Tuesday 30 June 2015

இராஜகாந்தன் கவிதைகள் – 5


நீ சிரித்தால் 

சின்னதாய் நீ சிரித்தால்
சிறு பூக்கள் உன்னழகு.

நாணத்தில் நீ சிவந்தால்
தீயிலே பொன்னழகு.

கிசுகிசுத்து நீ கதைத்தால்
தென்றல் காற்றுன்னழகு.

அமைதியாய் நீ நடந்தால்
அசைந்துவரும் தேரழகு.

கால் கொலுசாய் நீ சிரித்தால்
கவிதை சொல்லும் உன்னழகு

கடலலையாய் நீ சிரித்தால்
அப்போதும் பேரழகு.

அள்ளிமுடிந்து கொண்டை போட்டால்
அது உனக்குத்தான் தனியழகு.

பள்ளிச் சிறுமி போல
பதறும் பேரழகு.

              துள்ளி விழுந்து கோபங்கொண்டால்
              கோடி பெறும் உன்னழகு.

              வெள்ளி வரும் கிழமைகளில் – நீ
              ஒப்பில்லா ஓரழகு
              வெண்ணிலாப் பேரழகு.
          






Sunday 28 June 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர்.பாலசுந்தரம்

அதிகாரம் 3 - பாதாளவுலகம்
அமிர் லண்டனை அடைந்து, கில்லாடி வீட்டில் தங்கத் தொடங்கி மூன்றாவது நாள் மாலை நேரம். வானம் இருண்டு கொண்டு வந்தது. மெல்லிதாக குளிர் தேகத்தைச் சுரண்டியது. வீதிகளில் வாகன, சன நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

                சொலிசிற்றர் நாகப்பனின் கந்தோரிலிருந்து ஜீவிதாவின் காரில் வீடு திரும்பியபோது கில்லாடி வீட்டில் இருக்கிறீர்கள். வம்பை விலைக்கு வாங்கப்போகிறீர்கள்" என்று அவள்  இரண்டாம் முறை எச்சரித்ததையும், கில்லாடி வீட்டில் நடக்கும் மர்மச் சம்பவங்களையும் இணைத்துப் பார்த்த அமிரைப் பயம் சூழ்ந்து உலுப்பியது.

                நிலத்தை இருள் கௌவியிருந்தது. அமிர் கில்லாடி வீட்டு வரவேற்பறையில் பஞ்சு மெத்தைபோன்ற இளஞ்சிவப்பு செற்றியில்இருந்தான். அச்சமயம், வெளியே குப்பை கொட்டும் பெரிய கரும் பச்சைப் பிளாஸ்டிக்வாளியில் கடந்த இரு நாட்களும் நடந்த அதே மாதிரி மூன்று தடவைகள் டொக் டொக்என்று தட்டும் சத்தம் கேட்டது.

Saturday 27 June 2015

விலங்கு மனத்தால் - சிறுகதை

 தொலைபேசி இடைவிடாமல் அடித்தபடி இருந்தது. நேரம் நள்ளிரவைத் தாண்டியிருக்கலாம் என்ற நினைப்புடன் விழித்து எழுந்து கொண்டான் ராகவன். பகல் எல்லாம் பட்ட அலைச்சல் உடம்பை முறித்துப் போட்டு விட்டிருந்தது.

தூக்கக் கலக்கத்தில் மணி இரண்டு இருபது.

"கனநேரமா ரெலிபோன் அடிக்குது. ஒருக்கா 'போனை' எடுங்களேன்" போர்வைக்குள்ளிருந்து மனைவி தேவகி முனகினாள். ராகவனின் கைகள் சுயமாகத் தொலைபேசியின் ரிசீவரைத் தேடியது.

"ஹலோ! யார் கதைக்கிறது?"
"அது நான். நான், பரணி!"

Sunday 21 June 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 2 - விண்ணன்கள்


அமிர் தலைமுடியைக் கோதி உயர்த்திய பொழுது ஜீவிதா கண்மடல்களை அகல விரித்து அவனது தலையில் நீளப்பாட்டுக்கு அமைந்த ஆழமான காயவடுவை அச்சத்தோடு நோக்கினாள். 

மிஸ்ரர் அமிர் ......" என்று வாயெடுத்த ஜீவிதா பயத்தில் வசனத்தை முடிக்காமல் அமிரின் தலையைப் பார்த்தாள்.

மிஸ் ஜீவிதா, ஏதோ கேட்க வாயெடுத்தீர்கள். ஏன் நிறுத்தி விட்டீர்கள்?"

உங்கள் ...... இல்லை ….. "

நீங்கள் தலையில் உள்ள தழும்பைப் பற்றி …."

ஆம். விபத்தால் ...." அவள் வசனத்தை முடிக்கவில்லை.

இல்லை."

நான் தெரிந்துகொள்ளக் கூடாதா?"

அது அச்சந்தரும் கதை."

கதையென்றால் எனக்கு அல்வா சாப்பிடுவதுபோல."

பயங்கரமான கதை."

உயிர்க்காற்று (2) - குறும் கதை




ஒருமுறை எனது ஆசன வாயில் நோய் வந்து கஸ்டப்பட்டுப் போனேன். Fistula என்று அந்த நோயைச் சொல்வார்கள். மலம் சிரமமில்லாமல் வெளியேற உதவும் சுரப்பிகளின் துவாரம் அடைபடுவதால், சுரப்பிகளிலிருந்து வெளிவரும் நீர் வெளிப்படாமல் கிருமிகள் அதனைப் பாதிக்கும். மூன்றுமுறை சத்திரசிகிச்சை செய்தபின்னர்தான் ஓரளவு முன்னேற்றம் வந்தது. கார் ஓடும் போதும், இருக்கும்போதும் 'போதும்' என்றாகிவிடும். தலையணை போன்ற வட்ட வடிவிலான 'பிளாஸ்ரிக் குஷன்' ஒன்று எப்போதும் என்னுடன் கூடவே பிரயாணம் செய்யும்.

ஒருமுறை இராசு மாமா என்னைப் பார்க்க வரும்போது - இப்படியானவர்கள் அமருவதற்காக மருத்துவ ரீதியில் செய்யப்பட்ட பிளாஸ்ரிக்கிலான வளையம் ஒன்றிருப்பதாகச் சொன்னார்.

Thursday 18 June 2015

விடுப்பு

இராஜகாந்தன் கவிதைகள் - 4
    
வருகிறது விடுமுறை, வாருங்கள் லண்டனுக்கு.
வந்துபோனபின் நீங்கள் பொரித்த வார்த்தைகளை வைத்த
நான் வரைந்த நளின மடல் ஒன்று கேளுங்கள்
*
‘அசுத்தமான வீதி அலங்கோலமாய் இருக்கே.
ஒடுக்கமான றோட்டு ஒழுங்கையாய் இருக்கே.’
கதைத்துக் கொண்டார்கள் கனடாக்காரர்கள்

Monday 15 June 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல்

கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 1 -  நச்சுப் பாம்பு




                 இலங்கையின் தமிழ் மணம் கமழும் வடபுல நகரம் யாழ்ப்பாணம். தரைகீழ் வடிகாலில் விளைந்த சோலி சுரட்டில்லாத மனிதர்களின் பூவும் பொட்டும் பொலிந்த தலை நகரம். அது அழிந்து மறைந்துபோன பழைய சரித்திரம். அதன் வரலாறு ரணத்தால் பதிவாகத் தொடங்கி ஒரு தசாப்தத்தின் மேலாகிறது. அந்த வரலாற்றுக் கோரத்தனம் நன்கு விளங்கியவர் யாழ்ப்பாண மேயர். இருந்தென்ன? அவர் என்ன மடைத்தனம் பண்ணினார் தெரியுமா?

                ஊர்க் கோழிக் கறியும் அரிசிமா இடியப்பமும் கேட்டு வந்தவனுக்கு மேயர் முகங்கோணாமல் சாப்பாட்டு மேசையில் அமரவைத்து விருந்து வழங்கினார். அவன் கறுப்புநரிகள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவன். எலிக் காதன். பெயர் வாசு. வயிறு புடைக்க வெட்டியபின் கோணல் வாயால் அரசியல் பொரித்தபொழுது,

Sunday 14 June 2015

உயிர்க்காற்று

படார்' என்றொரு சத்தம். நான் விழித்துக் கொண்டேன். இரவுப்பொழுதாகையால் அந்தச் சத்தம் பெரிதாகக் கேட்டது. எத்தனை மணியாக இருக்கலாம்? அப்பா வழக்கமாக நேரத்திற்கு (நாலரை ஐந்து மணியளவில்) எழும்பி  சுவாமி கும்பிடத் தொடங்கி விடுவார்.

"அது என்ன சத்தம்?" படுக்கையிலிருந்தபடியே அப்பாவும் கேட்டார். எல்லாரும் எழுந்து கொண்டோம். விளக்கைப் போட்டோம். ஆளாளுக்கு ஒவ்வொரு அறையாகத் தேடுதல் செய்தோம். ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பா மணிக்கூட்டைப் பார்த்தார். மணி மூன்று பதினைந்து.

Monday 8 June 2015

மறைவில் ஐந்து முகங்கள் - நாவல் - கதிர் பாலசுந்தரம்


அணிந்துரை - பேராசிரியர் க.பஞ்சாங்கம்

யாருக்காகவோ வாழ்வதற்காக இங்கே வாழ்கிறோம்...

மறைவில் ஐந்து முகங்கள் நாவலை முன்வைத்து...

27 – அத்தியாயங்களில் 336 பக்கங்களில் விரிந்து கிடக்கும் இந்த மறைவில் ஐந்து முகங்கள் என்ற யாழ்ப்பாணத்துக் கதிர்.பாலசுந்தரம் அவர்களின் நாவலை வாசிக்கின்ற ஓர் இந்தியத் தமிழன். எந்த அளவிற்கு இந்நாவல் கட்டமைக்கும் எடுத்துரைப்பு உலகிற்குள் பயணம் செய்யச் சாத்தியப்படும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிங்களப் பேரினவாதத்தின் வெறித்தனமான தாக்குதலினாலும், ஓர் அரசே தனது மக்களின் ஒரு பகுதியினரைச் சுட்டழிப்பதற்குத் தயாரான மனநிலையோடு செயல்படுகின்ற அரக்கத்தனத்தினாலும், பல்வேறு குழுக்களாகப் பிரிந்துகிடக்கும் தமிழீழ விடுதலை இயக்கங்களின் சகோதரக் கொலைகளாலும் உயிர்களை இழந்து, உறவுகளை இழந்து, சொத்துக்களை இழந்து, பழகிய மண்ணை இழந்து, படிப்பை இழந்து, கற்பை இழந்து, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு சமூகம் வாழ்வதற்கு அடிப்படையாக அமையும் வாழ்வின் அறங்களை இழந்து வாழும் நிலையில் விடப்பட்ட ஒரு காலகட்ட்த்து மனிதர்களின் சலம் வைத்த புண்களின் வலியாய் நீளும் வாழ்வு குறித்த எழுத்துக்களைக் குறித்து, மேற்கண்ட எந்தவிதமான இழப்புக்களும் இல்லாமல் வாழ்வதாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இந்தியத் தமிழன் என்ன அப்பிடியொரு பொருட்படுத்தக்கூடிய கருத்தொன்றை முன் வைத்து விட முடியுமெனத் தயக்கமாக இருக்கிறது.

பொறி - கதை

என்னுடைய வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் யூன் மாதமளவில் ஒரு எலி தவறாமல் வந்து போகும். யூன் மாதம் இங்கே குளிர் காலம்.

எலியைப் பற்றி பல எழுத்தாளர்கள் கவிதை கதைகளைப் படைத்திருந்தாலும், சிறுவயதில் படித்த ‘The Pied Piper’ என்ற  கதைதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. சங்ககால இலக்கியங்களில் எலியைப்பற்றி யாரும் எழுதியிருக்கின்றார்களோ தெரியவில்லை.

குட்டி எலி. அதன் உடம்பு நடுவிரல் நீளம் இருக்கும். அவருக்கு எங்கள் வீடு மிகவும் பிடித்திருக்கவேண்டும். நாங்கள் அமைதியாக இருக்கும் தருணங்களில் அவர் சுறுசுறுப்பாகிவிடுவார். வீடு முழுவதும் ஓடித் திரிந்து இம்சை செய்வதுடன் குறுணிக்குறுனிப் புளுக்கைகளை எங்குமே வீசிவிடுவார். அதன் மணம் சகிக்க முடிவதில்லை. தொல்லையோ தாங்க முடிவதில்லை. போன வருடத்திற்கு முந்தைய வருடம் வந்த எலியின் வயிறு சாதுவாகப் புடைத்திருந்ததை எனது அப்பா கண்டுகொண்டார். மறுவாரம் எண்ணற்ற பல எலிகள் வீட்டில் துள்ளிக் குதித்தன. குளிர் காலம் அதன் இனப்பெருக்க காலம் என்றாலும்கூட – ஒரு எலி என்ற கணக்கு எனக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. கடந்த மூன்று வருடங்களாக வந்து போகும் எலி, போன வருஷத்துடன் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் நடக்கவில்லை. இந்த வருடமும் வந்துவிட்டது.

Saturday 6 June 2015

முத்தமிழில் சிரித்த முகம் தனிலே

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 

அவுஸ்திரேலியாவில் இவரைக் காணும்போதெல்லாம்  என் உடலில் ஒரு புத்துணர்ச்சி தோன்றிவிடும். எந்த நேரமும் சிரித்த முகத்துடன் எல்லோரையும் கலகலப்பாக்கிக் கொண்டு காணப்படுவார். இவரைச் சந்திக்கும் தோறும் ஏதாவதொரு புது விடயத்தை இவரிடமிருந்து அறிந்து கொள்ளலாம். இலக்கியம் சம்பந்தமாக ஏதாவது சொல்லி எம்மை மகிழ்விப்பார். இவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கின்றன.

இவரின் பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது படித்தது வேலை பார்த்தது  எல்லாமே இலங்கையில். தற்போது குடியுரிமை பெற்று வசிப்பது அவுஸ்திரேலியாவில்.

Friday 5 June 2015

மறைவில் ஐந்து முகங்கள் - கதிர் பாலசுந்தரம்



முன்னுரை

 விடுதலைப் போருக்குள் தங்களை மறைத்து வைத்துக் கொண்டு தர்பார் நடத்தியவர்கள் பற்றிய இந்த நவீனம் இலங்கையின் வடபால் அமைந்த யாழ்ப்பாண தீபகற்பத்து சமகால அரசியல் வரலாற்றை ஒட்டியதகும்.

தமிழ்த் தலைவர்கள் ஒருமித்து வடகிழக்குத் தமிழர்களுக்கு ஒரு தனித்தாயகம் பெற முயற்சிப் பணிகளை வட்டுக்கோட்டையில் ஆரம்பித்ததை அடுத்து, சிங்கள அரசு தனது சிங்களச் சிப்பாய்களை ஏகபோகமாகக் கொண்ட முப்படைகளையும் ஏவி  பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

Monday 1 June 2015

மறைவில் ஐந்து முகங்கள் - கதிர் பாலசுந்தரம்

     
           
            நாவல்

வருகிறது! விரைவில்

‘வன்னி நாவல் ஆசிரியர்
கதிர் பாலசுந்தரத்தின்
போர்க்கால நாவல்

மறைவில் ஐந்து முகங்கள்.

"சுப்பர்...!" - குறும் கதை


 வான் மான் நூஜ்ஜின் என்னுடன் வேலை செய்பவன். வியட்நாமியன். ஐம்பத்தைந்து வயது நிரம்பிய அவன் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவன். வேடிக்கையானவன். அவனுக்கு ஆங்கிலம் எழுத வாசிக்க அவ்வளவாகத் தெரியாது. கொஞ்சம் கதைப்பான். ஒரு சில ஆங்கிலச்சொற்களை மாத்திரம் தெரிந்து வைத்துக் கொண்டு 'மாடாக' உழைத்துவிடுவான். காதலுக்கு எப்படி மொழி தேவையில்லையோ 'மாடாக' உழைப்பதற்கும் மொழி தேவையில்லை என்பான். சிலவேளைகளில் படிவங்களை நிரப்புவதற்காக என்னிடம் உதவி கேட்டு வருவான்.

கதைத்தொகுப்பின் கதை - லெ.முருகபூபதி

வீடு   மாறுவதைப்போல்   சிரமமான  வேலை   வேறு   எதுவும்  இல்லை  என்பது  எனது  மனைவியின் அனுபவம். வீட்டுத்தளபாடங்களை  அடுக்கிக்கட்டி  சுமந்து  ஏற்றி  ட்றக்கில் அனுப்பினாலும்,   புதிய  வீட்டுக்குச் சென்றதும்  அவற்றை இறக்கிப்பிரித்து   வைக்கவேண்டிய  இடங்களில்  வைத்து  புதிய வீட்டை   சீர்செய்வதற்குள்   போதும்  போதும்  என்றாகிவிடும்   என்று சொல்லிக்கொண்டிருந்தாள்அவள்   சொல்வதும்   சரிதான். அனுபவித்துப்பார்த்தால்   உண்மை    புரிந்துவிடும்.

இன்னும்    இரண்டு   வாரத்துக்குள்   புதிய  வீட்டுக்குச்செல்லவேண்டும். அதற்கிடையில்  அத்தியாவசிய   சமையல்   பாத்திரங்கள் , உடைகள். தலையணைகள்,    போர்வைகள்அத்துடன்   சோப்பு,   சீப்புஷம்பு, டவல்   முதலான   குளியலறை    சாதனங்கள்  தவிர்த்து   ஏனைய அனைத்தையும்    பெட்டிகளில்   அடுக்கினோம்.