Monday 15 December 2014

வன்னி - (அதிகாரம் 8) - கதிர் பாலசுந்தரம்

பட்ட காலிலே படும்
காலையில் பாடசாலைத் திறப்பு விழா. பிரதம விருந்தினர் கேணல் ரணவீர, மனையாளுடன் வந்தவர். சிவில் உடை. நீல கோட் சூட். மனைவி அநுலா கண்டியன் பாணியில் அரையைச் சுற்றி அகன்ற கொய்யகம் வைத்த நீலச் சேலை. கழுத்து முன்பக்கம் பின்பக்கம் இரண்டும் ஓவென்று ஆழவெட்டிய வெள்ளைச் சட்டை. சிங்கள மங்கையர்களுக்கு அப்படிச் சட்டை போட்டுக் காட்டுவதிலே அலாதி பிரியம். நோநாலேசான கறுப்பு. மெல்லிய மஞ்சள் சின்னப் பற்கள்.பென்னாம் பெரிய கொண்டை. அந்த வட்ட முகத்திலே ஏதோ அள்ளிப்பூசி யிருந்தது. யோசித்துப் பார்த்தேன். ஒன்றும் விளங்கயில்லை.

நச்சுப் புடையன் கேணல் ரணவீரவின் மெய்ப்பாதுகாப்பு ராணுவத்தினர். சீருடையில். இருபது பேர் வரையிருக்கும். சற்று எட்ட நின்றார்கள்.

வாசலில் வைத்து மாலை போட்டு அதிபர் செல்லத்துரை வரவேற்றவர். அவருடைய மனைவியும் யாழ்பாணத்திலிருந்து வந்திருந்தார். குங்கும வண்ண கூறைச் சேலை போன்ற காஞ்சிபுரம் பட்டுச் சேலை. தோளில் சிவப்பு பை. பூசணிக்காய் மாதிரி. அரக்கி அரக்கி நடந்தார். செல்லத்துரை ஐயா புதிய கோட் சூட். மூக்கில் தொங்கும் வட்டக் கண்ணாடிக்குள்ளால் கண்மடல்களை விரித்து எல்லோரையும் சுற்றிச்சுற்றிப் பார்த்தார்.

பாடசாலை அலுவலக வாசலில் இரண்டு இரும்புப் பைப் கொடிக்கம்பங்கள். உயரமான கொடிக்கம்பத்து சிங்கக் கொடியை கேணல் ரணவீர ஏற்றினார். பட்டுக் கொடி படபடவெனப் பறந்தது. சிங்கம் வாளுடன் கம்பீரமாகத் தெரிந்தது. மற்றக் கம்பத்தில் பாடசாலைக் கொடியை செல்லத்துரை ஐயா ஏற்றினார். நீலவண்ணம்.

முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னர் வடபுலத்தில், தமிழன் பாரம்பரிய பூமியில் எவரும் சிங்க தேசிய கொடி பார்க்க வாய்ப்பிருக்கவில்லை. சிங்கள தேசிய கீதம் காதுகளில் விழுந்ததில்லை. பாடசாலை களிலும், அரச அலுவலங்களிலும் அரசு வழங்கிய சிங்கக்கொடி---பட்டுக் கொடி---களஞ்சியத்தில் கசங்காமல் இருந்தது. எவரும் ஏற்றுவதில்லை. ஏற்றினால் அவரைத் தேடி எமன் எருமைக் கடாவில் பயணித்திருப்பான்.

விழா மண்டபம் நிறைந்த சனம். இடம் போதாமல் பலர் நின்றார்கள். நான் சபையில் பின் வரிசைக்கு முதல் வரிசையில் அமர்திருந்தேன். இடது பக்கத்திலே சோதி மாமி. அவ மூஞ்சியை உம் என்று வைத்துக் கொண்டிருந்தார். வலது பக்கத்திலே தேவிதம்பன். தலையை திருப்பிச் சிரித்தேன். மூக்கை நெழித்து தலையை வெட்டி மூஞ்சியை மற்றப் பக்கம் திருப்பினாள். தேவி தம்பன் ஏன் குரங்கு மாதிரி மூஞ்சியைத் திருப்புறாள்? சோதி மாமிக்கு காரணமிருக்குது. மகள் சுலோசனாவை அமைப்புக்கு சாய்த்துப் போனனான். வீரமரணம் எய்தினவள். தேவி தம்பன்? பொறாமைப் பிண்டம்.

இரண்டடி உயர மேடையிலிருந்த திருமதி ரணவீர கையில் பூச்செண்டு வைத்திருந்தார். அவர் தலையைத் திருப்பித் திருப்பி அங்கும் இங்கும் பார்த்துப் பார்த்து வெருண்டார். புதிய அனுபவம் போல.
போர்க்களத்தில் தமிழரைக் கொன்று குவித்த, அழகிய மங்கையர்களை அழவைத்த நச்சுப் புடையன் பிரதம விருந்தினர்.

ரணவீர பொல்லாதவன். மகா பொல்லாதவன். மனிதகுல விரோதி. தர்ம விரோதி. தாய்க்குல விரோதி. நாய்க்குச் செருப்பாலே அடிக்க வேணும்.

கேணல் ரணவீர தனது உரையை சிங்களத் தமிழில் நிகழ்த்தினார்.

'சிங்கள ஜாதி, தெமில சகோதரம் மாதிரி. சிங்கள ஜனங்கள் தெமில ஜாதியை நேசிக்கிறான். மிச்சம் நேசிக்கிறான். நாங்க உங்க பகுதியில் உங்ககூட வாழ விரும்புறான். முன்பு இங்கு புத்த மதம் இருந்தது. அது மீண்டும் வரணும். புத்த மதம் பஞ்சசீலக் கொள்கை உடைய நல்ல மதம். பாவம் பழிக்கு அஞ்சுற சமயம். ஆமா. யுத்தம்.அது வேற கதை. சிங்கள மக்கள் தமிழ் சகோதரம் நேசிக்கிறான். மிச்சம் நேசிக்கிறான் ....."
கதை கேட்கும் பிள்ளைகள் பாயில் சம்மாண மிட்டு இருந்தனர்.

'திறப்பு விழா சிறப்பாக நடந்தது. சிந்துசாவின் நடனத்தை நன்கு ரசித்தேன். யார் பழக்கியது?"
'டான்ஸ் ரீச்சர் ராகினி."
'யார் மேக் அப் செய்தது?"
'டான்ஸ் ரீச்சர்தான்."
'கோமதி. நல்லாய்ப் பாடினீர்.இனிமையானகுரல்.".
பிள்ளைகளே, இன்றைக்குத் தம்பிஅண்ணையோகனின் கதை சொல்லப் போகிறேன்.
கறுப்பு யூலை இனக் கலவரத்தை அடுத்து ஆயுத இயக்கங்கள் போட்டி போட்டுக்கொண்டு பெடியளை சேர்க்கத் தொடங்கின.வேலை வெட்டி இல்லாமல் வீதி அளந்தவர்கள் மளமள என்று அமைப்புகளில் சேர்ந்தனர். எல்லோரும் இனப்பற்றில் சேர்ந்தவர்கள் அல்ல. அரசியலில் ஆர்வங் காட்டியவர்கள் அல்ல. சிலர் எதுவுமில்லாத தமக்கு அந்தஸ்து தேடச் சேர்ந்தனர். அதே சமயம் கல்வியில் முதன்மை வகித்த மிகச் சிறு பகுதியினரும்----பல்கலைக்கழகங்களில் படித்துக் கொண்டிருந்த ஒரு சிலர் உட்பட---சேர்ந்தனர். உடனடியாக அவர்கள் எல்லோரும் பயிற்சிக்காக இந்தியாவுக்கு வத்தைகள் மூலம் அனுப்பப்பட்டனர்.

பெடியளை சேர்ப்பதற்காக இயக்கங்கள் பாடசாலைகள் கல்லூரிகளை முதன்மையாகத் தெரிவு செய்தன. பாடசாலை நேரத்தில் அதிபர்களிடம் அனுமதி பெற்று கூட்டங்கள் நாடகங்கள் நடாத்தினர்.

அதிபர்கள் மறுக்காமல் அனுமதி வழங்கினர். சுதந்திரப்பற்றில் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. மறுத்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பயங்கர சூழ்நிலை. சென் ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராசாவின் கொலையை அடுத்து---யாழ் கோட்டைக்குள் இராணுவத்தோடு கிரிகட் விளையாட பாடசாலை குழுவை  அனுப்பியதற்காக, யாழ் நகரில் மோட்டார் சைக்கிலில் பிரயாணித்த வேளை இயக்கத்தால் சுட்டுக் கொல்லப்பட்டவர், 1985--- அதிபர்கள் பெடியளின் கோரிக்கைகளுக்குத் தலை ஆட்டிக்கொண்டு; இருந்தனர்.

மன்னார், மட்டக்களப்புப் பகுதிகளின் போராளிகளை---இராணுவ தேடுதலிலிருந்து பாதுகாக்க----போலி நாமத்தில் எந்த அடிப்படைத் தகுதியுமில்லாமல் ஏ.எல். வகுப்பில் மாணவர்களாக வைத்திருந்தனர். கீழ் மட்டத்திலிருந்த போராளிகள்கூட அதிபரை அச்சுறுத்தி மாணவர்களைச் சேர்க்க அனுமதி பெற்றனர்.
அதிபரை வெருட்டி அடக்கிவைக்க உதவி ஆசிரியர் ஒருவர் கிடாயறுத்து, இயக்க ஊர்ப் பொறுப்பாளருக்கு வீட்டில் விருந்து வைத்தார். மேலும், ஏனைய கீழ்மட்டங்களுக்குச் சோத்துப் பார்சல் அனுப்பினார். அதிபரை இரவிரவாக அழைத்துச் சென்று விசாரணை செய்து எச்சரித்ததும் உண்டு. ஊர்மட்ட இயக்கத் தலைவர்களுக்கு அஞ்சி சில அதிபர்கள் ஓய்வெடுத்தனர்.

ராச நாச்சியார் வம்சத்திலிருந்து முதலில் இயக்கத்தில் சேர்ந்தவர் தம்பி அண்ணன் யோகன். இவர் சித்தப்பா குடும்ப உறவுகளை சிங்களகாடைக் கும்பல் பலி எடுத்தமைக்குப் பழிவாங்க இயக்கத்தைத்தனதுவெஞ்சினத்தைத் தணிக்க உதவும் கருவியாகப்  பார்த்தார்.
யாழ் இந்துக் கல்லூரியில், ஓ.எல். வகுப்பில், முதன்மை மாணவனாகத் திகழ்ந்தவர். கிரிக்கட் குழுவிலும் சிறந்த பந்து வீச்சாளன். அறுபது விக்கட்டுகளை வீழ்த்திய புகழ் வேறு. தம்பி அண்ணன் யோகன், புளட் இயக்கம் யாழ் இந்துக் கல்லூரியில் நடாத்திய முதற் கூட்டத்தன்றே சேர்ந்து பாடசாலை நேரத்திலேயே, விடுதி மாணவன் சகோதரன் சங்கிலிக்குக் கூடச் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டார். வேறு இயக்கம் முதலாவதாக கூட்டம் நடாத்தி இருந்தாலும் அதில் சேர்ந் திருப்பார். அத்தனை ஆவேசம்.

விடுதிப் பொறுப்பாளர் செல்லையருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பதட்டத்தில் சுற்றிச் சுற்றி வந்தார். வழமையில்லாத முதலாவது பிரச்சினை. பெற்றாருக்குப் பதில் சொல்ல வேண்டும். கல்வித்திணைக்களத்துக்குப் பதில் சொல்ல வேண்டும். பொலிசுக்குப் பதில் சொல்ல வேண்டும். அதிபரோடு கலந்து ஆழமாக ஆலோசித்து விட்டு எதுவும் நடக்காதது போல அமைதியானார்.
ஆசை அண்ணன் சங்கிலி ஆயிலடிக்குப் போய் பெற்றாருக்கு விடயத்தைத் தெரிவிக்க அநுமதி கேட்டபொழுது, 'சங்கிலி, என்னைக் கேட்டது என்று எவருக்கும் சொல்லாதே. நீ போகலாம்" என்ற செல்லையரின் பதிலைக் கேட்ட ஆசை அண்ணன் அதிர்ச்சி அடைந்தார். செல்லையர் ஒரு கறார் பேர்வழி. எவரையும் வீடு செல்ல அனுமதிப்பதில்லை.

இயக்கங்கள் கவலைப் படாமல் பாரம்பரிய கல்லூரி நிர்வாகக் கட்டமைப்பிலும் கை வைத்தன. வேறும் தொலைக் காட்சிப்பெட்டிகள், வினாத்தாள் பதிக்கும் கெஸ்ரனர், தட்டச்சு எந்திரம், இரசாயனப் பொருட்கள்---அவற்றையும்இரவிரவாக காவிச் சென்றனர்.
ஆசை அண்ணன் சங்கிலி; கொழும்பு மெயில் புகையிரதவண்டியில் புளியங்குளம் வந்து சேர்ந்த பொழுது இரவு பத்து மணி. ஆயிலடிக்குப் போக்குவரத்து வசதி கிடையாது. புளியங்குளப் பாடசாலையில் படுத்துக் கிடந்து விடிய வர நல்ல வசதி உண்டு. தம்பி அண்ணன் சைகைகூடக் காட்டாமல் புளட் அமைப்பில் சேர்ந்தமை அவரை உலுக்கிக் கொண்டிருந்தது. அதை வீடடில் உள்ளவர்களுக்கு தெரிவிக்க, எவ்வளவு சீக்கிரமாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் சொல்ல துடித்தார். அம்மா கதறப் போறாரே என்று நடுங்கினார்.

நிலா வெளிச்சம் கொஞ்சம். ஐந்து மைல் தூரம். பெரும் காட்டுப் பாதை. யானைக் காடு. கரடி வேறு. பாம்பு பூச்சிக்குப் பஞ்சமில்லை. தம்பி அண்ணன் மின்னாமல் முழங்காமல் போன அதிர்ச்சியில் பயம் ஓடி மறைந்திருந்தது. இளைக்க இளைக்க ஓட்டமும் நடையுமாக வந்து சாமவேளை வாசலில் நின்றுஅழுதழுது குரல் கொடுத்த பொழுதுஅனைவரும்அஞ்சி நடுங்கினார்கள்.
அவசரமாய்க் கதவைத் திறந்தார் அப்பா. அங்கும் இங்கும் பார்த்தார். அம்மா தலையில கைவைத்து ஏங்கிப்போய் நின்றார்.

 'ஏன் இந்த நேரம்? யோகன் வரவில்லை?"; அப்பா.

யோகனுக்கு என்ன எதுவோ என்று சுக்குநூறாய் உடைந்து போனார்கள். சித்தப்பா குடும்பத்தின் மறைவின் பின்னர் எல்லோருக்கும் எதிலும் பயம் பதைபதைப்பு.
'ஏன் இந்த நேரம் யானைக் காட்டுக்குள்ளால்? யோகன் வரவில்லையா?"
'அப்பா, அவர் இந்தியாவுக்குப் போய்விட்டார்."
'ஏன்?"
'இயக்கத்தில் சேர்ந்துவிட்டார்."
'என்ன!"
'இயக்கத்துக்குப் போய்விட்டார்."

சிறிது நேரம் அப்பா எதுவுமே பேசவில்லை. கூரையைப் பார்த்துப் பக்கவாட்டில் தலையை மெதுவாக ஆட்டினார். நெற்றியைச் சுருக்கி கண்களை இறுக மூடித் திறந்து சங்கிலியைப் பார்த்தார். கண்கள் தம்பாட்டில்அழுதன.குரல் தளதளத்தது.

'என்ன சொல்லிப்போட்டுப் போனவன்?"
'என்னிடம் எதுவும் சொல்லவில்லை."
'அதிபர் குமரேசன் என்ன சொன்னவர்?"
'சந்திக்கவில்லை. வாடன் செல்லையர் பயந்து போயிருக்கிறார்."
'அவைஎனக்குப் பதில் சொல்ல வேணும்."
'அப்பா, காலம் நல்லா மாறிப் போச்சுது. அதிபரிடம் போய்ப் பேச வேண்டாம். உயிரைப் பொத்திக் கொண்டு இயக்கங்களுக்குப் பயந்து பாடசாலை நடத்துகிற காலம்."

அப்பாவால் இப்பொழுதெல்லாம் மனவுறுதியாய்க் கருமம் ஆற்ற முடிவதில்லை. ஆயிலடி, அயல் ஊர் எல்லாம் அவரிடம் ஆலோசனை கேட்கிறவை. ஊர் அலுவல்களுக்கு எல்லாம் அவர்தான் தலைமை. எப் பொழுதும் தூய வெள்ளை உடையில்---வேட்டி நாசனல்---கெம்பீரமான நிமிர்ந்த நடை, பார்வை. எல்லாம்பழங் கதையாகி இப்பொழுது, எப்பொழுதும் பயந்தஜீவியம்.

அம்மா தலையில் ஓங்கி அடித்து 'ஐயோ! ஐயோ!" என்று ஒப்பாரி வைத்தார். ஒப்பாரி ஊரையே அதட்டி எழுப்பிக் கொண்டு வந்தது. முல்லையும், பாவலனும் பதைபதைத்துக் கண் கலங்கி நின்றனர். சித்தப்பா குடும்பத்தின் மறைவின் பின்னர் அப்போதுதான் கொஞ்சம் அமைதியாக மூச்சுவிடத் தொடங்கி யிருந்தனர். அந்த அமைதி குலைந்து வீட்டைக் காரிருள் கெட்டி யாகக் கௌவியது. ராசபரம்பரை என்ற பெருமையுடன் ராசகம்பீரமாக வாழ்ந்த ராசநாச்சியார் வம்சம். கண்ணீர்க் கடலில் தத்தளித்தது. பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும். அது ராச நாச்சியார் குடும்பத்துக்கு இப்ப சாலப் பொருந்தியது.

தம்பி அண்ணன் யோகன் உத்தர பிரதேசத்தில் உள்ள பயிற்சி முகாம் போய்ச் சேர்ந்தார், பயிற்சி கொடுத்த றோவினர் என்ன என்ன பயிற்சி, எங்கே எங்கே கொடுப்பது என்று ஏலவே தீர்மானித்திருந்தனர். இவரது பயிற்சி முகாமுக்கு கொரில்லா பயிற்சி ஒதுக்கியிருந்தது.

அம்மா மகனை ஒருமுறை பார்க்கத் துடித்தார். தினமும் காலையில் தோய்ந்து, தோய்த்துக் காய்ந்தஆடை அணிந்து, பூ பழம் தேங்காய் கற்பூர தட்டத்துடன் முருகன் கோவிலுக்குப் போய் முறையிட்டுக் கொண்டிருந்தார்.
அது ராச நாச்சியார் வம்சத்துக்கு வந்திருக்கிற சின்ன ஆரம்பம், பெரியதுகள் தொடர்ந்து வரவிருக்கின்றன என்பது அப்போது எவருக்கும் தெரியவில்லை.
இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. அம்மாவைச் சமாதானப்படுத்த அப்பா இந்தியா போய் தம்பி அண்ணையையும் மற்றவர்களையும் பார்க்க விரும்பினார். புளட் இயக்கம் பற்றி விசாரித்தார். அவர் திகைத்துப் போனார்.

புளட் இயக்கத்துக்குப் பதினெட்டு பயிற்சி மையங்கள் இந்தியாவிலிருந்தன. தஞ்சாவூர் மேற்கில் பதினொன்று, புதுக்கோட்டையில் நான்கு, திருநெல்வேலி கிழக்கில் இரண்டு, தஞ்சாவூர் கிழக்கில் இரண்டு. மொத்தம் 2236 பேர் பயிற்சி பெற்றனர். அவர்களுள் 94 பேர் பெண்கள்.

அப்பாவின் மனதில் ஒரு கேள்வி. அதற்கு ஒரு விடை. ஈழத்தமிழ் இனம் ஒட்டுமொத்தமாக சுதந்திரத்துக்காக மாதியாகங்கள் செய்யத்தயாராகி உள்ளதைக் காண்கின்றார். வன்னி மண்ணையும் மக்களையும் கனவிலும் நினைவிலும் சுமக்கும் அப்பாவின் போக்கில்அதுபாரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.


ஆண்டுகள் ஐந்து கழிந்துவிட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாலைதீவை புளட் இயக்கப் படை தாக்கிய போதுதான்---1988---தம்பி அண்ணன் யோகன் பற்றிய செய்தி அப்பாவுக்கு அரைகுறையாகக் கிட்டியது,

*** தொடரும் ... ***

No comments:

Post a Comment