Friday 30 January 2015

தெருவிளக்கும் குப்பிவிளக்கும்



வெளியே குளிருடன் கடுங்காற்றும் வீசிக்கொண்டிருந்தது. வீட்டிற்குப் பின்புறமாக மரக்கறித்தோட்டத்தில் நின்று கொண்டிருந்த மாலினி குளிருக்கும் காற்றுக்கும் ஈடு குடுக்க முடியாமல் வீட்டிற்குள் நுழைந்தாள். வீடு ஒரே வெளிச்ச மயமாகக் காட்சி தந்தது.

"இந்தப் பிள்ளை சொல்வழி கேளாது. எல்லா 'லைற்'றையும் எரியவிட்டு வீட்டைத் திருவிழாவாக்கி வைச்சிருக்கு. ரிஷி எங்கே நிக்கிறாய்?"

ஹோலிற்குள் ரெலிவிஷனில் மூழ்கி இருந்த பாஸ்கரன், மாலினியின் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். பாஸ்கரனிற்குப் பின்புறமாகப் பதுங்கி இருந்தான் ரிஷி.

"ரிஷி இஞ்சை வா. உனக்கு ஆபிரகாம் லிங்கனைத் தெரியுமா?"

Monday 26 January 2015

"கள்ளனும் பொலிசும்"

மனம் ஏதோ சிந்தனையில் லயித்திருக்க, கார் தன்பாட்டில் போய்க் கொண்டிருந்தது. வடக்கு மெல்பேர்ணில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.

இரவு இரண்டு மணி. தெரு வெறிச்சோடிப் போய் இருந்தது. நன்றாகக் குடித்துவிட்டிருந்த ஒருவன் வீதியின் நடுவே நின்று தள்ளாடிக் கொண்டிருந்தான். கதவுகளை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டேன். வேகத்தைக் குறைத்து ஓரமாகக் காரைச் செலுத்தும் போதுதான், எனக்குப் பின்னாலே ஒரு சிகப்புக்கார் வருவதைக் கண்டு கொண்டேன்.

வன்னி - நாவல் - கதிர் பாலசுந்தரம்








அதிகாரம் 14 - அயோக்கியன்

அப்பாவையும் அம்மாவையும், மற்றும் மூன்று குடும்பங்களையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.அச்சட்டம் நீதிமன்ற பாரம்பரிய சட்டங்களை எல்லாம் விழுங்கி வைத்துக்கொண்டு சர்வாதிகார கொடுங்கோலாட்சி புரிந்தது.

தமிழ் இளைஞர்கள் இயக்கங்கள் உருவாக்கி, சுதந்திர தமிழ் ஈழம் எழுச்சிகாண ஆயுதம் ஏந்தினர். அவர்களை ஒழித்துக் கட்ட 1979ஆம் ஆண்டு தற்காலிகமாக அச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. மூன்றாண்டுகளின்; பின்னர் நிரந்தரமாகி தொடர்ந்து கொடுமைகள் புரிந்தது.

அப்பாவையும் அம்மாவையும் கொழும்புக்குக் கொண்டு சென்றனர். சட்டத்தரணிகளை வைத்து அவர்களை வெளியே பிணையில் எடுக்கவோ, அடிப்படை உரிமைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்துக்கு அழைக்கவோ பயங்கரவாத சட்டம் தடையாக அமைந்தது.

Sunday 25 January 2015

கங்காருப் பாய்ச்சல்கள் (-11)



'அவுஸ்திரேலியா நாள்'

வெள்ளையர்கள் (First Fleet) முதன் முதலில் அவுஸ்திரேலியாவிற்கு அடியெடுத்து வைத்த தினத்தை 'அவுஸ்திரேலியா நாள்' என்று கொண்டாடுகின்றார்கள்.

1972 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தினத்தன்று (தை 27), சிட்னியில் இருந்து கன்பராவிற்கு வந்த ஆதிக்குடிகள் நான்குபேர் கன்பராவில் உள்ள பாராளுமன்றத்திற்கு (தற்போதைய பழைய பாராளுமன்றம்) முன்னால் உள்ள Ngunnawal என்ற நிலத்தில் ஒரு கூடாரம் (tent) அமைத்து தமது கொடியைப் பறக்கவிட்டார்கள். 'அவுஸ்திரேலியா அரசு தங்களை ஒரு வெளிநாட்டுப்பிரஜைகள் போல நடத்துவதால், வெளிநாட்டு மக்களுக்கு இருக்கும் Embassy போல தங்களுக்கும் ஒன்று தேவை' என அறிவித்து அந்தக்கூடாரத்தை ஆதிக்குடிகளின் Embassy என அறிவித்தார்கள்.

Monday 19 January 2015

வன்னி - நாவல் - கதிர் பாலசுந்தரம்

அதிகாரம் 13 - நாய் வேட்டை

வவுனியா நகர பொலிசுக்கு எவரோ ஜீப் எரிந்த செய்தியை சொல்லியிருக்க வேணும். ஜீப் எரித்தது ஞாயிற்றுகிழமை. திங்கள் இரவுதான் அவர்களுக்குப் புதினம் எட்டியிருக்க வேணும். அதுவும் ஜீப் என்று சொல்லாமல் வாகனம் என்று சொல்லியிருக்கலாம்.

செவ்வாய் நண்பகல் பொலிஸ் ஜீப் ஒன்று எரிந்த களத்தைஅடைந்தது. ஒரு சாஜன். ஒரு கொன்ஸரபிள். சாரதி. சும்மா பார்த்துப்போக வந்தார்கள். ஏதோ ஒரு இயக்கத்துக்கு வாகனம் கொடுக்க மறுத்ததால் கடத்தி வந்து எரித்திருக்கிறார்கள் என்று எண்ணி அவசரப்படாமல் வந்திருந்தனர்.

பொலிசார் எரிந்த வாகனத்தைச் சுற்றிச் சுற்றி வந்தனர். திடீரென கொன்ஸ்ரபிள் சொன்னான் 'இன்ஸ்பெக்டர் மாத்தையா, பொலிஸ் ஜீப் மாதிரி இருக்குது." சமரவீர திடுக்கிட்டு சட்டைப்பையிலிருந்து எடுத்த கண்ணாடியை மூக்குமேல் மாட்டிவிட்டு உற்று உற்றுப் பார்த்தார். 'ஓம் பொலிஸ்ஜீப்தான்" என்றார்.

Monday 12 January 2015

’ஸ்மாட் போன்’ கதை.


வேகமாக வளரும் தொழில் நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நானும் எனது கைத்தொலைபேசியை மாற்றுவதென முடிவு செய்து கொண்டேன்.

 I – Phone  ஒன்றை வாங்குவதற்காக வியட்நாமியக் கடையொன்றிற்குப் போயிருந்தேன்.

“அப்பா.... காலத்துடன் நாங்கள் பயணம் செய்யவேண்டும்!
கார் இடையிலை நிண்டா... காட் அற்றாக் வந்தா என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் மகன் பெரியதொரு பட்டியலிட்டு என்னைப் பயப்படுத்தியிருந்தான். அதற்கு முன்னர் என்னிடம் கைத்தொலைபேசி இருக்கவில்லை. அவனது அட்வைஸ்சிற்கு கட்டுப்பட்டு மிகக்குறைந்த விலையில் ஒரு கைத்தொலைபேசி ஒன்றை வாங்கியிருந்தேன். இப்போது அதை மாற்றுவதற்குரிய காலம் வந்துவிட்டது.

மனைவி பிள்ளைகளுடன் போனால் பெரியதொரு பிளானிற்குள் என்னைத் தள்ளிவிடக்கூடும் என நினைத்து தனியே கடைக்கு வெளிக்கிட்டிருந்தேன்.

கங்காருப் பாய்ச்சல்கள் (-10)

அவுஸ்திரேலியப் பழங்குடிகள் (Indigenous Australians)

அவுஸ்திரேலியப்பழங்குடிகள் (Aborigines) ஏறக்குறைய 42,000 ஆண்டுகளாக வாழ்கின்றார்கள். இவர்கள் ஆரம்பத்தில் தென்கிழக்கு ஆசியத்தீவுகளில் இருந்து வந்ததாக நம்பப்படுகின்றது. 500 வகையான பழங்குடிகள் தமக்கேயுரித்தான சொந்தமொழிகளுடன் வாழ்ந்தார்கள்.

ஏறக்குறைய 3.5 இலட்சம் வரையில் இருந்த அம்மக்கள் தொகை கப்டன் ஜேம்ஸ் குக்கின் (1770) வருகைக்குப் பின்னர் குறையலாயிற்று. பிரித்தானியா இந்தநாட்டையும் தனது ஆதிக்கத்திற்குள் கொண்டுவந்தது. 1788 இல் பிரித்தானியாவின் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கொள்ளைக்காரர்கள், கொலையாளிகள் போன்ற கைதிகளை இங்கே குடியேற்றினர். அவர்களைக் கண்காணிப்பதற்கென போர்வீரர்களையும் அனுப்பி வைத்தார்கள். நதிக்கரையோரமாக வாழ்ந்துவந்த பழங்குடியினரை இவர்கள் தமது துப்பாக்கிமுனையில் வெளியேற்றினார்கள்.   கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தனர். போதாக்குறைக்கு அவர்களுடன் கூடவந்த தொற்றுநோய்கள் (அம்மை, சின்னம்மை) மற்றும் மீள்குடியேற்றம், பண்பாட்டுச்சீரமைப்பு போன்றவற்றாலும் நிறையப்பேர் இறந்தனர். மதுப்பழக்கத்தையும் அவர்கள்தான் பழங்குடி மக்களுக்கு அறிமுகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

கங்காருப் பாய்ச்சல்கள் (-9)

நான் கவிஞன்

புதிதாக வேலைக்கு வந்த ஒருவர் என்னைச் சந்தித்தார். முதற் சந்திப்பிலேயே அவர் தன்னைக் கவிஞன் என்றார்.

"அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கு முன்னர் இலங்கையில் எங்கே வேலை செய்தீர்கள்?" என்ற எனது கேள்விக்கு "சூரியன் FM இல் ஒரு அறிவிப்பாளனாக வேலை செய்தேன்" என்றார்.

"நீங்கள் மஹாகவி உருத்திரமூர்த்தி, நீலாவணன் முருகையன் போன்றவர்களின் கவிதைகளைப் படித்திருக்கின்றீர்களா?"

அவர் முகம் சுருங்கியது.

வன்னி / அதிகாரம் 12 / கதிர் பாலசுந்தரம்


நான் அல்லது நீ

'அம்மா. இவ திவ்யா. முந்தியும் சொன்னனான். கனகராயன்குள தில்லையரின் மகள். என்னுடன் விடுதியில் தங்கிப்படிக்கிறா. ஒரே வகுப்பு. ஸ்கொலர்தான்."
அம்மா மற்றப் பெண்ணை ஆழமாய்ப் பார்த்தார். உள்மனம் பேசியது: முழுப்பாவாடை சட்டை போட்டிருக்குது. ஏன் தலைமயிரை வெட்டிப் பொப்பாக்கியிருக்குது? வயசு இருபத்தி நாலுக்கு மேலிருக்கும். நல்ல உயரம். பெரிய இடத்துப் பெண்போல. ஆனைக் குட்டி போல நல்லா விளைந்திருக்குது. குத்துச் சண்டை செய்கிற பிள்ளை போல.

'சிவகாமி, பெரிய பெண்ணின் பெயர்?"

எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. திவ்யா எனது நிலைமையைப் புரிந்துகொண்டு பதில் சொன்னார்.
'பெயர் மல்லிகா. ஊர் மீசாலை." ஏலவே மாதவி அக்கா தனது பெயரை மல்லிகா என்று அறிமுகப்படுத்தும்படி சொல்லி  வைத்திருந்தாள்.
அம்மாவுக்கு மல்லிகா பாடசாலையில் படிக்கும் பெண் போல் தெரியவில்லை. உறுதிப்படுத்த வினாவினார். 'மல்லிகாவும் வேம்படிப் பாடசாலையில் படிக்கிறாவோ?"

Monday 5 January 2015

வன்னி / அதிகாரம் 11 / கதிர் பாலசுந்தரம்


விளங்குதோ பிள்ளை?
தார்ப்பாய்க் கூடார வாசலில் நின்றேன். கமக் கட்டுள் தாங்குதடிகள்.

பாலை மரத்தின் கீழ் நீல ஜீப். பிள்ளைகள் கதை கேட்கிற நேரத்தில் காவல் பண்ணத் தொடங்கியிருக்கிறான். பிள்ளைகளுக்குப் புலிப்பாடம் நடத்துகிறேன் என்று சந்தேகிக்கிறான் போலும்.

'அன்ரி, வாசலில் நீல ஜீப்காரன். உங்களை நோட்டம் பார்க்கிற ஆமிக்காரன்." தங்கன் வாசலை நோக்கி நடந்து வந்தபடி கூறினான். ஏனைய பிள்ளைகளும் அவன் பின்னே வந்து கொண்டிருந்தனர்.
'உங்களுக்கே சிங்கள அரசின் சின்னத்தனம் புரிகிறது. கவனம். ஏன் அங்கே போகிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?"

Thursday 1 January 2015

யேர்மனியின் தமிழ்மகன் - மு.க.சு.சிவகுமாரன்

 

திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும் –

என்பதற்கமைய ஈழத்தமிழர் ஒருவரைப்பற்றி, அவரின் கலைத்திறமைக்காக எண்பது தொண்ணூறுகளில் யேர்மன் பத்திரிகைகள் அதிகம் எழுதின என்றால் அவர் மு.க.சு.சிவகுமாரனாகத்தான் இருக்கும். யேர்மன் பத்திரிகைகள் இவரைப் பாராட்டி எழுதிய இரண்டு சந்தர்ப்பங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை..

போட்டிகளும் பரிசுகளும் - Flashback


 

2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கந்தர்வன் நினைவாக ஒரு சிறுகதைப்போட்டி வைத்தது. அதில் எனது சிறுகதை ‘எதிர்கொள்ளல்மூன்றாவது இட்த்தைப் பெற்றது. புதுச்சேரியில் நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜெயகாந்தன் அவர்கள் பரிசு வழங்கியிருந்தார்கள்.