Sunday 22 February 2015

’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்

கண்ணகி - அதிகாரம் 18

இந்தியாவின் வீடு கட்டும் வேலை நிறைவேறிவிட்டது. இரண்டு படுக்கை அறைகள். வரவேற்பறை. சிறிய களஞ்சிய அறை. சமையல்அறை. குட்டிப் போட்டிக்கோ.
வீடு குடிபுகலுக்கு மணி அண்ணை, சுசீலா அக்காவை மட்டுமே அழைத்தேன். கதை கேட்கும் பிள்ளைகளை அழைத்திருந்தால் நிட்சயம் வந்திருப்பார்கள். பெற்றார் விரும்ப மாட்டார்கள்.வாய்ப்பைபயன்படுத்த விரும்பவில்லை.

இன்று காலை பதினொரு மணி. நல்ல நேரம். பால் காய்ச்சி வீடு குடிபுகுந்தோம்.

வரவேற்பறையில் சீமெந்து நிலத்திலிருந்து வயல்கள் பற்றிக் பேசிக்கொண்டிருந்தோம். மிதி வெடிகள் அகற்றி முடிந்து பாவனைக்கு ஒப்படைக்க ஆயத்தம். ராச நாச்சியார் வம்சத்துக்கு நூற்றிபத்து ஏக்கர்.
அப்பொழுது வீதியில் வந்த லொறி ஒன்று கேற்எதிரே நின்றது. ஒருவர் இறங்கி வேகமாக நடந்து வந்தார்.

மேஜர் சிவகாமி?"
நான்தான்."
உங்களுக்கு தளபாடம் வந்திருக்குது."

மேற் கொண்டு எதுவும் பேசவில்லை. நீல பூப் போட்ட சாரம். கசங்கிய வெள்ளைச் சேட். முப்பத்தைந்து வயதிருக்கும். வாகனம் நோக்கி விறுவிறென்று சென்றார்.
தளபாடங்களை இறக்கினார்கள். கறுப்புக் கட்டைக் காற்சட்டை அணிந்த கட்டை மயிர் குத்தி நிற்கும் ஒல்லிப் பையன் ஓடியோடி உதவி புரிந்தான்.
இரண்டு கட்டில். ஒன்று இருவர் படுப்பது. மெத்தை. அலங்காரகண்ணாடி மேசை. சோபா சோடிகள். உரிய தானங்களில் அழகாக வைத்தனர்.
போகும் பொழுது பற்றுச் சீட்டுக் கொடுத்து விட்டு வெளியேறினார். ஐம்பத்தையாயிரம் செலுத்தியதற்கான பற்றுச் சீட்டு. களுபண்டா பெயரில் இருந்தது.
பற்றுச் சீட்டைச் சுசீலா அக்காவிடம் நீட்டி னேன். பார்த்துவிட்டு மணிஅண்ணையின்  கையில் ஊன்றித் திணித்தார்.
இருவரதும் முகங்களை அவதானித்தேன். அருவருப்புக்குறிகள் ஆட்சி பண்ணின. கண்கள் விழித்துப் பார்த்தன. வாய் திறக்கவில்லை. பொருளாதார காரணிகள் கட்டாயப் படுத்தி அவர்களை மௌனிகளாக வைத்திருந்தன. நெஞ்சம் ஊதி வற்றி விம்மியது. வாழ்க்கையின் விசித்திரங்கள் மனதை நெருடல் செய்தன.
இருவரும் போய் வாறம்என்று சொல்லாமலே போய்விட்டார்கள்.

ராச நாச்சியார் வம்சத்தின் வாரிசின் கதை ஆயிலடியில் வெறுப்புக்கும் தூற்றலுக்கும் இலக்கானது. நாறும் சகதிக்குள் அமிழ்ந்து போனாள். வெளியேறி தீர்த்தமாடி அழுக்கைக் கழுவ மாட்டாள். சொந்த இனத்துக்கு கொள்ளி சொருகிறாள்.என்று நம்பினர். அதேவேளைஇன்னொரு சம்பவம் தலைக்குள் தலை காட்டியது.

"அந்த வீடுகட்டிய மனுசன் சாரத்திலிருந்து விழுந்து செத்தது அபசகுனமாதிரி. சிவகாமி உன்னை உந்த வீட்டிலே வாழவிடாது" என்று சுசீலா அக்கா கூறினவ. அவவின் அபசகுன கூற்றைவிட, அந்தக் கூற்றை எமக்குப் பாரம்பரியமாக வழங்கிய மூதாதையரின் அச்சொட்டான ஆரூடம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அவர்களின் ஆரூடம் நிஜமாகப்போவது எவருக்கும் புரியாது.

மாலைஐந்து மணி.

'ஓ! புதிய தளபாடங்கள். அழகாய் உள்ளன." சொல்லி விட்டு பாய்ந்து போய் இரட்டைச் சோபாவில் உட்கார்ந்தாள் சிந்துசா.
நான் பதில் பேசவில்லை.
'அன்ரி,வீட்டைப் பார்க்கலாமா?"லீடர் கோமதி.
ஆம்| என்று தலை அசைத்தேன். சூழ்நிலை வாய் திறந்து இரண்டு நல்ல வார்த்தைகள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாய்ப் பேசுவதைக்கூட அபகரித்திருந்தது.
'கதையை ஆரம்பிக்கப் போகிறேன். இன்றைக்கு தங்கை முல்லையின் கதை. இரண்டு கதைகள்."
'சரி அன்ரி. நேரஞ் சென்றால் பெற்றார் தீப்பந்தங்களோடு அழைத்துச் செல்ல வருவார்கள்." கோமதி.
நாலாம்மாடியில் அப்பா அம்மா சித்திரவதை செய்யப்பட்டமை, முல்லையை உங்கள் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்துள் அகப்படுத்திக் கொண்டது.

ஆயிலடிப் பாடசாலையில் மண் சுமந்த மேனியர்நாடகம் பார்த்து முடிந்ததும், தங்கச்சி முல்லை அங்கும் இங்கும் பார்த்துவிட்டு பதுங்கிப் பதுங்கிப் போய் விடுதலைப் புலிகளின் புதிய வாகனத்தில் தொற்றிக் கொண்டாள். முன்னரே வேறு மாணவர்கள் அதற்குள் ஏறிக் குந்தியிருந்து திருதிருவென முழித்தனர். பெற்றார் உற்றார் வந்துவிடலாம் பார்த்துவிடலாம் என்ற அச்சம்.
முல்லை அடிக்கடி தலையை நீட்டி நீட்டி வீட்டிலிருந்து எவராவது வருகிறார்களா என்று கலங்கினாள். மச்சாள் சுமங்கலி தலைகண்களால் எச்சரித்து விட்டு தங்கள் வீட்டுப் பக்கம் ஓடியதைக் கண்டவள். சொல்லத்தான் ஓடினவள். கட்டாயம் சுமங்கலி இதுவ ரையில் சொல்லியிருப்பாள் என்று அவள் உள்ளம் அழுதது. அப்பா பாய்ந்து வந்தால் என்ன செய்வதென்று தெரியாமல் கூனிக்குறுகி நடுங்கினாள். வாகனத்தை நகர்த்தாமல் என்ன பண்ணுகிறார்கள்? மனம் புறுபுறுத்தது.

வாகனம் புறப்படும் பொழுது பதினாலு பேர் உள்ளே. அது கண்டு, இடப் பக்கம் சரிந்து நிமிர்ந்து பொல்லூன்றி நடந்து வந்த விடுதலைப் புலிகளின் புளியங்குளப் பொறுப்பாளர் செங்குட்டுவன் மிகச் சந்தோசப்பட்டார். நாலு பேராவது கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு வந்தவர்.ஆறுபேர் பெண்கள். எட்டுப்பேர் ஆண்கள். எல்லோரும் பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்கள். ஆயிலடி அரசினர் பாடசாலையில் ஓ.எல். வகுப்பிற்கு மேல் இல்லை. ஓ.எல். வகுப்பில் இருவர் மட்டும் எஞ்சியிருந்தனர். எவரையாவது அணுகி, 'இயக்கத்துக்கு வாறியா?" என்று செங்குட்டுவன் பொறி வைக்கவில்லை, அழைக்கவில்லை. சிங்கள இனத்தின் அட்டூழியங்கள் அக்கிரமங்கள் ஒரு தலைமுறையின் பிஞ்சு உள்ளங்களை வன்முறைப் போராட்டத்துக்கு அள்ளி சென்றுள்ளது. அடுத்த தலைமுறையினரின் சுதந்திரம் சுபீட்சத்துக்காக இந்தத் தலைமுறையினர் தங்களைப் பலிபீடம் ஏற்றுகின்றனர். வரலாற்றில் இந்த இளைய தலைமுறையின் தியாகம் யுகம் அழியும் வரை பிரகாசிக்கும். இப்படியானவீர நிகழ்வு புறநாநூற்றிலும் பதிவாகவில்லை.

முல்லைக்கு முந்திய தலைமுறையினர், சாத்வீக வழியில் போராடிப் போராடித் தோற்றுப் போன வரலாறு மட்டுந்தான் எஞ்சியிருந்தது. தலைவர்கள் சேர் பொன் இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா, அ.அமிர்தலிங்கம் - எல்லோரும் சாத்வீகத்தை நம்பியதால், நெஞ்சிலே நஞ்சு சுமந்த சிங்கள தலைவர்களால் திரும்பத் திரும்ப ஏமாற்றப்பட்டவர்கள்.
நரம்பில்லாத நாக்கால் சனம் அண்ணைதான் குஞ்சுகுருமன் எல்லாரையும் இழுத்துக் கொண்டு போய் 'பேபி றெஜிமென்ற்' படை அமைத்துதிருக்கிறார் என்று பேசிக்கொள்கிறார்கள்.

தங்கச்சி முல்லை நிரம்ப வாசிப்பவள். புலிகளைப் பற்றி, குறிப்பாக அண்ணையைப் பற்றி நிரம்பத் தெரிந்து வைத்திருக்கிறாள். அப்பா அம்மாவை தனித்து தவிக்கவிட்டுப் போட்டு போராடப் புறப்படமாட்டாள் என்றே நம்பினேன். ஏலவே நான்கு மூத்த உறவுகள் போர்க்களத்தில்.
தங்கச்சி முல்லைக்கு இயக்கம் சரிப்பட்டு வராது. சாப்பாட்டிலே மிகவும் சொகுசு. அம்மா அவளுக்காக விசேட சமையல் செய்வார்.
பின் வருவதைச் சிந்திக்க தெரிந்த புத்திசாலி. இயக்கப் பக்கம் காலடி வையாள். போர்க்களம் போக விரும்பமாட்டாள் என்றே பூரணமாக நம்பினேன்.
முதலில் வீட்டுக்கு ஒருவர்என்றே புலிகள் சொன்னார்கள். பின்னர் கணக்கைப் பெருக்கிக் கொண்டு போனார்கள். வீட்டுக்கு ஒருவர் மீதி எல்லாம் நாட்டுக்குஎன்றனர். அதையும் கடந்து சென்று ஒன்றுகூட இல்லாமல் வழித்துத் துடைத்து எடுத்துள்ளார்கள். இது எந்த நீதி நியாயத்துள் அடங்கும்? என்று அப்பா வெந்து வெடிப்பதில் நியாயம் இல்லை என்று சொல்ல முடியாது.

இயக்கத்துக்கு வந்த முதல் நாள். தங்கச்சி முல்லை விடுதலைப் புலிகளின் பெண்களுக்கான சுதந்திரப் பறவைகள் அமைப்பின் தலைவியைப் பார்த்தாள். வெள்ளைக்காரி. முல்லை முதன் முதல் வெள்ளைக்காரியின் முன் நின்றாள். அவள் வாய் முணுமுணுத்தது. அடேல் அன்ரி, அழகாய் இருக்கின்றார். உயரமாய், கயிறு போன்று வலிமையான உடல்டவாகு, ஆண்களைப் போல கறுப்பு முடியை கத்தரித்து வைத்திருக்கிறார். நீள் வட்டமுகத்தின் செங்கண்கள் ஊடுருவிப் பார்க்கின்றன.
வெள்ளைக்காரி பற்றி ஏலவே தெரிந்து வைத்திருந்தாள். பெயர் அடேல் ஆன் வில்பி. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வரகல் நகரில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர். மெல்பணில் தாதியாகக் கடமையாற்றி, பெரிய பிரித்தானியாவிற்குப் புலம் பெயர்ந்தவர்.
அங்கு இலங்கையைச் சேர்ந்த பாலசிங்கம் அங்கிளை விவாகம் செய்தவர்.

அடேல் அன்ரிதான் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவு, சுதந்திரப் பறவைகளுக்கு, ஆரம்பத்தில் தலைவியாகவிருந்து வழி நடத்தியவர்.

அடேல் அன்ரி தன் முன் நின்ற இளம் குருத்தைப் பார்த்தார். அவர் உள்ளம் பேசியது: வளமிக்க செம்மண்ணின் றோசாச்செடி போல கிசுகிசு என்று வளர்ந்துள்ளாள். துள்ளுகின்ற இளமையின் வதனகோலத்தில் பரபரப்பு பயம் எதுவும் பார்வைக்குத் தெரிய வில்லை. இரட்டைப் பின்னலை வருடியபடி பெட்டைக் கங்காரு போல கழுத்தை நீட்டி துருதுருவென்றுஎன்னைப் பார்க்கிறாள்.

உன்னுடையபெயர் என்னம்மா?"
முல்லை. முல்லை ராசா ராம்."
வயது?"
பன்னிரண்டு."
'உனக்கு ஒரு இயக்கப் பெயர் தரப் போகிறேன். இந்தச் சுருள்களில் ஒன்றை எடு. அதுவே உன் பெயராக அமையும்." வாயகன்ற ஹொர்லிக்ஸ் கண்ணாடிப் போத்தலுள் இருநூறு வரையிலான வெள்ளைச் சுருள்கள்.
மேடம். என்னுடைய பெயரையே வைத்துக் கொள்ளக் கூடாதா? எனக்குப் பிடித்தமான நல்ல தூய தமிழ்ப் பெயர்."
அடேல் அன்ரி திகைத்துப் போனார். இதுவரை அப்படியாக யாரும் எதிர்க் கேள்வி கேட்டதில்லை. மேலை நாட்டுத் தொடர்பு ஏதன் இருக்குமோ என்ற எண்ணினார். தெரிந்து கொள்ள,
'எங்கள்வழமைஇல்லை" என்றார்.
'வழமை இல்லாவிட்டால், புதிதாக அப்படி ஒரு வழமையை வைத்துக் கொள்ளக்கூடாதா மேடம்.?"
அடேல் அன்ரி தலையை நிமிர்த்திக் கூர்ந்து பார்த்தார். வழமையான தமிழ் பெண்களிலும் வித்தியாசமான கதை பேசும் குட்டிப் பெட்டைப் புலி. பன்னிரண்டு வயதுக்கு வளர்ச்சி அதிகம். செக்கச்செவேல் என்று இருக்கிறாள். பெரிய இடத்து பிள்ளையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
'உன்னுடைய ஊர் எது?" ஆங்கிலத்தில் சும்மா கேட்டு வைத்தார்.
ஆயிலடி."
'அது எங்கே இருக்கிறது? யாழ்பாணத்திலா?" மீண்டும் ஆங்கிலத்தில் கேட்டார்.
'இல்லை. வன்னியில். என்றும் பச்சையான பெரிய வனத்தின் மத்தியில்." முல்லை தமிழில் பதில் சொன்னாள்.
ஆங்கிலம் கெஞ்சம் விளங்குகிறது என்று அடேல் அன்ரி மனதுள் சொல்லிக் கொண்டார். முல்லையின் ஆசையை நிராசையாக்க விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சொந்தப் பெயரே இயக்கப் பெயராகவும் அமைந்தமை அது முதற்தடவைஅல்ல.

அடேல் அன்ரி முல்லையைத் தன் அருகே அழைத்து கறுப்பு நூலில் தொங்கிய சைனைற் குப்பியை கழுத்தில் கட்டியபடி 'சோதியா அணிக்குப் போகிறாய்" என்றார். முல்லையின் வதனத்தில் மின்னலாக ஆனந்த ரேகைள் தோன்றிப் பளிச்சிட்டன. முல்லை உள்ளூர எனது அணிக்கு வரவிரும்பவில்லை. அதற்கு ஒரு வலுவான காரணம் இருந்தது.

முல்லை இயக்கத்தில் சேர்ந்து மூன்றாவது ஆண்டு. சோதியா அக்காவிடமிருந்து வாக்கி டோக்கியில் எனக்கு விசாரணை வந்தது. 'சிவகாமி. உன்னுடைய தங்கை முல்லை ஒரே கரைச்சலாக இருக்குது?"
'சாப்பாடு சரியில்லை என்று தகராறு பண்ணுகிறாளா?"
இல்லை. கரும்புலியில் சேரவேண்டுமாம்."
ஆம். என்னிடமும் அண்மையில் பேசியவள். சோதியா அக்கா.அவளுடையவிருப்பத்துக்கு விடுங்கோ."

கரும்புலியில் சேரவிரும்புபவர்கள் முதலில் அண்ணைக்குக் கடிதம் எழுத வேண்டும். அண்ணை கூப்பிடுவார். எப்ப கூப்பிடுவார் என்று யாருக்குமே தெரியாது.

தங்கச்சி முல்லை அண்ணைக்குக் கடிதம் எழுதிவிட்டு தவம் இருக்கிறாள்.அண்ணைகூப்பிடவேண்டும் என்று. தங்கச்சி இயக்கத்துக்கு வரும் பொழுதே திட்டத்தோடுதான் புறுப்பட்டவள். அப்பா, அம்மாவைச் சித்திரவதை செய்த சிங்களவனை பழிவாங்கவே இயக்கத்தில் இணைந்தவள். இன்னும் இலக்கியா மரணமும் ஒரு காரணம். இலக்கியாவும் தானும் சேர்ந்து கரடியன்குளத்துக் காட்டில் வைத்து எடுத்த புகைப் படத்தை முல்லை தன்னோடு வைத்திருக்கிறாள்.

தங்கச்சி முல்லை மேற்கொள்ளவிருக்கும் தற்கொலைப்-பழிவாங்குதற் கலாசாரம், ஈழத் தமிழர்கள் மத்தியில் புதிதாக இன்று நேற்றுத் தோற்றம் பெற்ற ஒன்று அல்ல. மூல வேர் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் காலத்தைத் தொட்டு நிற்கின்றது.

பழிக்குப்பழி தீர்த்து உலக வரலாற்றில் தன் நாமத்தை பதிவு செய்த முதலாவது ஆரணங்கின் பெயர் கண்ணகி. கோவலன் மனைவி. கணவன்மீது கள்வன் குற்றம் ஏற்றிக் கொன்ற பாண்டியமன்னன் அரண்மனைக்குப் போகிறாள். தனது கணவன் கோவலனை மன்னன் சிரச்சேதம் செய்தது தவறு என்று நியாயவாதம் செய்கிறாள். 'பாண்டிமாதேவி சிலம்பு முத்துடைத்து" என மன்னன் பகர,
'என் சிலம்பு மணி உடைத்து" என்று கையில் ஏந்தி நின்ற காற்சிலம்பை தரையில் வீசி எறிந்து உடைத்துப் பரவும் மணிக்கற்களைக் காட்டி 'நீ கொடுங்கோலன். நெறி முறை பிழைத்த கொடுங்கோலன். மணிமகுடம் உன்னதோ, வளநாடும் நாடும் உன்னதோ?" என்று அவலக் குரல் எழுப்புகிறாள்.
'பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்" என்று கூறி பாண்டிய மன்னன் மரணத்தைத் தழுவுகிறான்.

மன்னன் நெடுஞ்செழியன் இறந்தும் கண்ணகியின் கோபந் தணியவில்லை. சீறி எழுந்து இடது முலையை திருகிப் பிடுங்கி எடுத்துவீசி எறிந்து மதுரையை எரிக்கிறாள்.

பிழை செய்தவன் மன்னன். மன்னனே மரணித்து விட்டான். மக்களை ஏன் தண்டிக்கிறாள்? 'கணவனையிழந்து கதிகலங்கிக்கதறும் அநாதை எனக்கு ஆதரவு தர இங்கு - மதுரையிலே பெண்கள் உண்டா? கணவர் பிழை பொறுக்கும் பெண்கள் உண்டா? கணவர்கள் உண்டா? நல்ல கணவர்கள் உண்டா?  சான்றோர்கள் உண்டா? தெய்வம் உண்டா?" என்று தெருத்தெருவாய் அழுது புலம்பி முறையிட்டபோது யாரும் வாய் திறக்க வில்லை. மன்னன் பிழை தெரிந்தும் மௌனிகளாய் வாளாவிருந்த மக்களையும் பழி வாங்குகிறாள்.மதுரையை எரிக்கிறாள்.

என்னருமைத் தங்கச்சி முல்லையும் கண்ணகி புரிந்த பழிவாங்கல் படல வழியில் தானும் பழிவாங்கலை விரைவில் அரங்கேற்றப் போகிறாள். அம்மா, அப்பாவை சித்திரவதை செய்ததற்கு பழிவாங்கப் போகிறாள். விவேகி, திறமைசாலி. எல்லோரும் மெய்சிலிர்த்து மெச்சி நிற்க ஈழத்துக் கண்ணகி களமாடுவாள்.

தங்கச்சி முல்லையின் பழிவாங்கும் நவீன தாக்குதல் கலாசாரம் மேற்கு நாடுகளில் கிடையவே கிடையாது. தமிழர் களுக்கு அப்பால் முஸ்லிம்களிடம் மட்டுமே காணப்படுகின்றது. அவர்கள் இஸ்லாம் சமயம் சார்ந்து முன்னெடுக்கிறார்கள். மோட்சம் கிடைக்கும் என்று போராளிக்குப் போதித்து, மதவெறியர்களாக்கி முன்னெடுக்கிறார்கள். ஹெஸ்பொல்லா, ஹமாஸ், பாலஸ்தீன ஸ்லாமிய ஜிஹாத் முஸ்லிம் அமைப்புகளின் பழிவாங்கல் மோட்சம் பெறுவதற்கானது. ஜிஹாத்---புனித யுத்தம் என்று சொல்லியே பழிவாங்குதற் தாக்குதலைச் செய்கின்றனர்.

தங்கச்சி முல்லையின் நோக்கம் முற்றிலும் வேறானது.

பூவுலக ஆசை, மோட்ச ஆசை எல்லாவற்றையும் கடந்து நின்று, ஈழத் தமிழ் இனத்தின் சபீட்சத்திற்காக, பழிவாங்கத் தன்னைப் பலிபீடத்தில் ஏற்றப்போகின்றாள்.

கதை கூறிக்கொண்டிருந்த என்னை கேற்றடியில் வந்து நின்ற ஜீப் கவர்ந்தது.

ஜீப்பிலிருந்து இறங்கிய கேணல் ரணவீர எனது வீட்டை நோக்கி நிமிர்ந்த நடையில் வந்துகொண்டிருந்தான்.
நான் போடடிக்கோவிற்குப் போனேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்என்று கூறி றோசாப்புக் கொத்தொன்றை தந்துவிட்டு அந்த நச்சுப்புடையன் சுணங்காது திரும்பிப் போனான்.

கதைகேட்கும் பிள்ளைகள்என்னைஏறவிறங்கப் பார்த்தனர்.

~~~ தொடரும்... ~~~

No comments:

Post a Comment