Sunday 7 December 2014

கங்காருப் பாய்ச்சல்கள் (-8)

வீணாகப் போகும் மருந்துகள்

ஒருமுறை எனது குடும்ப வைத்தியர் Prednisolone என்ற மருந்தை எழுதித் தந்துவிட்டு அதை எப்படிப்பாவிப்பது என்று ஒரு சூத்திரத்தையும் போட்டுத் தந்தார். முதல் 3 நாட்களும் ஒவ்வொருநாளும் 3 குளிசைகள் வீதமும், அடுத்த 2 நாட்களும் ஒவ்வொருநாளும் 2 குளிசைகள் வீதமும், அடுத்த 2 நாட்களும் ஒவ்வொருநாளும் 1 குளிசை வீதமும், அடுத்த 2 நாட்கள் ஒவ்வொருநாளும் பாதிக்குளிசை வீதமும் எடுக்க வேண்டும். அந்த மருத்தின் பக்கவிளைவுகள் பற்றியும் திகிலூட்டினார். எப்படித்தான் கூட்டினாலும் மொத்தம் 16 குளிசைகள்தான் எனக்குத் தேவைப்படும். பார்மஷியில் 60 குளிசைகள் கொண்ட மருந்துப்போத்தல்தான் இருந்தது. மிகுதியை என்ன செய்வது? வைத்திருந்து மீண்டும் தேவைப்படும்போது பாவியுங்கள் என்றார் அங்கிருந்த பாமஷிஸ்ற். போத்தலில் முடிவு திகதி (expiry date) ஒரு வருடம் என்றிருந்தது. பிறகு எனக்கு அது தேவப்படவில்லை. expiry date வரும் வரையும் வைத்திருந்துவிட்டு எறிந்துவிட்டேன். மருந்துகளின் விலை இப்போது எக்கச்சக்கம். என்ன செய்வது? தேவைப்படும் அளவுக்கு மருந்து வாங்கமுடியாததால் மருந்தும் காசும் வீண் விரயமாகின்றன.

எனது ஊரைச் சேர்ந்த ஒருவர் dentist ஆக வேலை பார்க்கின்றார். அவர் என்னை எங்கு கண்டாலும் தெரியாதமாதிரிப் போய்விடுவார். அதிகம் கதைக்கமாட்டார். அவரிடம் பல்லுப் பிடுங்கப் போனதும், முரசிற்குள் விறைப்பிற்கான ஊசியைப் போட்டவுடன் கதைக்க ஆரம்பித்துவிடுவார். பிறகு புகையிரதம் போவது மாதிரி 'கடக்கடா புடக்கடா' என்று நிறுத்தவே மாட்டார். நாங்கள் வாயே திறக்கமாட்டோம் என்ற தைரியம் அவருக்கு. அவர் சொல்லும் எல்லாவற்றையுமே கேட்கவேண்டியதுதான். "நீர் என்ன சிவில் இஞ்சினியரோ? ஒரு வீடு அல்லது பாலம் கட்டும்போது அத்திவாரம் எவ்வளவு ஸ்றோங்காக இருக்கவேணுமோ அப்பிடித்தான் பல்லும். பல்லுப் போனா சொல்லுச் போச்சு எண்டு பழமொழி இருக்கல்லோ! பல்லை அடிக்கடி கிளீன் பண்ணவேணும். எத்தினை வருஷ்ம் கிளீன் பண்ணி. பாளம் பாளமா வருது?" கன்னங்கரிய நிறத்திலிருக்கும் அவர் தனது வாயைத் திறந்து ஈ என்று காட்டுவார். மின்னல் ஒண்டு அடிச்சாப்போல அறை பிரகாசிக்கும். எல்லாவற்றையும் ம் ம் என்று கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். விறைப்பு நீங்கும்போது அவரும் தனது கதையை நிறுத்தியிருப்பார்.

இப்போது அவரின் ஞாபகம் வரக்காரணம், நேற்று என்னுடைய நண்பர் ஒருவர் அவரிடம் போயிருந்தார். அவரும் யான் பெற்ற அனுபவத்தைப் பெற்றிருப்பார். பல்லைப்பிடுங்கியபின் அதன் வலி போக மருந்து ஒன்றை எழுதிக் குடுத்திருந்தார். மருந்தை மூன்றுவேளை பாவித்தால் போதும் என்று கூறியிருந்தார். நண்பர் பார்மஷிக்கு முன்னால் நின்றபடி, எதிரே தெரியும் liquor shopஐ வெறித்துப் பார்த்தபடி தீவிர யோசனையின் நின்றார். என்ன விஷயம் என்றேன். "பல்லுப் பிடுங்கியிருக்கின்றேன். டென்ரிஸ்ற் 3 ரப்பிளற்ஸ் (tablets) போட்டால் போதும் என்றார். பார்மஷியில் 3 ரப்பிளற்ஸ் கேட்டா ஒரு பெட்டியை எடுத்து நீட்டுறான். பெட்டியிலை 30 இருக்கு. விலையும் 45$. மிச்சத்தை நான் என்ன செய்வது? அதுதான் இந்த மருந்தைப்பற்றி கொஞ்சம் யோசிக்கிறன்" என்று எதிரே தெரியும் liquor shopஐக் காட்டினான். சொல்லிவிட்டு எனது பதிலுக்குக் காத்திராமல் liquor shopஐ நோக்கி நடந்தான். நடப்பதை ஓரமாக நின்று அவதானித்தேன். சற்று நேரத்தில் ஒரு போத்தலுடன் கடைக்குள்ளிருந்து வெளியே வந்தான். கடைக்கு முன்னாலேயே நின்று அதை உடைத்தான். அண்ணாந்து போத்தலுடன் வாயிற்குள் சரித்தான். பிறகு அதன் மூலமே வாயைக் கொப்பளித்தான். இன்று அவனைச் சந்தித்தபோது, "அது மச்சான் ஒரு 25 டொலரோடை எல்லாக் கொதி வலியும் போச்சுது" என்றான்.


No comments:

Post a Comment