Monday 9 March 2015

’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 20
பருப்புப் பார்த்த ஜவான்கள்

நான் பேசுவதை களுபண்டா தேவவாக்காய் எடுத்துக் கொள்பவர். எங்களுக்கிடையில் ஒப்பந்தம்.ஆறுமாதங்கள் முடிந்து வருகிற முதல் நல்லநாளில்தான் திருமணம். அதுவரை அழையாமல் வீட்டுக்கு வருவதைத் தவிர்க்கும்படி கூறியிருந்தேன்.
தெரிவிக்காமல் தளபாடங்கள் ஏன் அனுப்பினார்? கொஞ்சம் கண்டித்து வைக்கவேணும். சுசீலா அக்காவும், மணி அண்ணையும் களுபண்டாவின் உறவைத் துண்டிக்கத் துடிப்பது புரிகிறது.திருமணம் சொர்க்கத்தில் எழுதி முடிந்த கதை.

மணி அண்ணை மாட்டுத்தொழுவ வேலைகளைக் கவனிக்கிறார். ஏனைய சின்ன சின்ன வேலைகளையும் பார்க்கிறார். தடித்த சம்பளம். தன்னை ஓரங்கட்டுவதாகக் களுபண்டா எண்ணக்கூடும். சந்தேகம் கொள்ள வைப்பது அழகல்ல.

யாரது கிழக்கே வீதியில் தூரத்தே நடந்து வருவது? களுபண்டாதான். கேற்வரை போய் அனுப்பி வைக்க மனம் பதறியது. பிள்ளகைள் வருகிற நேரம் வேறு.

கேற்றை நோக்கி நகர்ந்தேன்.

'நோநா. சுகம் எப்படி?"
நல்ல சுகம். எங்களுக்குள் ஒப்பந்தம்."
'நோநா, வயல் விசயமா கதைக்க விருப்பம்."

தூக்கிவாரிப் போட்டது. மனித பலவீனங்களைப் பயன் படுத்தும் மனுசனா? தளபாடங்களை அனுப்பி மனங்குளிரப் பண்ணியது அதற்கா? விசாரணை குடைந்தது.
பண்டா, கதை கேட்கிற பிள்ளைகள் வரும் நேரம். செய்தி சொல்லி அனுப்புகிறேன்."
பதைப்பு புரி;ந்தது போலும். இளம் மனிதன் இடைஞ்சல் தர விரும்பவில்லை.
'நோநா, வசதியான நேரம் சொல்லி அனுப்புங்கள்."

களுபண்டா சிவந்த கிறவல் வீதி வழியே திரும்பினார். வழமையிலும் பார்க்க கால்கள் வேகமாக இயங்கின. என்னதான் வீராப்புப் பேசினாலும் மனிதன் உள்ளம் பூப்போன்றது. அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொள்ளும் சக்தி அற்றது.

பிள்ளைகளே,

'இன்றைக்குக் கடைக்குட்டி பாவலன் கதை கூறப் போகிறேன். பாவலன் முல்லைக்கு எதிர்மாறு. அதிகம் பேசமாட்டான். திட்டங்கள வகுத்துச் செயற்படுத்துவதில் பலே கெட்டிக்காரன். சகோதரங்கள் போல நல்ல நிறம் உயரம்.வீரம் நிறைந்தவன்.

ஆயிலடிப் பாடசலையில் மண்சுமந்த மேனியர்நாடகம் பார்த்து முடிந்து, புலிகளின் வாகனத்துள் முல்லை ஏறினாள். அப்பா அம்மா வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் வெளியே வீட்டுப் பக்கம்  பார்த்துக் கொண்டு நடுங்கினாள். பயத்தில் வேறு யார் யார் ஏறியுள்ளார்கள் என்பதைக் கவனிக்க வில்லை. புளியங்குளக்காட்டில் இறங்கும் பொழுதுதான் யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க உந்தியது.

முல்லை திகைத்துப் போனாள். தம்பி பாவலன் வாகனத்திலிருந்து இறங்குவதைக் கண்டாள். கவலை பற்றிப் பிடித்து ஆட்டியது. பதைபதைத்துப் போனாள். அம்மா அப்பாவுக்கு யார் துணை? தம்பி பாவலன் இருக்கிறான். அந்த நம்பிக்கையில்தான் புறப்பட்டேன். மனப் போராட்டம் தொடர்ந்தது. நெஞ்சு வலிப்பது போலவிருந்தது. வீடு திரும்பலாமோ என்ற எண்ணம் தலை காட்டியது. கண்களில் நாலாம் மாடியும் அம்மா, அப்பாவின் எலும்புக்கூடுத் தோற்றமும் நிழலாடின. மேலும், இலக்கியா தோன்றினாள். வாகனத்தோடு கொழுந்து விட்ட தீக்குள் பதை பதைப்பது போன்ற வேதனை. மனப்போராட்டம் தோற்றுப் போய் மெல்ல மெல்ல நெஞ்சுவலி மங்கி மறைந்து அகன்றது.
புளியங்குளத்தில் பெடியள் வேறு வாகனத்தில் ஏறினர். அது புறப்பட்டது. சின்னக்கா முல்லையை நோக்கித் தம்பி பாவலன் கை அசைத்தான். பின்னர் சந்திக்கவில்லை. ராச நாச்சியார் வம்சத்தைச் சேர்ந்த அவர்கள் இருவரும் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீண்ட கதைகள் பல பதிவு செய்தனர். ஆண்டுகள் பல உருண்டன. அந்திம காலம் வந்தது. உடம்பில் கிளைமோர் சுமந்து வீரசொர்க்கத்துக்குச் செல்லும் வழியில் கால் வைத்த பின்னர்தான் முல்லை எதிர்பாராமல் தம்பி பாவலனைப் பார்த்தாள். அவனோடு பேசத் துடித்தாள்.

புலிகளுடன் இணைந்த பாவலன் மற்றும் மாணவர்களுடன் இயந்திரப் படகில் பிரயாணித்து தமிழ்நாட்டை அடைந்தான். சேலத்தில் கும்பரபட்டி பயிற்சி முகாமில் விரைவில் தனித்துவ அடையாளத்தைப் பதித்தான்.
முகாம் பொறுப்பாளர் முகுந்தன். பாவலன் ஏனைய சிறுவர்களிலும் சற்று வித்தியாசமாய் இருப்பதைக் கண்டார். தோற்றத்தில் வயதுக்கு மிஞ்சிய வளர்ச்சி. செக்கச்செவேல் என்ற சிவப்பு. தோற்றத்தைவிட அறிவில் விவேகத்தில் ஈடிணையற்ற வித்துவம். ஆங்கில உயர் கல்வி வாய்ப்பளித்து இயக்கத்தின் தூணாக ஆக்க விரும்பினார். மேலிடத்தில் உத்தரவு பெற்று சென்னையில் மயிலாப்பூரில் உள்ள சர்வதேசப் பாடசாலையில் சேர்த்தார். விடுதியில் இருந்து படிக்கும் வசதிகள் செய்யப்பட்டன.

இந்திய சமாதானப் படை இலங்கை வந்த பின்னரும் அங்கு படித்துக் கொண்டிருந்தான். இந்தியப் படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் வெடித்ததை அடுத்து வன்னிக்கு அழைக்கப்பட்டு நெடுங்கேணியில் வசிக்க வசதி செய்யப்பட்டது.
நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் பாரதி என்ற பெயரில் படிப்பைத் தொடர ஒழுங்கு செய்தனர். யாருக்கும் அவன் இந்தியாவில் படித்ததோ, புலிகள் அமைப்பில் இருப்பதோ தெரியாது. பெற்றாரை இழந்த அநாதையாகவே தெரியும்.

சமாதானப் படையுடன் யுத்தம் வெடித்தது. அண்ணை யாழ்ப்பாணம் கொக்குவில் வசிப்பிடத்திலிருந்து தலைமறைவாகினார். வன்னி நெடுங்கேணிக் காட்டுள் வாடி அமைத்தார்.

விரும்பிய புலி உறுப்பினர்கள், இயக்கத்தை விட்டு வெளியேற அநுமதிக்கப்பட்டனர். துண்டெழுதிக் கொடுத்து விட்டுக் கணிசமானவர்கள் வெளியேறினர்.

சிறு பிரிவினர் யாழ் குடாநாட்டில் தொட்டம் தொட்டமாக மறைந்திருந்து இந்திய படைகள் மீது கொரில்லா தாக்குதல் மேற்கொண்டனர். கொரில்லாப் போரில் ஈடுபடாதவர்கள் வன்னிக் காட்டுள் வேறுஇடங்களில் மறைந்து வாழ்ந்தனர்.

அண்ணை தலைமறைவாக வாழ்ந்த காடு, என்றும் பசுமையான பெருஞ் சோலைக் காடு. நெடுங்கேணிக்குச் சற்றுத் தொலைவில் அமைந்தது. இருபத்திநான்கு மணி நேரமும் போராளிகள் காவல். அண்ணையின் வாழ் விடத்தைச் சுற்றி மூன்று சுற்றுப்படை அரண்கள். முதலாவது சுற்று அரண் 300 மீட்டர் விட்டத்தில் அமைந்தது. இரண்டாவது ஒரு மைல் விட்டத்தில் அமைந்தது. மூன்றாவது காட்டு எல்லை ஓரமாக அமைந்தது. காவல் படைகளின் பொறுப்பாளர் கேணல் பானு. அவர் பாடசாலை சென்றுகொண்டிருந்த தம்பி பாவலனை, சமாதான இந்தியப் படையின் நடமாட்டத்தைத் துப்பறிய பயன்படுத்தினார்.

சென்னையில் படிக்கும் பொழுது பாவலன் ஹிந்தி சரளமாய்ப் பேசக் கற்றுக் கொண்டான். நெடுங்கேணியில் பேருதவியாக இருந்தது. அப்பகுதியில் இருந்த மஹாராஸ்திர ஜவான்கள் சிலருடன் நட்பு ஏற்பட்டது. அநாதை என்று சொல்லி சமயல் கட்டுவரை சென்று பிற்லா பாக்றி சாப்பிடுவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டான்.

ஒருநாள் பிற்லா பாக்றி சாப்பிட்ட சமயம். அதிகாரிகள்இருவரது உரையாடல் உசார்படுத்தியது. அருகே இருந்து எல்லாவற்றையும் கிரகித்தான். வீடு சென்றதும் மறைத்து வைத்த கைத்தொலை பேசியில் பேசினான்.
'பானு அண்ணை. பெரிய சுறா வலையில் அகப்பட்டிருக்குது அண்ணை."
என்னடா பாவலன் துப்பு ஏதன் கிடைத்திருக்கா?"
ஓம். நாளைக்கு, அண்ணை இருக்கிற காட்டுக் குள்ளே 200 மராட்டி படை வருகுது. கிழக்குப் பக்கத்தாலே நுழையுது. ஒவ்வொருத்தனும் இரண்டு நாள் சாப்பாட்டோடு வாறான். 90 பேர் சப்போட்படை. உணவு, தண்ணி, யுத்தப் பொருள் விநியோக சப்போட் படை பின்னே நகருது."
'புதிதாக வேறு ஏதாவது துப்புக் கிடைத்தால் சுணக்காமல் சொல்."
'பானுஅண்ணை.அந்தப் பக்கம் வர ஆசையாய் இருக்கு?"
வேண்டாம். காட்டிக் கொடுக்கும். உன்னையும் நோட்டம் பார்ப்பான். கவனம்."

அண்ணையும் கேணல் பானுவும் இந்தியப் படையை மடக்கத் திட்டம் தீட்டினர்.

அடுத்த நாள் காலையில் இந்தியப் படை காட்டுள் நுழைந்து நகர்ந்தது.அரைமைலுக்கு மேல் தாண்டிவிட்டார்கள்.
முன்னே நகர்ந்த ஒருவன் 'பருப்பு, பருப்பு" என்று கத்தினான். அதிகாரிகள் ஓடிச் சென்றனர்.
இங்கே பாருங்கள். தரையில் பருப்பு. நீளத்துக்கு ஆங்காங்கு தெரியுது. புலிகள் முகாமுக்குப் பருப்பு எடுத்துச் செல்கையி;ல் கொட்டுப்பட்டுள்ளது."
பருப்பு நீளத்துக்கு படை நகர்ந்தது. ஒரு மைலைத் தாண்டிவிட்டது.
திடீரென துப்பாக்கி ஓசை சரமாரியாகத் தொடர்ந்தது. ஜவான்கள் தொம் தொம்என நிலத்தில் விழுந்தனர். எங்கிருந்து சுடகிறார்கள? தெரியவில்லை. மரங்களுடன் மறைய ஓடினர். மிதிவெடிகள் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தன.
இரண்டு மணித்தியாலங்கள். இந்தியப் படைகளை நோக்கித் துப்பாக்கிக் குண்டுகள் பறந்தன. நிலைகுலைந்து போயினர். எங்கே சுடுவது? தெரியவில்லை. யார் தலையும் தெரியவில்லை.
புலிகள் பங்கருள்ளும், சருகுக் குவியல் உள்ளும் மறைந்திருந்து சுட்டனர். சிலர் மரங்களிலிருந்து ஆர்.பி.ஜி. செல் ஏவினர்.கிளைய்மோர்குண்டுஒன்று வெடித்தது. உடல்கள் பலசிதறின.

அதிகாரி சமாதானப்படைதிரும்ப உத்தரவு கொடுத்தார்.
திரும்பி வந்த வழியில் புலிகள் மறைந்து நின்று தாக்கினர்.

அதிகாரி உதவி கேட்டுத் தலைமை அலுவலகத்துக்குச் செய்தி அனுப்பினார்.

மூன்று யுத்த விமானங்கள்,ஆறுஹெலிகொப்டர்கள் காட்டின் மேலே வட்டமிட்டன. அவைதாழப் பறந்த வேளை காடு அதிர்ந்தது. மரக்கிளைகள் புயலில் சிக்கியது போல வேகமாக ஆடின. படையினர் பாதிக்கப்படுவர் என்ற பயத்தில் குண்டு வீசவில்லை. இயந்திரத்துப்பாக்கியால் சுடவில்லை.
பரந்த பெரிய காடு. மேலே இருந்து பார்த்தால் வெறும் பச்சை விதானங்கள் மட்டும் தெரிந்தன.

புலிகள் றைபிள்கள். உணவுப் பொருட்கள், வெடி பொருட்களைச் சேகரித்து காவிச் சென்றனர்.

பிரேதங்களை மீட்ட பின்னர் இந்தியப் படை என்ன செய்யும்? அண்ணைக்குத் தெரியும். அப்பிரதேசத்தில் இருந்த அத்தனை புலிகளும் வேறு காட்டுக்குத் தாவினர். ஏலவே வசதிகள் தயாராக இருந்தன.

பிரேதங்கள் சேகரிக்கப் பிற இடங்களில் இருந்து 700 இந்தியப்படை வீரர் வந்தனர். எட்டு மணி நேரம் எடுத்தது. ஒரு ஜவான் தன்னும் எஞ்சவில்லை. சப்போட் படையும் எஞ்சவில்லை. எண்ணினார்கள் 290 சடலங்கள்.

சடலங்கள் பொறுக்கி முடிய இந்திய குண்டு வீச்சு விமானங்கள் அண்ணை தங்கிய காட்டுப் பகுதியில் குண்டுகளைப் பொழிந்தன. செல்கள் ஆயிரக் கணக்கில் விழுந்து வெடித்தன. மரக்கிளைகள் முறிந்து முறிந்து விழுந்தன. முன்னர் சிங்களவன் விமானங்கள் குண்டு பொழிந்தன. இந்தியப் படைகள் வந்த பின்னர் அவை முகாம்களுள் முடங்கி ஓய்வெடுத்தன. அந்த இடத்தை சமாதானம் பேண வந்த இந்திய விமானப் படை எடுத்து ஈழ மண்ணில் குண்டுகளைவீசி அட்டகாசம் புரிந்தது.

நெடுங்கேணி படை முகாமில் 40 ஜவான்கள் வரைதான் எஞ்சியிருந்தனர்.

தங்களுடைய தாக்குதல் திட்டத்தை எவரோ முன்னரே புலிகளுக்கு அறிவித்துள்ளனர். யாராக விருக்கும் என்று அதிகாரி தலையை உடைத்தார். கோவலன்மீதுதான் சந்தேகம் விழுந்தது. இந்திய ஜவான்களுக்குத் தனது பெயர் கோவலன் என்று பாவலன் சொல்லியிருந்தான். சில படை வீரர்கள் ஜீப்பில் பறந்து சென்றனர் கோவலன் வீட்டுக்கு.
தலை முழுவதும் பால் போல நரைத்த கிழவி வந்தார். கூன்விழுந்த உடம்பு. நீலச் சேலை. வட்டக் கண்ணாடி. கையில் வெள்ளிப்பூண் போட்ட பொல்லுப் பிடித்தபடி கிழவி வெளியே வந்தார்.
எங்கே கோவலன்?"
'கோவலன் என்று யாரும் இங்கு இல்லையே."
சிவப்பாய் உயரமாய். பையன்."
'அவனா? பாரதி. அவன் சிநேகிதன் வீட்டுக்குப் போயிட்டான். இன்றைக்கு இரவு அங்கே தங்கி நாளைக்குக் காலையில்தான் வருவான்."
எங்கே சிநேகிதன்வீடு?"
இந்த வீதி வழியே போங்கள். கோவில் வரும். கோவிலுக்கு முன்னே சற்றுத் தள்ளி உள்ள வீடு."
இராணுவஜீப் பாவலனைத் தேடிப் பறந்தது.
கோவில் முன் அமைந்த அந்த வீட்டுக்கே அவன் போகவில்லை. கண் தெரியாத கிழவன் மட்டும் வசித்தார்.
ஜவான்களுக்கு தலைநரைத்த கிழவியில் சந்தேகம். கைது செய்யப் போனார்கள். கூவி அழைத்தார்கள். கிழவியைக் காணவில்லை.

பாவலனையும் கிழவியையும் சந்தேகமானவர்களையும் கைது செய்ய அடுத்த தினம் தேடுதல் வேட்டைக்கு படை வீரர்கள் காலை ஆறு மணிக்கு நெடுங்கேணியைச் சுற்றி வளைத்தனர். வேறு முகாம்களிலிருந்து வரவழைத்த தலைப்பாக்கட்டித் தாடி வைத்த படை 200 ஜவான்கள். மராட்டி றெஜிமென்டைச் சேர்ந்த 300 பேர். இன்னும் குர்க்கா வீரரும் காணப்பட்டனர். இவர்கள் எல்லாம் ஹெலிகொப்டர்களில் கொண்டு வந்து நள்ளிரவில் இறக்கப்பட்டவர்கள்.

மூன்று திக்குகளிலிருந்து படைகள் நெடுங்கேணிக்குள் பிரவேசித்தன. எல்லோர் கைகளிலும் மரக் கொட்டன்கள். ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று எல்லோரையும் புளியங்குளம் முல்லைத்தீவு வீதிக்குச் செல்லக் கட்டளையிட்டனர்.
இளைஞர்களை தாக்கினர். சிலரின் தலை முடியைப் பிடித்துக் காலால் உதைந்தனர்.கைமுஸ்டியால் நெஞ்சில் குத்தினர்.
தலைப்பாக்கட்டின தாடிகள்தான் பெருங் கொடுமை புரிந்தனர். மற்ற ஜவான்கள் அத்தனை மோசமாக நடக்கவில்லை.

ஒரு வீட்டுக்கு ஐந்து ஜவான்கள் சென்றனர். வீடு பூட்டியிருந்தது. அப்பொழுதுதான் கந்தவனம் வயலிலிருந்து வந்திருந்தார்.
'கதவைத் திற."
'சாவி இல்லை."
'சாவி எங்கே.?"
 ‘மனைவியிடம். அவர் தாய் வீட்டில் இருப்பார். நிறைமாதக்கர்ப்பிணி."
'போய் திறப்பை வாங்கி வா."
கந்தவனம் ஐம்பது யார் வரை போய்விட்டார். படார். சூட்டுச்சத்தம். பாட்டில் விழுந்தார் கந்தவனம். பின்னர் கண் விழிக்கவில்லை.
ஐந்து வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள், நடக்க முடியாத முதியவர்கள் தவிர அனைவரும் வீதியில் நின்றனர். ஆண்களை கொடும் வெயிலில் முழங்காலில் இருத்தி வருந்தினர்.

'புலிகளை முழங்காலில் இருத்த வக்கில்லை. எங்களிடந்தான் வால் ஆட்டுறான்." முழங்காலில் இருந்த நடுத்தரவயது மனிதர் பொரிந்தார்.
வயித்துக் குத்தை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக்கூடாது."
கவனம். தங்களை ஏசுறம் என்று சந்தேகம் வந்தால் சுட்டுத்தள்ளிப் போடுவான்கள். எங்களை மனுசனாகக் கணக்கெடான். பீடி மாதிரித்தான் நினைப்பான்."
முழங்காலில் இருந்தவர் மத்தியில் சிரிப்பொலி வெடித்தது. ஜவான் கொட்டனைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தான்.

ஒட்டிசுட்டான் செல்லும் சந்தியில் பன்னிரண்டு வாலிபர்களை நிரைக்கு முழங்காலில் இருத்திக் கொட்டன்களால் முதுகில் அடித்தனர்.

ஒலுமடுவிலிருந்து ஐந்து பேர் சைக்கிலில் வந்தார்கள் வீடு கட்டும் தொழிலாளர். மறித்து நிரையாக நிறுத்திச் சுட்டனர். அதில் செல்வராசா என்ற இளைஞன் இரு கிழமைகளின் முன்னர்தான் விவாகம் செய்தவர். முத்தையாவுக்கு ஆறுபிள்ளைகள்.
ஒரு கோஷ்டி மராட்டி வீரர்கள் எல்லைப் புறத்தில் தேடுதல் செய்தனர். ஒரு பற்றை மறைவில் நீலச் சேலை, நரைத்த தலைமுடி---டோப், வெள்ளிப் பூண் போட்ட பொல்லு அகப்பட்டது. எடுத்து வந்து அதிகாரியிடம் கொடுத்தனர். பின்னர்தான் அவர்களுக்கு தெரியவந்தது. கோவலன் வசித்த வீட்டில் வசித்த கிழவியின் உடை, பொல்,டோப் என்று.

இறுதியில் மாலையாகிய பொழுது பதினான்கு பேரை தமது முகாமுக்கு அழைத்துச் சென்றனர். நெடுங்கேணியைச் சேர்ந்தவர்கள் எட்டுப் பேர். ஏனையவர்கள் வழிப் போக்கர்கள்.
அடுத்த தினம் பெற்றார் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளுடன் போய் விசாரித்தனர். 'நாங்கள் எவரையும் கைது செய்து கொண்டு வரவில்லை" என்று சொன்னார்கள்.
இற்றைவரை பதினான்கு பேருக்கும் என்ன நடந்தது என்று மனித உரிமை நிறுவனங்களுக்கும் தெரியாது.

பதிநான்கு பேரில் ஒருவன் பாரதி என்ற குசுகுசுப்பு பரவலாக நெடுங்கேணி எங்கும் கேட்டது. அவன் யார்? எங்கிருந்து வந்தான்? எங்கே ஹிந்தி மொழி கற்றான்? அதைப்பற்றிய அலசல்கள் நடந்தன. அவன்தான் இந்திய இராணுவம் தேடுதலுக்குச் செல்வது பற்றிய துப்பு புலிகளுக்கு கொடுத்தவன் என்று பொதுவாக நம்பினர். புலிகளின் சித்து விளையாட்டை மக்கள் புரிந்து வைத்திருந்தனர்.

"இந்திய படைகள் பாரதியைக் கண்டுபித்துக்; கொன்று புதைத்திருப்பார்கள்" என்ற அலசல்கள் சில நாட்களால் மங்கி மறைந்து போயின.

பின்னர் ராச நாச்சியார் வம்ச வாரிசு பாவலன் பற்றிய கதையே எவர் காதிலும் விழவில்லை.

~~~~~~~~~~~~~~ இன்னும் வரும்... ~~~~~~~~~~

No comments:

Post a Comment