Sunday 31 May 2015

வந்தது வசந்தம் - கவிதை

இராஜகாந்தன் கவிதைகள் - 3
துகில் களைந்தெறிந்து
துறவறம் போன
சிறுபெரு மரங்களெல்லாம்
இல்லறம் நடத்த
திரும்பிய  தேனோ?

பனியிருள் போர்வையுள்
தனை மறைத்துறங்கிய
சூரியன் கண்திறந்து
தம்மையே நோக்குதல் கண்டு
துளிரிலை கொண்டு
வளர்ந்து வளர்ந்து
வாகான உடம்பையும்
கொடியிடை கொம்பையும்
கால்வரை மூடி
பச்சைப் படுதாவுள்
தலையினை நுழைத்து
குமரிகள் அன்ன
நாணிக் கோணி
தங்களுள் வளர்ந்த
வசந்த கால மரங்களெல்லாம்
வயதுக்கு வந்தனவோ?

வண்ண வண்ணப் பூக்கள்
வாய்விட்டுச் சிரிக்கின்றனவே.
வானம் என்ன
முறை மாமனோ?
முகில் மழையாகி
குடம்குடமாய்க் காவி வந்து
தலைக்குத் தண்ணீர் வார்க்கிறதே!

பச்சை மரங்கள் பருவமாகிய செய்தி
பதமான வாசனையாகி
தென்றல் காற்றில்
விரைந்து கரைந்ததுவோ?

பட்டாம் பூச்சிகளும் தேன் வண்டுகளும்
சுற்றிச் சுற்றி வருகின்றனவே!
சொர்க்கம் நீ என மகிழ்ந்து
சொக்கிப் போகின்றனவே! 


1 comment:

  1. அற்புதமான கவிதை
    கற்பனை வளமும் சொற்திறமும்
    பிரமிப்பூட்டுகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete