Monday 6 April 2015

மாஜாயாலத் தண்ணீர் - கதை


'சென்ற் கீலேஸ் பே'(St Heliers Bay) கடற்கரை நியூசிலாந்தில் ஓக்லாண்ட் நகரில் உள்ளது. மிகவும் அழகான கடற்கரை.

ஒரு பாறையின் அருகில் நானும் எனது கணவரும் அமர்ந்திருந்தோம். நல்ல வெய்யில். காலை பதினொரு மணி. கடற்கரையில் திருவிழாக்கூட்டம் போல மக்கள். 'வெய்யில் மினுங்கத் தொடங்கினால் வெள்ளையள் வெளிக்கிட்டிடுவினம்'

தூரத்தில், தோளில் ஒரு சீலைப் பையுடன் நெடிய ஒல்லியான ஒரு ஆணும்அவனுக்கு சற்றும் பொருந்தாத வகையில் புசுபுசுவென்று கொழுத்த ஒரு பெண்ணுமாக எம்மை நோக்கி வருகின்றார்கள். வந்ததும் தாமதமின்றி எங்கள் முன்னால் மணலிற்குள் இருந்தார்கள். நெடியவன் அடிக்கடி தலையை கிலுகிலுப்பை ஆட்டுவது போல ஆட்டினான். அவள் புஸ் புஸ் என்று மூச்சை இழுத்து விட்டாள்.

 முதலில் அறிமுகப் படலம். பின்னர் சுற்றுப்புறச் சூழல் மாசடைதல், புவி வெப்பமடைதல், இனங்களுக்கிடையிலான பூசல் என தொடர்ந்தது.  அவர்கள் ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருப்பதாகவும், 'சாந்தி... சமாதானம்... உலக அமைதி' வேண்டிப் போராடுவதாகவும் சொன்னார்கள். அவன் ஒரு கிறிஸ்து. அவள் ஒரு முஸ்லிம். அவர்கள் சொன்னார்கள். அவர்களின் உரையாடல் சுவாரஸ்யமாக இருந்தது.

அவன் 'சாராயப்போத்தல்' போன்ற ஒன்றையும், அடி நீண்டு - நுனி அகன்ற கிளாஸ் ஒன்றையும் துணிப்பைக்குள் இருந்து எடுத்தான். கிளாசை ஒரு வெள்ளைத்துணியால் துடைத்தான். 'மஜிக்' செய்யப் போகின்றானோ? அந்த கிளாசிற்குள் நீரை ஊற்றினான். தலையை ஒருமுறை ஆட்டிவிட்டு 'சுத்தமான தண்ணீர்' என்றான். அவள் புஸ் புஸ்சென்று இரைந்துவிட்டு "இதை மாறி மாறி நாங்கள் பருக வேண்டும்" என்றாள். 'ச்சீ' என்று முகம் சுழித்தேன் நான். அந்தத் தண்ணீருக்குள் ஏதாவது கலந்திருக்கலாம். கணவர் அதை வாங்கி, தேர்ந்த ஒரு விஞ்ஞானி போல நிமிர்த்தி பின் சரித்துப் பார்த்தார். அவர்கள் இருவரும் எங்களைப் பார்த்தபடி இருந்தார்கள்.

"நீங்கள் பயப்படுகின்றீர்கள் போல் இருக்கிறது. உங்களுக்குப் பயமென்றால் நான் முதலில் பருகுகின்றேன்" என்றாள் அந்தப் பெண். பருகவும் செய்தாள். அடுத்தது எனது கணவரின் 'ரேண்' என்றாள். பெண் - ஆண் - பெண் - ஆண் என்பதுதான் முறை. அப்படியென்றால்தான் சாந்தி சமாதானம் நிலவும் என்றாள். நீங்கள் சுத்தம் பேணுபவர்கள் என்றால், உதடுகள் கிளாசின் வெவ்வேறு பாகங்களில் படலாம் என்றார்கள். "எழும்பி ஓடுவோம்" என்றேன் நான். "இன்று காலையில் இருந்து இதுவரை 30 பேர்கள் பருகி விட்டார்கள். இதே போன்றதொரு தண்ணீர் குடிக்கும் சர்வதேச நிகழ்வை அகிலம் பூராவும் செப்டெம்பர் பதினொன்றில் நடத்த இருக்கின்றோம்" என்றார்கள். "ஏதாவது நடந்தால் அவர்களுக்கும்தானே" சொல்லிக் கொண்டே ஒரு பேனையை எடுத்து கிளாசிற்குள் வைத்து கலக்குக் கலக்கினார் கணவர். பின்னர் ஒவ்வொருவராகப் பருகி முடித்தோம்.

உதட்டில் ஈரம் காயவில்லை. அந்தப் பெண் மணலிற்குள் சரிந்தாள். அந்த நேரத்திலும் அவள் சரிந்த விதம் எனக்கு சிரிப்பை ஊட்டியது. அடுத்து எனது கணவர். தலையை ஆட்டி அந்த நெடியவன் சிரிப்பது தெரிகிறது. 'ஐயோ' என்று கூக்குரலிட எத்தனித்தேன். உதடுகள் அசைய மறுத்தன. சிரித்தபடியே நெடியவனும் சரிந்தான். தூரத்தே மூவர் எங்களை நோக்கி வருவது தெரிகின்றது. எனது கண்களும் ஒளி இழந்து போயின.

கண் விழித்த போது வீட்டுக் கட்டிலில் பத்திரமாக இருப்பதை உணர்ந்தோம். ஆனால் வீடு காலி. படுக்கை அறைக் கதவில் ஒரு துண்டு, 'மெமோ' ஒட்டியிருந்தது. "எங்கே காரை விட்டிருந்தீர்களோ, அங்கு வந்து உங்கள் காரை எடுத்துக் கொள்ளுங்கள்."

"படுபாவிகள்! எங்கடை காரிலேயே எங்களைத் தூக்கி வந்து வீட்டிலை போட்டு விட்டு, எல்லாவற்றையும் எங்கடை காரிலேயே அள்ளிக் கொண்டு போயிய்விட்டார்களே!"



No comments:

Post a Comment