Sunday 24 August 2014

கேள்விகளால் ஆனது

சிட்னியின் புறநகர்ப் பகுதியில்தான் அந்த முதியோர் பராமரிப்பு இல்லம். அதன் பின்புறமிருந்த கார்த் தரிப்பிடத்தில் காரை நிற்பாட்டினேன். நண்பன் சிவத்தின் அம்மா நேசம் அங்குதான் இருக்கின்றார். அவரை அங்கு கொண்டுவந்து விட்டுப் போனதில் எனக்குப் பெருத்த சந்தேகம். தன்னைத்தானே கவனித்துக் கொண்டு, அடுத்தவருக்கு எந்தவித தொல்லையும் கொடுக்காமல் இருந்துவந்த அவரை - திடீரென்று யாருக்கும் சொல்லாமல் ஏன் அங்கு கொண்டுவந்து விட வேண்டும்? எதுவும் எப்பவும் நடக்கலாம் தான். ஆனாலும்?

அவரைப் பார்ப்பதற்காக சிவத்துடன் ஒரு தடவை இங்கே வந்திருக்கின்றேன். தனிய வருவது இதுதான் முதல் தடவை. கதவைத் தட்டிவிட்டு, சத்தம் ஒன்றும் உள்ளேயிருந்து வராததால் கதவை மெல்ல நீக்கிப் பார்த்தேன். ரெலிவிஷன் தன் பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. சாப்பாட்டு மேசையில் தலையைக் குப்புறக் கவிழ்ந்த வண்ணம் நேசம் இருந்தார். சாப்பாடு அப்படியே இருந்தது.

“அம்மா...மெதுவாகக் கூப்பிட்டேன். நான் எப்போதும் அவரை அம்மா என்றுதான் அழைப்பேன். அவர் தலையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு, “சிவம் வரவில்லையா?என்றார்.

“நான் வேலை விஷயமா இந்தப் பக்கம் வந்தனான். வந்தவிடத்திலை உங்களை ஒருக்கா பாத்திட்டுப் போகலாம் எண்டு வந்தனான்.

அவரின் முகம் திடீரென்று மலர்ந்தது. மெளனமாக என்னை உற்றுப் பார்த்தபடி இருந்தார். நான் அவருக்குப் பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்தேன்.

“அம்மா எப்படி இருக்கிறியள்?

“ஏன் எனக்கு என்ன குறை? எனக்கு மாறாட்டம் எண்டு சிவம் சொல்லியிருப்பானே!

Sunday 17 August 2014

வடு




சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, தற்செயலாகத்தான் அவரைக் கண்டேன். தன்னந் தனியாக ஒரு மேசையில் அமர்ந்திருந்தார். வழுக்கைத்தலை. வெள்ளை வெளேரென்ற ஆடைக்குள் புதைந்திருக்கும் தளர்ந்த உடல். முகத்தில்கூட சுருக்கங்கள் விழுந்து விட்டன. மூக்குக்கண்ணாடியினூடாக மேசையை உற்றுப் பார்த்தபடி இருந்தார்.

அவரை எங்கேயோ பார்த்திருப்பதாக மனம் சொன்னது.

வர்ணஜால விளக்குகளின்கீழ், வட்ட வட்ட ரேபிள்களில், ஆண்களும் பெண்களுமாக சுற்றிச் சூழ இருந்து உணவருந்தும் அந்த ரம்மியமான காட்சியிலிருந்து அவரது ரேபிள் வேறுபட்டுக் காணப்பட்டது. அவர் ஏன் அப்படித் தனித்துப் போனார்?

"அட தயாளன்! என்ன அவரையே உற்றுப் பார்த்தபடி இருக்கிறாய்? ஆர் எண்டு தெரியுதா?" என்றபடி குணசேகரன் என்னை நோக்கி வந்தான். குணசேகரன் மணப்பெண்ணின் அண்ணன். என்னுடன் பாடசாலையில் ஒன்றாகப் படித்தவன். அவனுக்காகத்தான் நான் கடல் கடந்து, அவுஸ்திரேலியாவில் இருந்து இங்கே வந்திருக்கின்றேன்.

"எங்கட இரத்தினசிங்கம் மாஸ்ரடா!"

இரத்தினசிங்கம் மாஸ்டர்!

ஒரு காலத்தில் எப்படிக் கொடிகட்டிப் பறந்தவர். அந்த ஒரு சம்பவத்தின் பின்பு, எல்லோருக்கும் வேண்டாதவராகிப் போய் விட்டார்.

Sunday 10 August 2014

கங்காருப் பாய்ச்சல்கள் (-3)

யார்? யாருக்கு? எப்பொழுதிருந்து?

அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் வீட்டிற்குக் குடிபுகும்போது, குருக்கள் அல்லது ஐயரைக் கொண்டு வீட்டிற்கு சாந்தி செய்வது வழக்கமாகிவிட்டது. புதிதாகக் கட்டப்பட்ட மாடமாளிகை என்றால் என்ன, அல்லது முப்பது நாற்பது வருடப் பழமை வாய்ந்த ஒடிந்து விழும் வீடு என்றால் என்ன இது பொருந்தும்.

அனேகமான குருக்கள்மாருக்கு நாங்களே சாந்தி செய்வதற்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் குடுத்து, அவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான கார் வசதியையும் செய்து கொடுக்க வேண்டும். இதற்கு விதிவிலக்காக ஒருசிலர் இருக்கின்றார்கள். தாங்களே சாந்திக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு தமது வாகனத்திலேயே தரிசனமாகிவிடுவார்கள். பிழைக்கத்தெரிந்த அவர்கள் வளைந்து கொடுக்கக்கூடியவர்களாகவும் உள்ளார்கள்.

விக்கல்



மெல்பேர்ணில் உள்ள தோமஸ்ரவுனில் (Thomastown) எனக்கொரு நண்பர் இருந்தார். பேரம்பலம் என்பது அவர் பெயர். இளைமைக்காலத்து நண்பர். வயது அறுபதைத் தாண்டிவிட்டது. அவரைவிட எனக்கு மூன்று வயதுகள்தான் குறைவு.

அவருக்கு லாட்டரிச்சீட்டு எடுப்பதில் அலாதிப்பிரியம். எப்பவாவது தனக்கு விழும் என்ற நம்பிக்கை உள்ளதாகச் சொல்லுவார். என்னுடன் முன்பு வேலை செய்யும்போது அப்பிடியெல்லாம் அவருக்கு நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை. மனைவி வந்த அதிஷ்டம், லாட்டரிச்சீட்டு எடுக்கின்றேன் என்பார். அவருடைய மனைவிக்கு விக்கல் வியாதி. அவ போகாத கோயில் இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. பேரம்பலத்தைக் கண்டதும் அவரிடம் ஏறிய விக்கல் எந்தவித மருந்து மாந்திரீகத்திற்கும் கட்டுப்படவில்லை.

லவ் லெட்டர்


ஸ்ரொப்....ஸ்ரொப்என்று சத்தமிட்டபடியே வேலிமறைவில் இருந்து சைக்கிளுக்கு முன்னால் குதித்தான் முகுந்தன்.

ஏற்கனவே கால் எட்டாமல் நொண்டி நொண்டி ஓடி வந்த உமா, செய்வதறியாது கால்களை நிலத்தினுள் ஊன்றி, கொஞ்ச தூரம் சைக்கிளுடன் இழுபட்டு புழுதியையும் கிழப்பி மூச்சிரைத்து நின்றாள்.

தெருவழியே போன நாய் ஒன்று சற்று மிரண்டு, நின்ற இடத்திலே நின்று அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தது.

“உமா! நான் உன்னை விரும்புகிறன். ஐ லவ் யு.                     
முகுந்தனை மேலிருந்து கீழ்வரை உற்றுப் பார்த்து, அதிசயித்து நாணித் தலை குனிந்தாள் உமா.

“என்ன ஒண்டும் பதில் சொல்லேல்ல.
“நான் ஸ்கூலுக்குப் போகவேணும். படிக்கவேணும்.
“ஆர் வேண்டாமெண்டது. படி. நல்லாப் படி!! போகேக்கை இதையும் எடுத்துக் கொண்டுபோய்ப் படி.
“என்னத்தை?
இந்த லெட்டரை!
“அப்பா ஏசுவார்!

அங்கு நின்ற பத்து நிமிடத்தில், குறைந்தது பத்துத் தடவைகளாவது ‘நான் ஸ்கூலுக்குப் போகவேணும். படிக்கவேணும்என்று சொல்லிவிட்டாள் உமா. கொஞ்ச நேரம் ஆளை ஆள் பார்த்தபடி இரண்டுபேரும் வியப்பில் நின்றார்கள்.

மூச்சுமுட்டும் தூரத்தில் நின்ற முகுந்தன் “மெளனம் சம்மதமா?என்றான். அவனை ஏமாற்றிவிட்டு ஓட்டமெடுத்தாள் உமா.

Sunday 3 August 2014

அந்தப் படம்?



பிறின்ஷி பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டாம் வருட மாணவிகளில் துடுக்கானவள். துள்ளலும் ஓயாத பேச்சும் 'அழகி' என்ற கர்வமும் கொண்ட அவளை அடக்க வேண்டும் என சிலர் விரும்பினார்கள். காலை விரிவுரைகள் ஆரம்பமாகி ஒருசில நிமிடங்களில் அவளின் பின்புற சட்டையில் 'அந்த'ப் படத்தை ஒட்டிவிட்டார்கள். ஒட்டும்போது அவளின் நெருங்கிய தோழிகள் கண்டுகொள்ளவே, கண்ஜாடை செய்து சொல்ல வேண்டாம் என தடுத்துவிட்டார்கள்.

அன்று முழுவதும் அதைச் சுமந்து கொண்டு திரிந்தாள் பிறின்ஷி. அவளின் தொங்கல் நடைக்கு ஏற்ப அதுவும் நடந்தது. அவளைக் கடந்து செல்பவர்கள், அவளைப் பார்த்து விநோதமாக சிரிப்பது போல இருந்தது பிறின்ஷிக்கு. ஆனாலும் அதன் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை. மதியம் கடந்து வந்த முதலாவது விரிவுரையின் போதுதான் தனது சட்டையில் ஒட்டியிருந்ததை அறிந்தாள் அவள். அப்போது நில அளவையியல் விரிவுரை ஆரம்பமாக இருந்தது. அந்த விரிவுரையை எடுப்பவர் எழுபது வயதைத் தாண்டிய முதியவர். தனிக்கட்டை. திருமணமே செய்து கொள்ளாதவர். அவரை நாங்கள் 'ஷேர்வேயின் தாத்தா' என்று அழைப்போம்.

Saturday 2 August 2014

கங்காருப் பாய்ச்சல்கள் (3)


தந்திரம்

2008 ஆம் ஆண்டு. இலக்கியவிழா ஒன்றில் புத்தகங்கள் விற்பனை செய்பவர்களுக்கு உதவியாக இருந்தேன். இன்னொரு  நாட்டு எழுத்தாளர் ஒருவரது புத்தகம் ஒன்றும் அங்கே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. எழுத்தாளர் வரவில்லை. மேசையில் மலை போல நிமிந்து இருந்தன அவை. மனதால் எண்ணிப் பார்த்து இருபது புத்தகங்கள் இருக்கு என்றேன் விற்பனைக்குப் பொறுப்பான நண்பரிடம். அவர் தனது காலால் கீழே தட்டிக் காட்டினார். அங்கே மேலும் ஐந்து பெட்டிகள் விற்பனைக்காகக் காத்திருந்தன. என்னையும் அறியாமல் சிரிப்பு வந்துவிட்டது. ஐந்து டொலர்கள் மட்டுமே அந்தப் புத்தகத்திற்குப் போடப்பட்டிருந்தது. நிறுத்து விற்றால்கூட ஐந்து டொலர்களுக்கு மேல் தேறும் அந்தப் புத்தகம்.

புத்தக விற்பனை எல்லாம் அமோகம் என்று நினைத்துவிடாதீர்கள்! விழாவிற்கு வருபவர்களே குறைவு. வருபவர்களும் மேசைமீது ஏதாவதைக் கண்டுவிட்டால், பாம்பைக் கண்டுவிட்டது போல அதை விலத்தித்தான் செல்கின்றார்கள். இடையிடையே ஒருவர் இருவரென வந்து புத்தகத்தை விசிறி போல விரித்துப் பார்ப்பதும், பின்னர் புத்தகத்திற்கு நோகாதவாறு பவுத்திரமாக மேசையில் வைப்பதுமாகவே  இருந்தார்கள்.

விழா முடிவதற்கு அரை மணித்தியாலங்கள். மூன்று நான்கு குடும்பத்தினர் அங்கே வந்தார்கள். சிறியவர்களும் பெரியவர்களுமாக பத்துப் பதினைந்து பேர்கள் மட்டில் இருந்தார்கள். அவர்கள் நேரே புத்தக மேசையடிக்கு வந்தார்கள். மேலே குறிப்பிட்ட அந்தப் புத்தகத்தை மாத்திரம் அவர்கள் கரிசனையுடன் வாங்கினார்கள். சிலர் ஐந்து புத்தகங்கள் கூட வாங்கினார்கள். நண்பர் கீழே இருந்த பெட்டிகளை உடைத்து அடுக்க அடுக்க, நான் விற்பனை செய்தேன். கண நேரத்தில் நாற்பது புத்தகங்கள் காலி. ஒரு சில நிமிடங்களில் எங்களைத் திக்குமுக்காடப் பண்ணிவிட்டர்கள் அவர்கள்.

Friday 1 August 2014

கொலையும் கூத்தும் - Flashbacks


அப்பொழுதெல்லாம் பாடசாலை விடுமுறைக்காலங்களில் கிளிநொச்சி சென்றுவிடுவோம். ஜெயந்திநகர், உருத்திரபுரத்தில் எனக்கொரு அக்கா முறையானவர் இருந்தார். அவர்களின் பிள்ளைகளும் எங்களின் வயதை ஒத்தவர்களாக இருந்தார்கள்.

பத்தாம் வகுப்பு படிப்பிற்குப் பின்னர்தான் தனியவெல்லாம் சுற்றித்திரிவதற்கு வீட்டில் அனுமதி கிடைத்தது. அதற்கு முன்னரெல்லாம் ஆராவது கிளிநொச்சி போனால் அவர்களுடன் கூடிக்கொண்டு போவேன்.

மாரிகால விடுமுறையில் போவதற்குத்தான் நல்ல விருப்பம். நீண்ட விடுமுறை.
அவர்களின் வீடு பெரியதொரு வளவில் இருந்தது. வளவின் முன்புறம் வீடு, பின்புறம் தென்ன்ந்தோட்டம். றோட்டிலிருந்து வீட்டிற்குப் போவதற்கு சிறியதொரு பாலம் மரத்தடிகளினால் கட்டப்பட்டிருந்தது. கீழே தண்ணீர் சலசலத்து ஓடியது. வீட்டிற்கு முன்பாகவும் பக்கத்திலும் நல்ல கறுத்தக்கொழும்பான் மாமரங்கள். ஒருமரத்தின் கீழே பென்னம்பெரிய மாடொன்று கட்டப்பட்டிருக்கும். பின்புற வளவில் ஒரு படலை இருந்த்து. அதன் மருங்கே அன்னாசிக்கன்றுகள். படலையைத் திறந்தால் இந்துமகாவித்தியாலயம், குருகுலம்.

சீவன் - கந்தர்வன் எழுதிய சிறுகதை

கந்தர்வன் சிறுகதை

கூழுப் பிள்ளைக்கு ஒரு வாரமாகவே மனது சரியாயில்லை. விரட்டி விரட்டி பார்த்தும் இந்த கிறுக்கு பிச்சைக்காரன் மறுபடி மறுபடி கோயிலடியில் வந்து படுத்துக் கொள்கிறான். நிற்கவே பயப்பட வேண்டும். அந்த இடத்தில் போய் இவன் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொள்கிறான்.
ஊருக்கு வெளியே அத்துவானமாய் பரவிக்கிடக்கிறது அந்த பொட்டல். நடுவில் ஆகாயத்திற்கு வளர்ந்த ஒற்றை அரசமரம். அதன் கீழ் ஆயுதபாணியாய் முனியசாமி சிலையும் அருகில் கடல் போல் கிடக்கும் ஊருணியின் நீரும் யாருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும்.

அந்த பெரிய பொட்டலுக்கு யாரும் ‘வேறு’ காரியங்களுக்கு சென்றதில்லை. எதற்காகவும் யாரும் அந்த அரசமரத்தின் ஒரு கொழுந்தைக்கூட பறித்ததில்லை. சாமி கண்ணெதிரே உள்ள பத்தடி நிலத்தில் யார் காலும் பட்டதில்லை. கைதான் படும்; எடுத்து நெற்றியில் பூச.

இந்த ஊரும் சுற்று வட்டாரங்களும் முனியசாமி மேல் எவ்வளவோ பயமும் பக்தியுமாயிருந்து வருவது இந்த கிறுக்கு பிச்சைக்காரனுக்கு புரிய மாட்டேனென்கிறது. சட்டை வேட்டியெல்லாம் கிழிந்து சீலைப்பேன் பத்திய பயல் பயமில்லாமல் அங்கே போய்ப் படுப்பதும் பொட்டலில் அங்கிங்கென்றில்லாமல் எங்கும் போவதும் வருவதும் நடக்ககூடியதில்லை. எல்லாம் இந்த இளவட்டபயல்கள் சேர்ந்து கொடுத்த இடம்.

ஒரு மாதத்திற்கு முன் எங்கேயோ கிடந்து இந்த ஊருக்கு வந்து சேர்ந்தான் கிறுக்கன். வெயில் வந்து வெகு நேரத்திற்கு பின் கோயிலடியிலிருந்து எழுந்து ஊருக்கு வருவான். அலுமினிய தட்டெடுத்து வீடு வீடாய் கஞ்சி கேட்பான்.