நாலுமுழ வெள்ளைத் துண்டும். தலையில் குந்தியிருந்த இன்னொரு சின்ன வெள்ளைத் துண்டும்---அந்த மனிதரது நாளாந்த உடைகள். அவர்கள் வாழ்வு செம்மண் சூழல் என்பதை அவது உடைகள் பிரசித்தம் பண்ணின. அந்தப் பரம்பரைக் கமக்காரனுக்கு கில்லாடியின் கூத்து விளங்கும். அருகே செல்ல வில்லை. ஆனால் அவர் மேய்த்துக் கொண்டிருந்த நூறுவரையான செம்மறி ஆடுகள் தலைகுனிந்து மேய்ந்தபடி மெல்ல மெல்ல கில்லாடி நோக்கி நகர்ந்தன. அதனைப் பார்த்த, கில்லாடியுடன் சென்ற, தறித்த பனங் குற்றி போன்ற, மேல் முரசு ஈயென்று காட்சி கொடுத்த உடும்பன்---ஆயுதம் தூக்க முன்னர் உடும்பன்தான் அந்தக் கமக்காரனின் செம்மறிகளை மேய்த்தவன்---அந்த மனிதனை தூசன வார்த்தைகளால் அர்ச்சித்தபடி அவர் கையில் இருந்த துவரந் தடியை பறித்து வந்து, “…. வடுவா எங்களுக்கு சாப்பாடு தந்தனீங்கள.; ……..” என்று ஏதேதோ சொல்லியபடி இளைக்க இளைக்க ராசையர் முதுகில் போடு போடென்று போட்டான். ராசையர் இரத்தம் கக்கினார். அவரின் ஓலக் குரல் கொலனி முழுவதும் எதிரொலித்தது.

                பனை அடைப்புள் ஆங்காங்கு பெரிய பெரிய பள்ளங்கள். சில ஏழு எட்டு அடிப் பள்ளங்கள். அவை கொலனி சனம் தமது ஜீவனத்துக்காக சல்லிக் கல்லு கிண்டி எடுத்து விற்பதால் ஏற்பட்டவை. ஆங்காங்கு சல்லிக்கல் கும்பிகள். பள்ளங்களில் காகங்கள் பறந்து பறந்து காகாஎன்று கத்தி எதனையோ தேடிக் கொண்டிருந்தன. நாய்கள் நாக்கைத் தொங்கப்போட்டு இளைத்தபடி கில்லாடியோடு வந்த நடுங்கிக்கொண்டு நிற்கிற நெடிய மனிதனைப் பார்த்து ஏதோ ஆழமாக யோசித்தன.

தெல்லிப்பழைப் பொறுப்பாளன் கில்லடியின் கொலைக்களம் அது என்பது பாவம் ராசையருக்கு தெரியாது. அவருக்குச் சொந்த ஊர் கைதடி. கொஞ்சம் கூடக் காசு கொடுத்து உயிர் தப்பலாம் என்ற நம்பிக்கை ராசையருக்கு இன்னும் இருந்தது. இன்னும் இரு தினங்களில் பூப்பு நீராட்ட விழா நடக்க விருந்த இரண்டாது மகள் கல்பனா கண்களில் அடிக்கடி தோன்றினாள். அம்மாவைப் போல செக்கச்செவேல் என்ற நிறம். அப்பாவைப் போல் உயரம். அடுத்து மூன்று பிள்ளைகளும் ஒருமித்துத் தோன்றினர். மனைவி மங்கா தலையிலடித்து ஒப்பாரி வைப்பதாக எண்ணங்கள் புரண்டன. அடிக்கடி வீதியை எட்டிப் பார்த்தார் எவராவது தன்னை மீட்க ஓடி வருகிறார்களா என்று பார்க்க.

பொலிஸ் சேவை எப்பவோ துப்பாக்கி ஏந்திய ஆரம்பத்திலேயே யாழ்ப்பாணத்துக்கு வணக்கம்சொல்லிவிட்டு மறைந்து விட்டது. கொஞ்சக் காலம் கறுப்பு நரிகளின் ஆட்சி நடந்தது. இந்திய சமாதானப் படை வந்த பின்னர், இப்பொழுது கழுதைப்புலிகள் ஆட்சி. அவர்கள் வைத்ததுதான் சட்டம். அப்பீல் கிடையாது. நீதிபதியின் கதிரையில் திருடன்---கொலைஞன் குந்தினமாதிரி நிலை. ஓடித்தப்ப பணம்-பொருள் வசதி வாய்ப்புள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு ஓடித்தப்பி விட்டார்கள்.

                ராசையரின் கமக்கட்டளவு உயரமான கில்லாடி ராசையரை முறைத்துப் பார்த்தபடி, “ஒரு லட்சம் என்றால் சொல். உன்னை போக விடுகிறேன்.

                “ஐயா, அவ்வளவு காசு என்னிடம் இல்லை.

                “பொய் சொல்லாதை. உன்னுடைய இரண்டாவது மகளின் பூப்பு நீராட்டு விழாவுக்கு நீ முப்பதினாயிரம் செலவு செய்கிறாய். உன்னுடைய நகைகளை விற்றால் தேறும்.

                ராசையர் கணக்குப் பார்த்தார். எல்லா நகைகளையும் விற்றால் ஒரு லட்சம் வரும். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்டு சண்முகம் ஆசிரியரை சுட்டுக் கொன்றது மனதில் தட்டியது. எதிரே உள்ள சல்லி அகழ்ந்த பள்ளத்தைப் பார்த்தபடி யோசித்தார். நான் செத்துப் போனால் ஒரு மணி பொன்னும் இல்லாமல் அந்தரிக்குங்கள்.அவர் வாய் முணுமுணுத்தது. அவரின் எதிரே உள்ள பகுதி பத்தடி ஆழம் இருக்கும். மேற்குப் பக்த்திலிருந்து சரிந்து சரிந்து வந்த பள்ளம். அதன் வழி நாய்கள் இறங்கிக் கொண்டிருந்தன.

                “போஸ்ற் மாஸட்டர் வடுவா. என்னடா சொல்லுறாய்? ஒரு லட்சம் தாறியோ அல்லது வைக்கவோ வெடி.

                ராசையர் கண்களை மூடி ஏதோ வாய் முணுமுணுத்துக் கொண்டு நினறார்.

                “நடவடா முன்னுக்கு.கில்லாடி.

                உடும்பன் முதுகில் ஒன்று கொடுத்து முன்னே தள்ளினான்.

                இன்னொரு கவடு வைத்தால் பத்தடி ஆழ கிடங்கில் விழவேணும.

                கில்லாடி துப்பாக்கிக் குழலை பிடரியில் பதித்து பொறியைத் தட்டினான்.

                ராசையர் தலை கவிழ்ந்தபடி பத்தடிப் பள்ளத்தில் தொம்மென விழுந்தார்.
 
                    
                “தெரியுமே? என்ன எல்லாத்துக்கும் தலை ஆட்டுறியள்?" ஜீவிதா அமிரின் வதனத்தை உற்றுப் பார்த்தபடி வினாவினாள்.

                அமிர் வாய் திறவாது அரைக் காதால் கேட்டபடி அவளது கன்னத்தில் கான மயில் நடனமிடுவதை ரசித்துக் கொண்டிருந்தான்.

ஐ.பி.கே.எவ். காலத்திலே மேட்டுக்குடிப் பெடியள் கில்லாடியைக் கண்டால் ஓடி ஒழிச்சவை. எத்தனை பேருடைய வீட்டைக் கொள்ளை அடித்தவர் தெரியுமே? அந்தப் பணத்தைச் சுருட்டிக் கொண்டுதான் லண்டனுக்கு ஓடி வந்தவர். கில்லாடி லண்டனில் வேலை செய்வதில்லை. இரண்டு கார், இரண்டு வீடு வைத்திருக்கிறார்."

துவக்கு தூக்கியவை பொதுவாக செல்வந்த, நிலபுலமுள்ள ஆட்களைத்தான் தேடித்தேடி சுட்டுக் கொன்றவர்கள். தமது ஏழ்மைக்கு அவர்களே காரணமென்ற பொறாமையில் நாய் சுட்டமாதிரிச் சுட்டவர்கள்.

நீங்கள் அந்த நலிந்த சனத்துக்கு எதிரானவர்போல."

அப்படியில்லை, மிஸ். எனது அத்தியந்த சிநேகிதி நர்த்தனாகூட ஏழை வம்சத்தவள்தான்."

                நர்த்தனா பற்றிய செய்தி அவளது உற்சாகத்தைச் சிதறடித்தது. சிநேகிதி என்றால் எதிர்கால மனைவி என்பது கருத்தல்லவேஎன்று தன்னைத்தானே தேற்றினாள்.
 
மிஸ்ரர்; அமிர் போகிற வழியில் உங்களை கில்லாடி வீட்டில் இறக்கிவிடுகிறேன். வாருங்கள்" என்று அமிரை அழைத்துச் சென்றாள்.

                அமிர் ஜீவிதாவின் பச்சைக் காரில் ஏற்றிக் கொண்டான். அவள் நெருக்கம் மிகுந்த லண்டன் நெடுஞ்சாலையில் லாவகமாக காரோட்டுவது அப்பொழுதுதான் யாழ்ப்பாணத்தி லிருந்து வந்த அமிருக்கு வியப்பாக இருந்தது.

லண்டன் வந்த பின்னர் காரோட்டக் கற்றுக்கொண்டீர்களா?”

ஜீவிதா உண்மை சொல்ல விரும்பவில்லை. அதனைக்கொண்டு தன்னை அடையாளம் கண்டுகொள்வான் என்று அஞ்சி பின்னர் சொல்கிறேன்’’ என்றாள்.
 
                கார் கில்லாடி வீட்டு வாசலில் நின்றது. அமிர் காரைவிட்டு இறங்கும்போது ஜீவிதா கூறுpனாள்.

"நீங்கள் கில்லாடி வீட்டில் இருக்கிறீர்கள். நல்லாயில்லை. அவனுக்குத் தொழில் இல்லை. இரண்டு வீடு இரண்டு கார் வைத்திருக்கிறான். வம்பை விலைக்கு வாங்கப் போகிறீர்கள்."


                அமிர் காரைவிட்டு இறங்கி கில்லாடி வீடு நோக்கி நடந்தான். ஜீவிதா லண்டனில் இயங்கும் கறுப்பு நரி இயக்கப் போராளி என்பது அன்றுதான் லண்டன் வந்த அமிருக்கு மட்டுமல்ல கிறேட் பிரிட்டனில் எவருக்குமே தெரியாத இரகசியம்.

தொடரும்

No comments:

Post a Comment