Saturday 16 May 2015

அது ஒரு கனாக் காலம் - கவிதை

சின்னராசா இராஜகாந்தன்


 

தென்னங் குரும்பையில் தேர்செய்து
தேமாப்பூவில் மாலை கட்டி
தேங்காய் ஓட்டில் பொங்கலிட்ட
பென்னம் பெரிய திருவிழாவில்
பூவரசங் குழல் நாதஸ்வரம்
புளியமரம் கோவில் மடம்
பூவும் புதிய பிஞ்சும்
தின்று தீர்த்த பின்பும்
என்றும் காத்திருப்போம்
செம்பழக் காலம் வரை.

குயிலுக்கே வெட்கம் வர
பதிலுக்குக் குரல் கொடுப்போம்.
மாரி காலத் தவளைகளின்
மத்தள இசை கேட்போம்.
சாரைப் பாம்பு கண்டாலே
ஒரு வாரம் தூங்கமாட்டோம்.
பொன்வண்டு பிடித்து வந்து
தீப் பெட்டியில் அடைப்போம்
முட்டை போட்டால்
முப்பது பவுணில்
ஒற்றை மூக்குத்தி
செய் வதாய்
முடிவுகள் எடுப்போம்.

மின்மினி வளர்த்து
மின்சாரம் எடுத்து
சுன்னாகத்துக்கே அனுப்புவதாய்
என்னுமொரு திட்டம்.
ஊரிலே மழை பெய்தால்
மகாவலி திசை திரும்பும்
கடதாசிக் கப்பல் கட்டி
காங்கேசன் துறைக்கே
அனுப்புவோம் சீமெந்து.

கனவிலே பனம்பழம்
தலையில் வந்து விழும்.
அதிகாலையில்
கனகண்ணரின் பனங் காணியில்
நமக்கென்ன வேலை – “ஐயோ
இப்ப சொல்ல வெட்கமாயிருக்கு.”

மாணிக்கண்ணர் வீட்டு
மரத்திலேறிக் குதிச்சு
மாங்காய் திருடி
உமா வீட்டு உப்பு
துளசி வீட்டுத்தூள் தூவி
நினைத்தாலே வாயூறும்

பச்சைத் தண்ணீரும்
தேனாய் இனிக்கும்
பண்டிதர் ஐயா வீட்டு
நெல்லிக்காய் உண்டால்.

கொய்யாமரம் ஏறக் கண்ட
கோயில் ஐயர் சொன்னார்
“பிஞ்சு காய் தம்பி
கொஞ்ச காலம் பொறுங்கோ.” .
மரத்திலேயே தங்கி விட்டோம்

மங்களம் அக்கா வீட்டு
மாதுளைக்கு மன்னிப்பு.
மனுசன் கண்டால்
தோலை உரித்திடுவார்.

பள்ளி விடுமுறைக்கு
பவானி வந்து போவா.
பரத நாட்டிய ரீச்சராம்.
பத்து பதினைந்து வயது
கூடுதலாயிருக்கும்.
இருந்துவிட்டுப் போகட்டுமே.

கலா வீட்டு பலா மரம்
ஏனோ காய்ப்ப தில்லை?
கண்பட்டுப் போச்சாம்.
கலாமீதா? பலாமீதா?

இலந்தைப் பழம் பொறுக்கி
இலவச விநியோகம் – அதற்குள்
எதுவோ நெளியும் என்பதால்.

“வாலில்லாதவை வருகினம்
வாழைத்தார் கவனம்” என்பார்.
“செவ்விளநீர்க் குலையும்
களவு போகுது” என்று
செல்வேந்திரம் அண்ணர்
செய்தி சொல்வார்.

“மாடுகளைக் காணவில்லை”
தேடினார் மாரிமுத்து.
“இஞ்சை போகுதுகள்.”
காட்டினார் கயல்விழி.
“அதுகள் எருமைகள்.”
விளக்கினார் மாரிமுத்து.
எங்களுக்குச் சுணைக்கவில்லை.

வயல் காட்டில் நீச்சல் குளம்
வரும் வழியில் ஈச்சம் பழம்
புதர் காட்டில் முயல் துரத்தி
நாம் புறப்படுவோம் பிடிபடாமல்.

கொடியிலே கொவ்வம் பழம்
கொண்டு செல்வோம் கிளிக்காக
“செருப்பு பிஞ்சிடும்” என்று
கோபமாய் கிளி திட்டும்.
திட்டாதா பின்னே – அது
பச்சைக் கிளி யல்லவே
பருவக் கிளி ஆச்சே.

கிட்டி புள்ளும் கிளித்தட்டும்
சனமூகநிலைய சயிக்கில் ஓட்டமும்
சறுக்கு மரப் பந்தயமும் ……
உதை பந்தாட்டம் உண்மையில்
பொருத்தமான நல்ல பெயர்தான்
அடி உதையில்தான் முடிவடையும்.
அரவிந்தன் அடிக்கும் பந்து
அழகி அமுதா வீட்டுக்கு
அடிக்கடி போய் வரும்.

வேலிச்சண்டை என்றால்
விடவே மாட்டோம்
வெட்டு குத்து வரை
கோடு கச்சேரி வரை
கொண்டுபோய் சேர்ப்போம்.

பங்குனித் திங்கள் வந்தால்
பன்றித்தலைச்சி போவோம்
பக்குவமாய் இருக்கும்
பால்கறி கத்தரிக்காய்.
சந்நதி தேர் என்றால்
சுற்றுவது நாங்கள்
சர்க்கரை பந்தலைத்தான்.
நல்லூர்த் திருவிழாவும்
நன்றாக நடைபெறும்
நாங்கள் போவதோ
ஆங்கில படம் பார்க்க.
யாருக்கும் சொல்வதில்லை அதிலும்
ஆனந்தமுருகன் வாத்திக்கு.
தெரிஞ்சால் தயங்கவே மாட்டார்
தற்கொலை செய்ய.
அவருக்குத்தானே தெரியும்
எங்கள் ஆங்கில அறிவு.

புரட்டாசி சனி வந்தால்
புனிதா கூப்பிடுவாள் “கா கா கா.”
“காக்கையைக் காணவில்லை
நீ வந்து சாப்பிடு” என்பாள்.
குசினிக்கல்ல கூரைக்கு.

எங்கள் ஊர்த் திருவிழாவில்
முதல் மரியாதை நமக்குத்தான்.
பூநூல் போடாதகுறை ஒன்றுதான்.
அன்னநடை அகிலாண்டேஸ் வரியின்
கடைக்கண் பார்வை கிடையாதா?
காத்திருப்போம் கால மெல்லாம்.
சினிமா கதாநாயகியன்ன சிவப்பாயிருப்பாள்.
அக்கிரகாரத்துப் பெண் அப்படித்தானே.

அமெரிக்காவிற்கே
அணு ஆயுதம் விற்கவும்
அரபு நாடுகளுக்கே
எண்ணெய் ஏற்றவும்
ஈரான் ஈராக் போர் நிறுத்தவும்
அடிக்கடி கூடும் மதவடி மகாநாட்டில்
தயங்காமல் நாம் தலைமை வகிப்போம்.
தட்சரும் றேகனும் எங்களை சந்திக்க
தந்தி மேல் தந்தி அனுப்பியும்
சந்திசிரிக்க ஏமாந்து போனார்கள்
எங்களுக்கு நேரமில்லை என்பதால்.

எதுக்குமே எங்களை
வாத்திமார் அடிப்பதில்லை
அவைக்குத்தானே கைவலிக்கும்.

“பக்கத்து ஊரிலே
நாளைக்கு வேள்வியாம்.”
“பதுங்கி இருங்கோ”
பத்மா ரீச்சர் எச்சரிப்பார்.
பாலா வாத்தியோடு காதலென்று
கதை கட்டிவிட்டதே நாங்கள்தானே
பாசம் இருக்காதா பின்னே.

கற்றாளை மரங்களிலும்
கல்லூரிச் சுவர்களிலும்
காதல் ஜோடிகளின்
திருமணம் பதிவுசெய்வோம்.

செத்தாலும் மறக்குமா

சொந்த மண் வாசனை?

No comments:

Post a Comment