Friday 10 October 2014

பேசும் தமிழ்

நேரம் பிந்திவிட்டது. நிகழ்ச்சி - தமிழ் விழா. ஆரம்பிக்கும் நேரம் ஆறு மணி. இப்போது நேரம் - ஆறு ஐந்து. மனைவியின் 'கடைசி நேர அலங்காரத்தினால்' நேரம் கொஞ்சம் பிந்திவிட்டது.

"எப்பத்தான் உங்கடை புறோகிறாம் நேரத்துக்குத் துவங்கியிருக்கு!" - இது மனைவி திலகா.
உண்மைதான். அந்த நேரம் பிந்துதலும், இந்த அலங்காரம் பிந்துதலும் ஒன்றாகப் பொருந்துமானால், ஒருவேளை நிகழ்ச்சி தொடங்கும் நேரத்திற்குப் போகலாம்.

மகள் வெளிக்கிட்டு, சலங்கை கட்டி ஹோலிற்குள் 'தை தை' என்று ஆடினாள். ஒன்பது வயது.
"யானை வந்தது, காட்டு யானை வந்தது
தும்பிக்கையை ஆட்டி ஆட்டி யானை வந்தது"

என்னால் கார் வேகமாக ஓட முடியாது. முள்ளந்தண்டுப் பிரச்சினை. சீற்றில் இருப்பதுவும் கஸ்டம். விழா நடக்குமிடத்துக்கு நாங்கள் சென்றடைந்த போது மணி ஆறு முப்பது. காரை நிறுத்துவதற்கு இடம் இல்லாமலிருந்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஒருமாதிரி தெருவில் இருந்த பஸ் தரிப்பு நிலையத்திற்கு சமீபமாக ஒரு குறுகலான இடம் கிடைத்துக் கொண்டது. மட்டுமட்டாக கோட்டைத் தழுவி நின்றது கார். றைவர் சீற்றிலிருந்து இறங்கும்போது வளையத்தையும் தூக்கிக் கொண்டேன். காற்று ஊதப்பட்ட வளையம், கார் குதித்துக் குதித்து ஓடும்போது 'சொக் அப்ஸோவ'ராகும். றைவர் சீற்றிற்குப் பக்கமாகவிருந்த சீற்றை சரித்துக் கொண்டு, நீட்டி நிமிர்ந்து கொண்டால் சுகமாக இருக்கும். மனைவியும் மகளும் இறங்கிக் கொண்டனர்.

"அப்பா! என்ர புறோகிறாம் இன்ரேவலுக்குப் பிறகுதான். வந்து எழும்பி நிண்டெண்டாலும்பாருங்கோ" போகும்போது மகள் சொல்லிவிட்டுப் போனாள்.
கொஞ்ச நேரத்தில் காரின் சூடு தணிந்து குளிர் பரவத் தொடங்கியது. தெருவிளக்குகள் அழுது வடிந்தன. ஒருசிலர் சோடிகளாகவும் தனித்தும் நடை பழகிக் கொண்டிருந்தனர்.
'இஞ்சை நடுச்சாமத்திலையும் அடை மழைக்கை குடையும் பிடிச்சுக் கொண்டு ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டு போவார்கள்.'

திடீரென்று ஒரு கார் பிறேக் போட்டு பக்கத்தில் வந்து நின்றது. அந்தக் கிரீச்சிட்ட சத்தம் இரவு நேரமாதலால் பயத்தை உண்டு பண்ணியது. யாராவது இளவட்டங்களாக இருக்கலாம். என்ன அவசரமோ? அது முன்னேறி பஸ் தரிப்பு நிலையமான - பிறை போல் வாரிவிட்ட நிலப்பகுதியை நோக்கி மெதுவாக ஊர்ந்து மையம் கொண்டது. ஒருவரும் அதிலிருந்து இறங்குவதாகத் தெரியவில்லை. மர்மமாக நின்றது. கள்ளர் காடையராகக்கூட இருக்கலாம். ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு இருந்த வேளையில், கார் பின்புறமாக நகரத் தொடங்கி வேகம் எடுத்தது. அப்படி ஒரு 'றிவேர்ஸ்' எடுப்பை நான் என் வாழ்நாளில் கண்டதில்லை. நான் துலைந்தேன் என்று நினைப்பதற்கு முன், அது ஒரு மோதலுடன் முடிவுக்கு வந்தது. மனம் மூளைக்கு அனுப்பிய தந்தி போய்ச் சேருவதற்குள் அது நடந்துவிட்டது. காலதாமதமாகவே 'ஹோனை' அழுத்தினேன்.

அங்கு என்னுடைய காரை விடவே இடம் போதாமலிருந்தது. அப்படி ஒரு மோதுகை நடவாதது போல, கார் முன்னேறி தரித்து நின்றது. காரிலிருந்து ஒரு பெண் இறங்கி வந்தாள். தனது காரின் பின்புறத்தைக் குனிந்து பார்த்தாள். என்னுடைய காரின் முன்புறத்தைப் பார்க்கும் எண்ணம் அவளிடம் இல்லை. அதை நான்தானே  பார்க்க வேண்டும். ஏதோ 'பக் பக்' என்று கத்திக் கொண்டு தனது காரை நோக்கி நடந்தாள்.

காரிலிருந்து வாட்டசாட்டமான, வண்டியும் தொந்தியுமான, கன்னங்கரிய நிறத்திலான ஒரு வயது முதிர்ந்தவர் இறங்கினார். அவளின் கையைக் கோர்த்துக் கொண்டார். அவளும் லாவகமாக தனது கையை நீட்டிக் கொண்டாள். குளிரின் கூதலுக்கு இதமாக கைகளை விசுக்கிக் கொண்டே இருவரும் எனது காரை நோக்கி வந்தார்கள். அவர் தனது காரையும் பார்க்கவில்லை, எனது காரையும் பார்க்கவில்லை. எனது காரின் ஜன்னலில் ஒரு தட்டுத் தட்டினார். மெதுவாக ஜன்னலைப் பதித்துக் கொண்டேன். அந்த நீக்கலுக்குள்ளால் தனது 'விசிற்றிங் கார்ட்டை' உள்ளே தள்ளினார்.

"தம்பீ! ஏதாவது 'டமேஜ்' எண்டால் நாளைக்குக் காலமை எனக்கு ஒரு 'போன்' எடும்."
மன்னிப்புக் கேட்கவில்லை. எனது மறுமொழியை எதிர்பார்க்கவில்லை. கைகளை மறுபடியும் கோர்த்துக் கொண்டே விரைவாக நடந்து போனார்கள்.

அவர்கள் பார்வைக்கு மறைந்த பின்னர், மெதுவாக காரிலிருந்து இறங்கி காரின் முன்புறத்தைப் பார்த்தேன். சாதுவான நெளிவு. அவர்களின் காரின் பின்புறம் கூடுதலாக நொருங்கியிருந்தது. திரும்பவும் காரிற்குள் புகுந்து கொண்டேன். 'விசிற்றிங் கார்ட்' கண் சிமிட்டியது.

பாலா பாலசிங்கம். அதன்பிறகு சிறீலங்காப் பட்டங்கள் அனுமான்வால் போல் நீண்டிருந்தன.  ராசா சிவராசா, சந்திரன் ரவிச்சந்திரன், பாலா பாலசிங்கம் - இப்ப பெயரை வைப்பதிலே இப்படி ஒரு புதுமை. இந்தப் பெயரை எங்கோ கேள்விப்பட்டதாக ஞாபகம். அன்றைய நிகழ்ச்சி நிரலைப் பார்த்தேன். அதில் ஒரு பேச்சாளராக அவர் பெயரும் இருந்தது.


புலம் பெயர்ந்த நாட்டில் தமிழ் பேசத்தான் போகிறது.

No comments:

Post a Comment